For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 31வரை நீட்டிப்பு - முழு விவரம்

By BBC News தமிழ்
|
கொரோனா
Getty Images
கொரோனா

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றன.

இது தொடர்பாக மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, உலக சுகாதார அமைப்பின் முதுநிலை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சௌமியா சாமிநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பொது மக்கள் நலன் கருதியும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து முழு விவரத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

1.14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.

2.16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு.

3.பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

தற்போது ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.

கொரோனா
Getty Images
கொரோனா

பொது அறிவுரைகள்:-

  • இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
  • கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (Hand Sanitizer with Dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (Thermal Screening).
  • கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தவறும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிபவர்கள், உரிமையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.
  • அனைத்து கடைகளும் குளிர் சாதன வசதியை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் போது சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்

  • நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் (Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour) ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.
  • கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level) வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
  • வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், பின்வரும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
  • நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.
  • நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தீவிரமாக நோய்த் தொற்றுப் பரவலை வீடு வீடாகக் கண்காணிக்க குழுக்கள் அமைத்துக் கண்காணிக்கப்படும்.
  • கொரோனா நோய்த் தொற்றுக் கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும்.

அரசுத்துறைகளுக்கு உத்தரவு

கொரோனா
Getty Images
கொரோனா

தற்போது கொரோனா நோய் வேகமாக பரவி வருவதால், பொது இடங்களில் கொரோனா தடுப்பு நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படுவதை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் கொரோனா நோய்த் தடுப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் தொடர்ந்து செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் / கடைகளை மூட பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று தடுப்பூசியினை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், உரிய சிகிச்சை அளித்திட தேவையான மருத்துவக் கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். இருப்பினும், பொதுமக்கள் அத்தியாவசியக் காரணங்களுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியினை கடைபிடித்து இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொண்டால் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து சுயமாக பாதுகாத்துக் கொள்ளலாம்.

கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Tamilnadu govt announced additional restrictions on Curfew. Corona cases continue to raise in tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X