For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.வின் தோழி சசிகலா குவித்த சொத்துக்கள்... பவானிசிங் வெளியிட்ட பரபரப்பு சாட்சியங்கள்

Google Oneindia Tamil News

பெங்களூர்: முதல்வர் ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தி அவரது தோழி சசிகலாவும், உறவினர்களும் குவித்த சொத்துக்கள் குறித்து பல்வேறு சாட்சிகள் அளித்த சாட்சியங்களை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீதிபதியிடம் வெளியிட்டார்.

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

Bhavani Singh lists out 13 witnesses' statements in Bangalore court

13வது நாளாக நடந்த இந்த விசாரணையின்போது பல்வேறு சாட்சிகளின் சாட்சியங்களை ஒவ்வொன்றாக படித்த அவர், அவற்றின் அடிப்படையில் தனது வாதத்தில் சிலரின் சாட்சியங்களை வெளியிட்டார்.

அவை குறித்த விவரம்:

சுப்பிரமணியம் சாமி

கடந்த 1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, மாதம் ரூ. 1 மட்டுமே சம்பளமாக பெற்றார். ஆனால், தனது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். ஜெயலலிதாவின் அதிகாரத்தை பயன்படுத்தி அவரது தோழி சசிகலா உள்ளிட்ட அவரது உறவினர்கள் பல இடங்களில் நிலம், கட்டிடம் உள்பட ஏராளமான சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாக சென்னை முதன்மை நீதிமன்றத்தில் 14.6.1996 அன்று புகார் மனு கொடுத்தேன். நீதிமன்ற உத்தரவை ஏற்று அப்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் அதிகாரி லத்திகா சரண் விசாரணை நடத்தினார்.

ஆந்திரா வருவாய் துறை அதிகாரி சீனிவாசராவ்

ஆந்திர மாநிலத்தின் ஜடிமல்லா மற்றும் பசீராபாத் பகுதியில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில் 3 ஏக்கர் நிலத்தில் திராட்சை தோட்டம் அமைத்துள்ளார்.

தமிழக ஊரக வளர்ச்சி துறையின் மண்டல வளர்ச்சி அதிகாரி முகமது அசதுல்லாகான்

செங்கல்பட்டு தாலுகாவில் அதிகாரியாக பணியாற்றியபோது, திருப்போரூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுதாவூர் கிராமத்தில் உள்ள நிலத்தில் கட்டிட வரைபடத்திற்கு அனுமதி கோரி என்னிடம் விண்ணபிக்கப்பட்டது. நடராஜன் என்பவர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முக்கிய வி.ஐ.பி.கள் கட்டிடம் என்பதால், சசிகலா கொடுத்துள்ள விண்ணப்பத்தை ஏற்று உடனடியாக அனுமதி கொடுக்கும்படி அறிவுறுத்தினார். வேறு வழியில்லாமல் அனுமதி வழங்கினேன்.

இந்தியன் வங்கி தலைமை பொதுமேலாளர் ஆர்.கோவிந்தராஜன்

ராமராஜ் ஆக்ரோ பார்ம் நிறுவனத்திற்காக சுந்தர்ராஜன் என்பவர் வங்கியில் கணக்கு தொடங்கினார். கம்பெனிக்கு ரூ50 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்தார். விஐபிக்களின் நிறுவனம் என்று வலியுறுத்தியதால் பல தவணையாக 50 லட்சம் கடனாக வழங்கப்பட்டது.

இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் உதயசங்கர்

வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் வங்கி கணக்கில் இருந்து எங்கள் வங்கிக்கு ரூ. 2.15 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டது. ஒரே சமயத்தில் 11 காசோலைகள் மூலம் ரூ. 22 லட்சத்து 80 ஆயிரத்து 265 பரிமாற்றம் செய்யப்பட்டது.

ஐஏஎஸ் அதிகாரி ஜவஹர்

முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, அவரின் தனி செயலாளராக இருந்தேன். 995ம் ஆண்டு வி.என்.சுதாகரனுக்கு நடந்த திருமண நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத்தின் போது பிரதமர், சில மாநில முதல்வர்கள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், வி.ஐ.பிகளுக்கு எனது மேற்பார்வையில் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. நாதெள்ளா ஆஞ்சநேய செட்டி தங்க ஆபரண ஷோ ரூமில் இருந்து தங்க ஆபரணங்களும், 17 காரட் வைரக்கல் பதித்த ஆபரணமும் வாங்கப்பட்டது.

தமிழக அரசின் வருவாய் துறை அதிகாரி ஜெகநாதன்

நான் செங்கல்பட்டு தாலுகா தாசில்தாரராக இருந்தபோது சிறுதாவூர், கருங்குழிபள்ளம், பையனூர் ஆகிய கிராமங்களில் வழக்கில் 2,3 மற்றும் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்களுக்கு சொந்தமான நிலம் உள்ளது. சிறுதாவூர் கிராமத்தில் 18.63 ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் வாங்கியுள்ளனர். அந்த நிலத்தை ஒட்டியுள்ள 8.29 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து காம்பவுண்ட் சுவர் எழுப்பியுள்ளனர். கருங்குழிலி பள்ளம் என்ற கிராமத்தில் 6.57 ஏக்கர் நிலம் கிரையம் செய்துள்ளனர்.

பையனூர் கிராமத்தில்

அதையொட்டியுள்ள 2.75 ஹெக்டர் நிலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். பையனூர் கிராமத்தில் 11.89 ஏக்கர் நிலம் முறைப்படி உரிமையாளரிடம் வாங்கி பதிவு செய்தபின், அதையொட்டியுள்ள 1 ஹெக்டேர் அரசு தரிசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் எழுப்பியுள்ளனர். மூன்று கிராமங்களில் தனித்தனி சர்வே எண்ணில் இருந்த 50 ஏக்கர் புறம்போக்கு நிலம், 40 ஏக்கர் நத்தம் புறம்போக்கு நிலம் ஆகியவற்றை ஆக்ரமித்து காம்பவுண்ட் சுவர் எழுப்பியுள்ளனர்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி லத்திகா சரண்

நான் தமிழக லஞ்ச- ஒழிப்பு துறையில் உயரதிகாரியாக இருந்தபோது, சுப்பிரமணியம் சாமி கொடுத்த புகாரின் பேரில் லஞ்ச-ஒழிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தேன். பின் ஜெயலலிதா, சசிகலா உள்பட சிலரிடம் விசாரணை நடத்தும்படி எனது துறையில் பணியாற்றிய போலீஸ் அதிகாரி நல்லம்மா நாயுடுவிடம் ஒப்படைத்தேன்.

தமிழக லஞ்ச-ஒழிப்பு துறை அதிகாரி வி.சி.பெருமாள்

எங்கள் துறையில் உயரதிகாரிகள் பிறப்பித்த உத்தரவின் பேரிலும், சென்னை முதன்மை நீதிமன்றம் வழங்கிய அனுமதியின் பேரிலும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர்களின் வீடு, அலுவலகம், கம்பெனி உள்பட பல இடங்களில் சோதனை நடத்தினோம். அதில், வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்துள்ளதற்கான ஆவணங்கள் கிடைத்தது. அதை தொடர்ந்து, 18.9.1996 அன்று எப்ஐஆர் பதிவு செய்தோம்.

லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ஜெகநாதன்

உயரதிகாரிகள் லத்திகா சரண் மற்றும் நல்லம்மா நாயுடு ஆகியோரின் உத்தரவின் பேரில், வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள வி.என்.சுதாகரன் திருமணம் தொடர்பாக பல வீடுகளில் விசாரணை நடத்தினோம். மேலும், குற்றவாளிகள் சொத்து சேர்த்துள்ளது தொடர்பாக ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி, நீலாங்கரை, சிறுதாவூர், பையனூர் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தி சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஐபிஎஸ் அதிகாரி கிருஷ்ணராஜ்

விசாரணை அதிகாரி நல்லம்மாநாயுடு உத்தரவின் பேரில் ஆந்திர மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஜிடிமெல்லா, பசீராபாத் ஆகிய கிராமங்களுக்கு சென்று அங்குள்ள திராட்சை தோட் டம், பண்ணை வீடுகளிலும், சென்னையில் உள்ள மகாசுப்புலட்சுமி திருமண மண்டபத்தில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை போலீஸ் இணைகமிஷனர் விஸ்வநாதன்

வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனம் சென்னையில் வசிக்கும் வீட்டில் சோதனை நடத்தி சில ஆவணங்கள் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஜெகநாதன்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம், மீராள்குளம், வெட்டிகுளம், ராமானுஜபுரம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளிலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள பனங்குடி, மேலபாளையம், ஆழ்வார்திருநகரி, புதுக்குடி, பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் சென்று விசாரணை நடத்தினோம்.

தமிழக தொழில் முதலீட்டு கழக முதன்மை அதிகாரி சோமசுந்தரம்

தமிழக-லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி நல்லம்மாநாயுடு உத்தரவின் பேரில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிறுதாவூர், பையனூர் பங்களாக்களை பார்வையிட்டோம். பல கட்டிடங்கள் முழுமையாக கட்டி முடிக்காத நிலையில் இருந்தது. பல அறைகள், கிரானைட் கற்கள் பதித்த தரைதளம், விலை உயர்ந்த மரங்களால் உருவாக்கப்பட்ட கதவு, ஜன்னல்கள் இருந்தது. சிறுதாவூர் பங்களா வளாகத்தில் வெள்ளை நிறத்தில் அசோக்லேலாண்டு நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்ட சொசுகு பஸ் இருந்தது.

இதுவரை 258 சாட்சியங்கள்

சொத்து குவிப்பு வழக்கில் இதுவரை 258 அரசு தரப்பு சாட்சிகள் முடிக்கப்பட்டுள்ளது. இறுதியாக விசாரணை அதிகாரி நல்லம்மாநாயுடு அளித்துள்ள சாட்சியம் மட்டுமே பாக்கியுள்ளது. இன்று அதை பவானிசிங் எடுத்து வைப்பார் என்று தெரிகிறது.

English summary
Special PP Bhavani Singh has listed out the testimonialas of the 13 witnesses in Bangalore court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X