
பெற்றோரின் செல்போன்களை ஹேக் செய்து ஆபாச படங்களை பதிவிட்ட சிறுவன்.. காரணத்தை கேட்டு ஷாக் ஆன போலீஸ்!
ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு தம்பதியினர் தங்கள் செல்போன்களை யாரோ ஹேக் செய்துவிட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அந்த தம்பதியரின் செல்போனை ஹேக் செய்ததே அவரது 13 வயது மகன் தான் எனத் தெரியவந்துள்ளது.
முதலில் ஹேக்கர்கள் தன்னை மிரட்டி இப்படி செய்யச் சொன்னதாக கூறிய அந்தச் சிறுவன் பிறகு தானே, பெற்றோரை பிராங்க் செய்வதற்காக இப்படிச் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளான்.

தம்பதி புகார்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த தம்பதியினர் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் தங்கள் செல்போன்களை யாரோ ஹேக் செய்துவிட்டதாகவும், செல்போன் திரையில் விசித்திரமான அனிமேஷன்கள் தோன்றுவதாகவும் வீட்டில் ப்ளூடூத் போன்ற சாதனங்களை வைத்திருப்பதாகவும் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலிஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பெற்றோருக்கும், போலீசாருக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

13 வயது சிறுவன்
சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் அனைத்து சம்பவங்களுக்கும் அவர்களது மகன் தான் காரணம் எனக் கண்டறியப்பட்டது. ஆரம்ப கட்ட விசாரணையில் இதை ஒரு ஹேக்கர் சொல்லிச் செய்ததாகவும், இல்லாவிட்டால் பெற்றோரை கொன்றுவிடுவதாக அந்த ஹேக்கர் மிரட்டியதாகவும் அந்தச் சிறுவன் கூறியுள்ளான்.

பிராங்க்
அந்தச் சிறுவனிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியபோது பெற்றோரை பிராங்க் செய்வதற்காக, இப்படிச் செய்தது தெரியவந்தது. அந்தச் சிறுவன் தனது மாமாவின் செல்போனில் இருந்தே இந்தச் செயலில் ஈடுபட்டதும், இதற்கு அவனது மாமாவும் உடந்தையாக இருந்துள்ளதும் தெரியவந்தது.

ஹேக்கிங்
ஆன்லைன் கேமிற்கு அடிமையான அந்த 13 வயது சிறுவன், தனது மாமாவுக்கு சொந்தமான ஸ்மார்ட்போனில் இருந்து ஆபாச படங்களை அவரது பெற்றோரின் சமூக வலைதள கணக்குகளில் வெளியிட்டுள்ளான். மேலும், தனது பெற்றோரின் மொபைல் போன்களில் இருந்த அனைத்து தகவல்களையும் அழித்துள்ளான் என ஜெய்ப்பூர் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.