ஓகி புயலில் சிக்கிய 433 தமிழக மீனவர்கள் உட்பட 619 பேர் மாயம்- மத்தியஅரசு
டெல்லி: ஓகி புயலில் சிக்கி 433 தமிழக மீனவர்கள், கேரளாவின் 186 மீனவர்கள் என மொத்தம் 619 பேர் மாயமாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் கேரளாவை கடந்த மாதம் ஓகி புயல் மிக மோசமாக தாக்கியது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை ஓகி புயல் உருக்குலைத்துப் போட்டது.

அப்போது மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நிலைமை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. நிச்சயம் மீனவர்கள் பெருமளவில் மாயமாகி இருப்பார்கள் என கூறப்பட்டு வருகிறது.
கேரளா அரசு இதுவரை 60 மீனவர்கள் உயிரிழந்து உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் தமிழக 600-க்கும் அதிகமான மீனவர்கள் கரை திரும்பவில்லை என கூறி வந்தது.
தற்போது மத்திய அரசு தமிழகத்தின் 433, கேரளாவின் 186 மீனவர்கள் மாயமாகி உள்ளதாக அறிவித்துள்ளது. காணாமல் போன மீனவர்கள் தொடர்பாக வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.