19 பணம் எண்ணும் மெசின்கள்... 180 கோடி ரூபாய் பறிமுதல் - வேட்டையில் சிக்கிய கான்பூர் தொழிலதிபர்
மலையாக குவிந்த பணத்தை எண்ணுவதற்கு 19 மெஷின்கள் கொண்டு வந்தும் எண்ண முடியாமல் திணறியிருக்கிறார்கள் ரெய்டுக்கு போன அதிகாரிகள். கடந்த 2 நாட்களாக 180 கோடி பணத்தை எண்ணி முடித்திருக்கின்றனர்.
கான்பூர்: பான் மசாலா மற்றும் வாசனை திரவியங்களை விற்பனை செய்யும் தொழிலதிபருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் இதுவரை 180 கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலையாக குவிந்த பணத்தை எண்ணுவதற்கு 19 மெஷின்கள் கொண்டு வந்தும் எண்ண முடியாமல் திணறியிருக்கிறார்
உத்தரபிரதேச மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் ஆளும் கட்சியான பாஜகவும் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியும் ஜெய்னுடன் தொடர்பு இருப்பதாக மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பியூஸ் ஜெயின். வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், பான் மசாலா, குட்கா தயாரிக்கும் தொழிற்சாலைகளை நடத்தி வருகிறார். தவிர, பெட்ரோல் நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள் என பல தொழில்களையும் செய்து வருகிறார். மத்திய கிழக்கு நாடுகளில் இரண்டு நிறுவனங்கள் உட்பட 40 நிதி நிறுவனங்களையும் இவர் நடத்தி வருகிறார்.

பல தொழில்கள் மூலம் சம்பாதித்த வருவாய்க்கு இவர் கணக்கு காட்டாமல், கோடி கோடியாக வரி ஏய்ப்பு செய்து வருகிறார் என மத்திய மறைமுக வரி ஏய்ப்பு தடுப்பு மற்றும் சுங்க வாரியத்திற்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் உத்தர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பியூஸ் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அள்ள அள்ளச் புதையல் போல பணக்கட்டுகள் வந்து விழ, முதலில் ஒரு பணம் எண்ணும் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. அதுவும் போதாததால், மேலும் 3 எந்திரங்களை கொண்டு பணம் எண்ணப்பட்டது. மொத்தம் 19 பணம் எணணும் மிசின்கள் கொண்டு வரப்பட்டு பணம் எண்ணப்பட்டது.
இதுவரை 180 கோடி எண்ணி முடித்திருக்கிறார்கள். பணமூட்டைகள் மலைபோல குவிந்துள்ளதால் அதிகாரிகள் திணறிப் போயிருக்கிறார்கள். தவிர ஜிஎஸ்டி வரி செலுத்தியதற்கான போலியான ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், விலை உயர்ந்த கார் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தங்கள் துறை வரலாற்றிலேயே மிகப்பெரிய பறிமுதல் இதுதான் என்கிறார் மத்திய மறைமுக வரி வாரியத்தின் தலைவர் விவேக் ஜோஹ்ரி. அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்களின் படி கான்பூரில் சோதனை புதன்கிழமை சோதனை நடத்தப்பட்டது. கான்பூரில் உள்ள திருமூர்த்தி ஃப்ரேக்ரன்ஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற சிகர் பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் தொழிற்சாலை, அலுவலகம் மற்றும் குடோன்களில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசனை திரவியத்திற்கு தேவையான மூலப்பொருட்களை வழங்கும் ஒடேச்சம் தொழிற்சாலையின் கூட்டாளிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பேப்பரில் சுற்றிவைக்கப்பட்ட பணம் கண்டுபிடிக்கப்பட்டது. கான்பூர் எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் இந்த பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு 180 கோடியை தாண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை இந்த பணம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்வாய்ஸ் மற்றும் இ-வே பில்கள் இல்லாத நான்கு ட்ரக்குகளை அதிகாரிகள் அந்த தொழிற்சாலையின் வெளியே கைப்பற்றியுள்ளனர்.தொழிற்சாலை வளாகத்தில், பௌதிக கையிருப்பின் போது, முடிக்கப்பட்ட பொருட்கள் இரகசியமாக அகற்றப்பட்டதால், மூலப்பொருட்கள் மற்றும் முடிக்கப்பட்ட பொருட்களின் பற்றாக்குறை கவனிக்கப்பட்டது. நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர் ஜிஎஸ்டி இல்லாமல் பொருட்களை அனுமதித்ததை ஒப்புக்கொண்டார் என்றும் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி, எதிர்க்கட்சியினர் ஊழல்வாதிகள் மற்றும் குண்டர்களிடம் இருந்து உதவியை பெறுகிறது என்று குற்றம் சாட்டினார். சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த நெருங்கிய நபர்களின் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் ஐ.டி. மற்றும் அமலாக்கத்துறையினரின் சோதனை நடத்தப்படுகிறது. கோடிக் கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்கள் ஊழல் மூலம் கணக்கில் வராத சொத்துக்களை குவித்துள்ளனர். இப்போது தேர்தல் வருவதால், அவர்கள் தங்கள் லாக்கர்களைத் திறக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
கான்பூர் தொழிலதிபர் வீட்டில் கைப்பற்றிய பணம் பாஜகவின் பங்கில் ஒரு பகுதி சமாஜ்வாதிக்கும் பாஜகவின் இந்த நண்பருக்கும் அவரது வாசனை திரவியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான அனுராக் பதௌரியா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications