For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருப்பு பணம் மீட்பு, சட்டத்துறை சீர்திருத்தம்- நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் சட்டத்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்; கருப்பு பணம் மீட்புக்கும் மத்திய அரசு முன்னுரிமை கொடுக்கும் என்று என்று நாடாளுமன்றத்தின் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி இன்று முதல் மார்ச் 20-ந் தேதி வரையிலும் 2வது பகுதி ஏப்ரல் 20-ந் தேதி தொடங்கி மே 8-ந் தேதி வரையும் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் வரும் 26-ந் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதையடுத்து 28-ந் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. நடப்பு ஆண்டின் முதலாவது கூட்டத் தொடர் என்பதால் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை ஆற்றினார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தமது உரையில் கூறியதாவது:

Budget Session of Parliament to start with President's address

நாட்டின் அடிமட்டத்தில் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கும் நலம் பயக்கும் வகையில் வளர்ச்சி காண்பதே இந்த அரசின் நோக்கம்

வளர்ச்சித் திட்டங்கள் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைய வேண்டும் என்பதிலும் அரசு உறுதியாக இருக்கிறது. அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இளைஞர்களின் சக்தியை பயன்படுத்திக்கொள்ள திறன் மேம்பாட்டிற்கான தனி கொள்கை திட்டத்தை அரசு வகுத்துள்ளது. நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்க புதிய தொழில் நுட்பம் அறிமுகம் செய்யப்படும். 100 நாள் வேலைத்திட்டம் கிராமப்புற வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. மிகவும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஏழை மக்களுக்காகவும் இந்த அரசு உழைக்கும்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்க நிதி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். தூய்மை இந்தியா திட்டம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்களது நிதியில் 50 சதவீதத்தை தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஒதுக்க வேண்டும்.

அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் வீட்டுக்கடன் வழங்குவதில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் சட்டம், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. போதை பொருளுக்கு அடிமையானவர்களை மீட்க சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும். பெண் கல்விக்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய நேரடி மானிய திட்டமாக சமையல் எரிவாயு மானிய திட்டம் உள்ளது. ஆகஸ்ட் 15-ந் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் கழிவறை கட்டப்படும். தூய்மை இந்தியா திட்டத்துக்காக எம்.பி.க்கள் தங்களது நிதியில் 50% வழங்க வேண்டும்.

அன்னிய முதலீட்டை ஊக்கப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. குறைந்தவட்டியில் விவசாயிகளுக்கு கடன் கிடைப்பதை அரசு உறுதி செய்யும்.

விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விளைபொருட்களுக்கான கட்டுப்படியான விலையை அரசு உறுதி செய்யும்.

நீதிபதிகள் நியமனக் குழு உள்ளிட்ட சட்டத்துறை சீர்திருத்தங்களை இந்த அரசு மேற்கொண்டுள்ளது. இதுவரை 1,741 சட்டங்கள் தேவையற்றவை என கண்டறியப்பட்டுள்ளன.

ஆசிரியர்களது திறனை மேம்படுத்த 'மாளவியா' பெயரில் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. நாட்டில் புதிய தொழில்கள் தொடங்குவதை எளிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில் உரிமங்களை ஆன்லைனில் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பழைய திட்டக் கமிஷனுக்கு பதிலாக நிதி ஆயோக் அமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

வெளிநாட்டு முதலீடுகளின் உதவியுடன் நாட்டின் மின் உற்பத்தி அதிகரிக்கப்படும். அணு உலைகள் மூலமான மின்சார உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேசிய நதி நீர் இணைப்புத் திட்டங்களை உரிய ஆலோசனையின் பேரில் நிறைவேற்ற அரசு முனைப்புடன் உள்ளது. இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.17 வரை குறைக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் இடம்பெயர்ந்த 60 ஆயிரம் பண்டிட்டுகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும். நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.4% என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருவது இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல முன்மாதிரியாகும்.

தேசிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் இறுதி வடிவம் பெற்றுள்ளது. விரைவில் ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கும் பணி தொடங்கும்.

புதிய வேலை வாய்ப்பை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்தும். வரி வசூலிக்கும் முறையை சீர்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மாநிலங்களின் வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்களை போக்குவரத்து மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

2020-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் வங்கிக் கணக்கை தொடங்கும் 'ஜன் தன்' திட்டம் 100% எட்டவுள்ளது. 6 மாத காலத்தில் இது சாத்தியமாகியுள்ளது.

திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்கான துறை ஒன்றை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஏராளமானோர் பயன் பெறுவர்.

விண்வெளித்துறையிலும் இந்தியா சாதனை படைத்து வருகிறது. ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் இந்தியாவுக்கான இடம் உறுதி செய்யப்படும்.

அண்டை நாடுகளுடன் நல்லுறவை இந்தியா மேற்கொள்ளும். சார்க் நாடுகளுக்கான செயற்கைக் கோளை இந்தியா விண்ணில் செலுத்தும்.

இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தமது உரையில் தெரிவித்தார்.

அனைத்து கட்சியினருடன் ஆலோசனை

முன்னதாக பட்ஜெட் தொடரை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர்களை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று சந்தித்து பேசினார். நாடாளு மன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பெரும்பாலும் அமளி நிலவியது. இதனால் மத்திய அரசால், அவசர சட்ட மாற்று மசோதாக்கள் பலவற்றை ராஜ்யசபாவில் நிறைவேற்ற முடியவில்லை.

மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று சந்தித்து பேசினார். அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க அரச தயாராக உள்ளதாகவும், அவசர சட்ட மாற்று மசோதாக்கள் பலவற்றை ராஜ்யசபாவில் நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார்.

அதன்பின் நாடாளுமன்றத்தின் இரு சபைகளில் உள்ள அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டினார். இதில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார். பட்ஜெட் கூட்டத் தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார்.

இருப்பினும் மத்திய அரசின் அவசர சட்டங்கள், பட்ஜெட் மற்றும் அரசின் ஆவணங்கள் திருட்டு விவகாரம், இலங்கை தமிழர் பிரச்சனை உள்ளிட்டவற்றை முன்வைத்து இக்கூட்டத் தொடரும் அமளிக்காடாக இருக்கலாம் என்றே தெரிகிறது.

English summary
The budget session of Parliament will be beginning on Monday with President Pranab Mukherjee's address to members of both the houses of Parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X