மின்சாரம், குடிநீர் வசதி இல்லாத 'கருப்பு' கிராமம்! இதுதான் குஜராத் மாடலா? பல வருடமாக குமுறும் மக்கள்
காந்திநகர்: குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு இன்னமும் மின்சாரம் மற்றும் முறையான குடிநீர் வசதி கிடைக்காமல் இருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
நேற்று முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்திருந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரங்கள் தீவிரமடைந்து வருகின்றன. பிரசாரங்களில் 'குஜராத் மாடல்' என்பதைதான் பாஜக முன்னிறுத்தியுள்ளது.
இந்நிலையில், நர்மதா மாவட்டத்தின் 'பெபர்' கிராமம் உரிய அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருவது பேசுபொருளாகியுள்ளது. இனி வரும் அரசாவது தங்கள் கிராமத்தின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டுமென அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருப்பு கிராமம்
இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டுமெனில் அதற்கு முறையான சாலை வசதிகள் கூட கிடையாது. இது குறித்து கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், "கிராமத்திற்கு 10 கி.மீ முன்னதாகவே எல்லா நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் இங்கு சாலைகள் அவ்வளவு குண்டும் குழியுமாக இருக்கும். பைக்குகளில் வேண்டுமானால் கிராமத்திற்குள் செல்லாம். அதேபோல, மழை நாட்களில் உங்களால் இந்த சாலையை பயன்படுத்தவே முடியாது. அந்த அளவுக்கு சகதியாக இருக்கும். இதனால் எங்கள் கிராமத்திற்கு வரவேண்டிய பொருட்கள் எதுவும் உள்ளே வராது. வெளியில் உள்ள மற்றொரு கிராமத்தில்தான் எங்களுக்கான பொருட்கள் இறக்கி வைக்கப்படும்.

சாலை
இதுகூட பரவாயில்லை. ஆனால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டால் கிராமத்திலிருந்து மக்களை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கூட இங்கு வராது. பிரசவத்திற்கு நாங்கள் பெரும் அவதிப்பட வேண்டியதிருக்கும். பெரும்பாலான பிரசவங்கள் கிரமத்திலேயேதான் நடந்திருக்கிறது. இதில் சில நேரம் குழந்தைகள் இறந்துவிடும். சில நேரம் தாய்மார்கள் இறந்துவிடுவார்கள். எப்போதாவது இருவரும் உயிரிழக்கும் சம்பவம் கூட நடந்திருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் காரணம் இங்கு அடிப்படை வசதிகள் இல்லாததுதான். இங்குள்ள ஆளும் கட்சியினர் குஜராத் மாதிரி இந்தியாவில் வேறெங்குமே கிடையாது என்று சொல்வார்கள். ஆனால், இங்கு இப்படியும் ஒரு கிராமம் இருக்கிறது.

தண்ணீர்
கிராமத்தில்
அரசாங்கத்தால் சில கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த கழிப்பறைகளை பயன்படுத்த முடியாது. அந்த அளவுக்கு இவைகள் சேதமடைந்திருக்கும். எனவே நாங்கள் திறந்தவெளியில் மலம் கழிக்க கட்டாயப்படுத்தப்படுகிறோம். மருத்துவமனைகளை பொறுத்த அளவில் அது 24/7 மணிநேரமும் பூட்டியே கிடக்கிறது. மருத்துவர்கள் யாரும் இங்கு வருவதில்லை. பள்ளிகளை பொறுத்த அளவில் இங்கு ஒரேயொரு அரசு பள்ளி இருக்கிறது. அதுவும் இது தொடக்கப் பள்ளிதான். இப்பள்ளியில் 90 மாணவர்கள் பயில்கின்றனர். ஆனால் இந்த மாணவர்களுக்கு மொத்தமாக 2 ஆசிரியர்கள்தான் இருக்கின்றனர். அதேபோல 'நல் ஜால் யோஜனா' திட்டத்தின் கீழ் இங்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதிலிருந்து தண்ணீர் வருவதில்லை.

கல்வி/மின்சாரம்
மின்சாரத்தை பொருத்த அளவில் அது எங்கள் விருந்தாளிகள். ஒரு ஆண்டில் 2 மாதங்கள் மட்டுமே இங்கு மின்சாரம் இருக்கும். மற்ற நேரங்களில் எங்கள் குழந்தைகள் கடுமையாக அவதிப்படுகின்றனர். கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் விடுமுறையளிக்கப்பட்டு ஆன்லைன் வழிக் கல்வி நடத்தப்பட்டது. ஆனால் நாங்கள் இங்கு மின்சாரம் இல்லாமல் கொசுக்களை அடித்துக்கொண்டிருந்தோம். தொடக்க கல்வியை பயின்ற மாணவர்கள் உயர் கல்வி பெற வேண்டும் எனில் இங்கிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள பள்ளிக்குதான் செல்ல வேண்டும். தொடக்க பள்ளியில் பயின்ற 90 மாணவர்களில் சரி பாதி பெண்கள் இருக்கின்றனர். ஆனால் 6ம் வகுப்பு படிக்கவே 15 கி.மீ செல்ல வேண்டும் என்பதால் இங்கிருந்து யாரும் செல்வதில்லை. இதுவரை வெறும் 3 மாணவிகள் மட்டுமே இவ்வாறு கல்வி பயில சென்றுள்ளனர்" என்று கூறியுள்ளனர்.

பல கிராமங்கள்
இந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவி பாஜகவை சேர்ந்தவராவார். ஆனால் இது குறித்து அவர் பேட்டியளிக்கவில்லை. மாறாக அவரது உறவினர் ஒருவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், "சாலை விரைவில் போடப்பட இருக்கிறது" என்று கூறினார். மின்சாரம், குடிநீர் குறித்து கேட்டதற்கு தெளிவாக எந்த பதிலையும் அவர் கூறவில்லை. இது நர்மதா மாவட்டத்தில் உள்ள 'பெபர்' என்கிற ஒரு கிராமத்தின் கதை மட்டுமன்று எனவும், பல கிராமங்கள் இவ்வாறுதான் இருப்பதாகவும் தனியார் செய்தி ஊடகம் குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications