For Daily Alerts
இந்தியாவுக்குள் நுழைந்து 'டேரா' போட்ட சீனா- காங். கடும் கண்டனம்!
டெல்லி: ஜம்மு காஷ்மீரின் லடாக் பிராந்தியத்தில் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவி முகாம்களை அமைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்திய எல்லையில் சீன ராணுவம் அடிக்கடி ஊடுருவி முகாம்களை அமைத்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டு வந்தது.

நடந்தது என்ன?
- கடந்த 22ந் தேதி லடாக்கின் டெம்சோக் பகுதியில் சீன ராணுவத்தினர் மீண்டும் ஊடுருவி அங்கு 3 முகாம்களை அமைத்து தங்கியிருந்துள்ளனர்.
- சீன ராணுவம் ஊடுருவிய தகவலறிந்து இந்திய ராணுவத்தினர் உடனடியாக அப்பகுதிக்கு சென்றனர்.
- இரு நாட்டு உயர் அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தைக்கு பின்னர் சீன ராணுவத்தினர் திரும்பி சென்றுள்ளனர்.
தலைவர்கள் கண்டனம்
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் கட்சி நரேந்திர மோடி அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி தெரிவித்துள்ள கருத்து:
- மத்தியில் பாரதிய ஜனதா அரசு அமைந்ததில் இருந்து எல்லையில் சீன ராணுவத்தினர் ஊடுருவல் அதிகரித்துள்ளது மிகவும் துரதிஷ்டவசமானது.
- கடந்த காலத்தில் சீனா ஊடுருவிய போது இதே பாரதிய ஜனதா பேசிய வலுவான தூதரக அணுகுமுறை இப்போது எங்கே? அவர்கள் பேசிய இராஜதந்திரம் எங்கே போனது?

தேசியவாத காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் தரிக் அன்வர்:
- சீனாவின் ஊடுருவலுக்கு மோடி அரசு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
- எந்த ஒரு எல்லைப்பிரச்சனையும் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.
- இதுபோன்ற சம்பவம் மீண்டும் எதிர்காலத்தில் நடைபெறாது என உறுதி அளிக்க வேண்டும்

பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி:
- ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவி முகாம் அமைப்பது தொட்ர் கதையாகி வருகிறது.
- இருநாடுகளிடையேயான எல்லையை சரியாக குறிப்பிடாததால் இந்த குழப்பம் வருகிறது.
- இந்த குழப்பத்தை முதலில் தீர்க்க வேண்டும்.