இந்தியாவில் தினமும் 93 பெண்கள் பலாத்காரம்… தமிழகத்தில் 3 பேர்!
சென்னை: இந்தியாவில் தினமும் 93 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் தினமும் பாலியல் பலாத்காரம் குறித்த செய்திகளை பார்க்க முடிகிறது.
இந்நிலையில் தேசிய குற்ற ஆவண காப்பகம் பாலியல் பலாத்காரங்கள் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதிகரிப்பு
2012ம் ஆண்டில் 24 ஆயிரத்து 923 பெண்கள் இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 707 ஆக 2013ம் ஆண்டில் அதிகரித்துள்ளது.

டெல்லி
நாட்டில் டெல்லி தான் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரமாம். 2012ம் ஆண்டில் டெல்லியில் 585 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2013ல் இரண்டு மடங்காக அதாவது 1, 441 ஆக அதிகரித்துள்ளது.

மும்பை
டெல்லியை அடுத்து மும்பை(391), ஜெய்பூர்(192), புனே(171) உள்ளிட்ட நகரங்கள் பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல.

மத்திய பிரேதசம்
2013ம் ஆண்டில் நாட்டிலேயே மத்திய பிரதேசத்தில் தான் அதிகமான பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் மத்திய பிரதேசத்தில் 4 ஆயிரத்து 335 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான்
மத்திய பிரதேசத்தை அடுத்து ராஜஸ்தான்(3285), மகாராஷ்டிரா(3063), உத்தர பிரதேசத்தில்(3050) அதிகமான பெண்கள் கடந்த ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம்
தமிழகத்தில் கடந்த ஆண்டு 923 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது நாள் ஒன்றுக்கு 3 பலாத்காரங்கள் நடந்துள்ளன.

தெரிந்தவர்கள்
பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்கள், பெற்றோர், உறவினர்களால் தான் அவ்வாறு செய்யப்பட்டுள்ளனர். 31 ஆயிரத்து 807 பெண்கள் கடந்த ஆண்டில் தெரிந்தவர்களால் தான் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

வயது
பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களில் 18 முதல் 30 வயதுக்குள் உள்ளவர்கள் 15 ஆயிரத்து 556 பேரும், 14 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 8 ஆயிரத்து 877 பேரும் அடக்கம்.