For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக பயணிகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த கர்நாடகா!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: நடுவர் மன்ற உத்தரவுப்படி, ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய சுமார் 50 டிஎம்சி தண்ணீரை திறக்க உத்தரவிடுங்கள், என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த மாதம் 2ம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த தனது முதல் உத்தரவில், அடுத்த 10 நாட்களுக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்த போதிலும், உச்சநீதிமன்ற உத்தரவை மீற முடியாது என்பதால் தண்ணீரை திறந்துவிட்டது. இதற்கு கர்நாடகா முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மாநில அரசின் ஆசியோடு செப்டம்பர் 9ம் தேதி கர்நாடகா முழுக்க பந்த் நடைபெற்றது. அன்று முதல் இன்று காலை வரை தமிழக அரசு பஸ்கள் எதுவுமே கர்நாடகாவிற்குள் செல்லவில்லை.

பெங்களூர் செல்ல வேண்டிய பஸ்கள் ஒசூர் எல்லையிலேயே நிறுத்தப்பட்டதால் அரசு பஸ்களை பயன்படுத்தி பெங்களூருக்கு வர முடியாமல் ஏழை, நடுத்தர மக்கள் அவதிப்பட்டனர்.

பரிதாப மக்கள்

பரிதாப மக்கள்

இரு மாநில எல்லையில் 2 கி.மீ தூரம் பரிதாபமாக நடந்து கர்நாடக எல்லைக்குள் சென்று உள்ளூர் பஸ்கள் மூலம் பெங்களூர் நகருக்குள் சென்றனர். இந்நிலையில், 12ம் தேதி உச்சநீதிமன்றம் மற்றொரு உத்தரவை பிறப்பித்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீரை திறக்கச் சொல்லியது. இதையடுத்து பெங்களூரில் வன்முறை வெறியாட்டம் நடைபெற்றது. தமிழக பதிவெண் லாரிகள் தேடி தேடி தீக்கிரையாக்கப்பட்டன.

கல்வீச்சுகள்

கல்வீச்சுகள்

இதையடுத்து தமிழக பதிவெண் கார்கள், ஒசூர் எல்லையை தாண்டி கர்நாடகாவிற்குள் நுழைய இரு மாநில போலீசாரும் அனுமதி மறுத்துவிட்டனர். தமிழக பதிவெண் கொண்ட தனியார் பஸ்களும் கூட இயக்கப்படவில்லை. இரு மாநிலங்களிலும் பிற மாநில வாகனங்கள் மீது கல்வீசப்பட்ட சம்பவங்கள் அரங்கேறின.

தினசரி பயணிகள்

தினசரி பயணிகள்

ஒசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பெங்களூரையடுத்த தமிழக நகரங்களில் இருந்தும், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், கல்வி, மருத்துவ தேவைகளுக்காகவும், பணி நிமித்தமாகவும், தினமும், ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் பெங்களூருக்கு செல்வது வழக்கம். இவர்கள் காலையிலும், மாலையில் வீடு திரும்பும்போதும், தலா 2 கி.மீ நடந்தே எல்லையை கடக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.

நோயாளிகளும் நடந்து சென்றனர்

நோயாளிகளும் நடந்து சென்றனர்

கன்னட அமைப்பினர் அவ்வப்போது, ஒசூர் எல்லை வரை வந்து போராட்டம் நடத்தி, தகதகப்பை குறையவிடாமல் பார்த்துக்கொண்டனர். இதனால் கர்நாடக போலீசார் அச்சத்தின் காரணமாக, தமிழக வண்டிகளை எல்லையின் பக்கத்தில் கூட அனுமதிக்க மறுத்துவிட்டனர். பெங்களூரின் புறநகர் பகுதிகளில் பல மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகள் உள்ளன. அங்கு, சிகிச்சை பெற தமிழகத்தின் எல்லையோர மாவட்ட மக்கள், குறிப்பாக, முதியோர்களும், குழந்தைகளும் செல்வது வழக்கம். ஆனால் அவர்களுமே நடக்க வைக்கப்பட்ட கொடுமை அரங்கேறியது.

காற்றில் கரைந்த குரல்கள்

காற்றில் கரைந்த குரல்கள்

"கன்னட அமைப்பினர் கோபமாக இருப்பதால், உங்கள் மாநில வண்டிகளை உள்ளே விட முடியாது" என்பதே, இரு மாநில போலீசாரின் பதிலாக இருந்தது. "எல்லையோரத்தின் இந்த 2 கி.மீ தூரத்திற்காவது பாதுகாப்பு கொடுங்கள்.." என கெஞ்சிய மக்களின் குரல்கள் காற்றோடு கரைத்தனவே தவிர, போலீசார் அல்லது ஆட்சியாளர்களின் மனதை கரைக்க முடியவில்லை.

தமிழர்கள் கஷ்டப்படனும்ல

தமிழர்கள் கஷ்டப்படனும்ல

"தமிழக மக்கள் கஷ்டப்பட வேண்டும், அதை பார்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட் படியை விட்டு இறங்கிவர வேண்டும்.." இதுதான், கன்னட அமைப்பினர் நடத்திய போராட்ட கூட்டங்களில் திரும்ப, திரும்ப ஒலித்த வாசகங்களாக இருந்தன. இதற்காகத்தான், கேபிள் டிவிகளில் தமிழ் சேனல்கள் கட் செய்யப்பட்டன. தமிழ் பத்திரிகைகள் சாம்பலாக்கப்பட்டன. தமிழர்களை அவதிக்குள்ளாக்கி, தங்கள் ஆவேசத்தை கன்னட அமைப்பினர் தீர்த்துக்கொண்டதை, வேடிக்கை பார்த்தது கர்நாடக அரசு.

பணய கைதிகளா தமிழர்கள்?

பணய கைதிகளா தமிழர்கள்?

அதன் உச்சம்தான், தமிழக வாகனங்களை தங்கள் மாநிலத்திற்குள் அனுமதிக்காமல் இருந்ததும் கூட. பயணிகள் ஒரு பணய கைதிகளை போல கர்நாடகாவால் பயன்படுத்தப்பட்டனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறியதும், கடத்தப்பட்ட பணய கைதிகளை விடுதலை செய்யும், கும்பலை போல, கர்நாடக அரசும் நடந்து கொண்டுள்ளது வேதனையின் உச்சம்.

கோரிக்கை நிறைவேறியதும் 'விடுதலை'

கோரிக்கை நிறைவேறியதும் 'விடுதலை'

"காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் குழு ஆய்வு செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கூடாது, தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க கூடாது.." ஆகிய கர்நாடகாவின் இந்த முப்பெரும் கோஷங்களும், நேற்றைய சுப்ரீம்கோர்ட் உத்தரவால் முற்றாக நிறைவேறிய மகிழ்ச்சியில் முழுதாய் திளைத்து வருகிறது கர்நாடகா. எனவே, பணய கைதிகளான பயணிகள் இன்று முதல் விடுதலை பெற்றுள்ளனர். மைசூர் தசராவுக்கு தமிழகத்திலிருந்து பயணிகள் செல்லவும், அதன் மூலம் சுற்றுலா வருவாயை பெருக்கவும் கூட இதன்மூலம் வழி பிறந்துவிட்டது கர்நாடகத்திற்கு.

ஒருவேளை வரும் 18ம் தேதி நடைபெற உள்ள காவிரி வழக்கு விசாரணையின்போது, கர்நாடகாவிற்கு எதிராக ஒரு சிறு துரும்பை சுப்ரீம் கோர்ட் நகர்த்தினாலும், தமிழக பயணிகள் மீண்டும் பணய கைதிகளாவர். அதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை மட்டுமே பார்க்கும். வழக்கம்போல!

English summary
Tamil passengers was treated like hostages by Kannada organizers and the Karnataka government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X