பெங்களூர் பள்ளி மாணவி பலாத்கார வழக்கு: பள்ளி நிறுவனருக்கு நிபந்தனை ஜாமீன்
பெங்களூர்: பள்ளி வளாகத்தில் ஆறுவயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளியின் நிறுவனர் ருஸ்டம் கேரவாலா நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூர் மாரத்தஹள்ளியிலுள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் 6 வயதான 1ம் வகுப்பு மாணவி, ஸ்கேட்டிங் பயிற்சி ஆசிரியர் முஸ்தபா என்பவரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவரது லேப்டாப்பில் சிறுமிகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதற்கு முன்பு இதே ஆசிரியர், ஒயிட்பீல்டிலுள்ள மற்றொரு பள்ளியிலும் மாணவிகளிடம் சில்மிஷம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. தகுந்த விசாரணையின்றி ஆசிரியர்களை நியமித்த பள்ளிக்கு எதிராக போராட்டம் வெடித்தது.
இந்நிலையில் மும்பை அருகே டையு டாமன் யூனியன் பிரதேசத்தில், பள்ளியின் நிறுவனர் ருஸ்டம் கேரவாலா இருப்பதாக தகவல் அறிந்த பெங்களூர் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். பலாத்காரங்களில் இருந்து சிறுமிகளை காப்பாற்றும் (posco) சட்டத்தின் 21வது பிரிவு, இந்திய தண்டனை சட்டத்தின் 201வது பிரிவு (போலீசாருக்கு சரியான தகவலை அளிக்காதது), மற்றும் சிறார் பாதுகாப்பு சட்டம் பிரிவு-23 ஆகியவற்றின்கீழ் பள்ளி தலைவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூர் கோரமங்களாவிலுள்ள கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி சதானந்த கலல் வீட்டுக்கு ருஸ்டம் கேரவாலா அழைத்துச் செல்லப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். ருஸ்டம் கேரவாலா தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. போலீஸ் தரப்பில் தங்கள் காவலுக்கு அளிக்குமாறு கேட்கப்பட்டது. இருதரப்பு கோரிக்கைகளையும் கேட்டறிந்த நீதிபதி, ருஸ்டம் கேரவாலாவுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். பெங்களூரை விட்டு எங்கும் வெளியே போகக்கூடாது. சாட்சியங்களை கலைக்க கூடாது என்பது அந்த நிபந்தனை.