
“நேத்து முளைத்த காளான்..” ஆம் ஆத்மி குறித்து காங்கிரஸ் காட்டம்! குஜராத்தை வெல்வோம் என்று நம்பிக்கை
காந்திநகர்: குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி, தங்களின் வாக்கு வங்கியை பாதிக்காது என்றும் கருத்துக்கணிப்புகளை கடந்து காங்கிரஸ் வெற்றிக்கொடி நாட்டும் எனவும் அக்கட்சியின் குஜராத் தேர்தல் பார்வையாளராக உள்ள 'மிலிந்த் தியோரா' நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையினர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், தற்போது மூன்றாவது பெரிய கட்சியாக ஆம் ஆத்மி களமிறங்கி இருப்பது காங்கிரஸின் இந்த வாக்கு வங்கியை பாதிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள். ஆனால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த 'மிலிந்த் தியோரா' காங்கிரஸ்தான் வெல்லும் என கூறியுள்ளார்.
ஒருவேளை ஆம் ஆத்மி எங்களது வாக்கு வங்கிகளை பாதிக்கும் எனில், பாஜகவின் வாக்கு வங்கியையும் இது பாதிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மறக்கவே மாட்டோம்.. உலகத்துக்கே பாடம்! மும்பை பயங்கரவாத தாக்குதலை நினைவுகூர்ந்த ராஜ்நாத், அமித்ஷா

குஜராத்
குஜராத் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 4 நாட்கள்தான் இருக்கின்றன. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு முதற் கட்டமாக தேர்தல் டிசம்பர் 1ம் தேதி நடைபெறுகிறது. கடந்த ஆண்டு தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 22 ஆண்டுக்கால வெற்றியை தக்கவைத்துக்கொண்டது. ஆனால் கடந்த முறை பாஜகவுக்கு பதிவான வாக்குகளுக்கும், காங்கிரசுக்கு பதிவான வாக்குகளுக்கும் இடையே வெறும் 10% வாக்குகள்தான் வித்தியாசம் இருந்தது. இந்நிலையில் இம்முறை காங்கிரஸ் நிச்சயம் ஆட்சியை கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனால், தற்போது மாநிலத்தில் ஆம் ஆத்மியும் களத்தில் உள்ளதால் வாக்குகள் பிரியும் என்று சொல்லப்படுகிறது. இது காங்கிரசுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

வித்தியாசமான பிரசாரம்
இவ்வாறு இருக்கையில், இந்த கருத்தை காங்கிரஸின் குஜராத் மாநில தேர்தல் பார்வையாளராக உள்ள மிலிந்த் தியோரா அடியோடு மறுத்துள்ளார். இது குறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "காங்கிரஸ் இந்த முறை மேற்கொண்டுள்ள பிரசாரம் மிகவும் வித்தியாசமானது. பாஜகவை போல மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்களை நாங்கள் அதிக அளவில் களமிறக்கவில்லை. மாறாக, உள்ளூர் தலைவர்களை இதில் களம் இறக்கி இருக்கிறோம். மற்றொருபுறம் 'பாரத் ஜடோ யாத்திரை' சாதகமான பாதிப்புகளையே ஏற்படுத்தி வருகிறது. இந்த யாத்திரை குஜராத்தில் நடைபெறவில்லையென்றாலும், மற்ற மாநிலங்களில் நடைபெறுவது இங்கு பிரதிபலிக்கப்படுகிறது.

ராகுல்காந்தி
அதேபோல, ராகுல்காந்தி இந்த யாத்திரைக்கு நடுவிலும் குஜராத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கியுள்ளார். கடந்த முறை மேற்கொண்ட பிரசாரத்தை விட இந்த முறை நாங்கள் கையில் எடுத்துள்ள பிரசார பாணி வித்தியாசமானது. இது பழைய பாணி. கடந்த காலத்தில் கட்சி இந்த பாணியில்தான் பிரசாரத்தை மேற்கொண்டது. 2017 தேர்தலுக்கு முன்னர் படிதார் போராட்டம், பணமதிப்பிழப்புக்கு எதிராக போராட்டம், ஜிஎஸ்டிக்கு எதிரான போராட்டம் ஆகியவை தேர்தலுக்கு கைகொடுத்தது. ஆனால் இந்த முறை நாங்கள் போராட்டத்தை மட்டுமே நம்பி இருக்காமல் மக்களிடத்தில் செல்வது என்று முடிவெடுத்துள்ளோம். எனவே வீடுவீடாக சென்று பிரசாரம் செய்து வருகிறோம்" என்று கூறினார்.

போட்டி
ஆம் ஆத்மி காங்கிரசின் வாக்கு வங்கிகளை பிரிக்கும் என்று சொல்கிறார்களே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "ஆம் ஆத்மி காங்கிரஸ் எனும் ஒரு கட்சிக்கு மட்டும் பாதகத்தை ஏற்படுத்தாது. அது பாஜகவுக்கும் பாதகத்தை ஏற்படுத்தும். பாஜகவை தோற்கடிக்க நினைப்பவர்களுக்கு காங்கிரஸ் மட்டும்தான் வாய்ப்பாக இருக்கிறது. ஆம் ஆத்மியை பொறுத்த அளவில் அக்கட்சிக்கு என நிறைய ஊடகங்கள் முக்கியத்துவம் தருகின்றன. ஆனால் எங்களிடம் உள்ளூர் அளவில் பலம் இருக்கிறது. இதனால் போட்டி என்பது பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையில்தான்.

ஊழியர்கள்
எனவே கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும். அதேபோல சில முக்கிய பிரச்னைகளை கட்சி கையில் எடுத்திருந்தாலும், தேர்தல் நேரத்தில் சில உணர்வுப்பூர்வமான விஷயங்களை பாஜக கையில் எடுத்துள்ளது. அதனால்தான் அக்கட்சி கடைசி நேரத்தில் பிழைத்துக்கொள்கிறது" என்று மிலிந்த் தியோரா கூறியுள்ளார். குஜராத்தை பொறுத்த அளவில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் மட்டுமே உள்ளூர் அளவில் கட்சி ஊழியர்கள் இருக்கின்றனர். ஆம் ஆத்மி இந்து பிரசாரத்தை மேற்கொள் டெல்லி, ஹரியானா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தங்களது ஊழியர்களை களமிறக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.