எல்லாம் மோடி பாத்துக்குவார் என்ற ராஜேந்திரபாலாஜியை விசாரிங்க - டிடிவி தினகரன் தரப்பு மனு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி : பிரதமர் மோடி நமக்கு உறுதுணையாக உள்ளார், எனவே இரட்டை இலை சின்னம் நமக்கு கிடைத்துவிடும்" என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை விசாரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் தினகரன் தரப்பிலிருந்து வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால் இரட்டை இலை தொடர்பான வழக்கை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 29ஆம் தேதிக்குள் இரு தரப்பும் புதிய பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டுமெனவும், சின்னம் தொடர்பான இறுதி விசாரணை அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Dinakaran group wants minister Rajendra Balaji to be probed

தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தினகரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கில், விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து, வரும் நவம்பர் 10ஆம் தேதிக்குள் சின்னம் யாருக்கு என்பதை முடிவு செய்ய வேண்டும்" என்று தேர்தல் ஆணையத்துக்கு அவகாசமும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேர்தல் ஆணையத்தில் இந்த மாதம் கடந்த 6, 16,23 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விசாரணையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய ஒருங்கிணைந்த அணிகள் தரப்பிலிருந்து காரசாரமான விவாதம் முன்வைக்கப்பட்டது. சசிகலா, தினகரன் கையில் அதிமுக சென்றால் அதன் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும், சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு கட்சியை வழிநடத்தத் தகுதியில்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்து.

இந்தச் சூழ்நிலையில் அக்டோபர் 30ஆம் தேதியான நேற்று 3 மணியளவில் நான்காவது கட்டமாக டெல்லி தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற்றது.

தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஒருங்கிணைந்த அணிகள் தரப்பிலிருந்து தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்தோம். இது தொடர்பாகப் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்ய விரும்புகிறோம்" என்றும், அதற்குக் கால அவகாசம் வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

கடந்த முறை நடைபெற்ற வாதத்தில் சிறையில் இருக்கும் சசிகலாவுக்குக் கட்சியை வழிநடத்தத் தகுதி கிடையாது என்ற கருத்தை ஈபிஎஸ் - ஒபிஎஸ் தரப்பு முன்வைத்திருந்தது. இதற்குப் பதிலாக, தண்டனை பெற்றவர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் சொல்லவில்லை. ஜெயலலிதாவே தண்டனை பெற்று சிறையில் இருந்த போது பொதுச்செயலாளராக பதவி வகித்திருக்கிறார் என்று டிடிவி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

Dinakaran group wants minister Rajendra Balaji to be probed

துணைப் பொதுச்செயலாளரை நியமிக்க அதிமுகவின் சட்ட விதிகளில் முகாந்திரம் உள்ளது" என்ற வாதம் தினகரன் தரப்பில் எடுத்து வைக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தரப்பு, முன்பு தங்களுடன் இருந்தபோது தாக்கல் செய்த ஆவணங்களையும், தற்போது ஒருங்கிணைந்த அணியினர் தாக்கல் செய்துள்ள ஆவணங்களையும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்றும் தினகரன் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

பிரதமர் மோடி நமக்கு உறுதுணையாக உள்ளார், இரட்டை இலைச் சின்னம் நமக்குக் கிடைத்துவிடும் என்று அமைச்சர் கூறியதையும் விசாரணை செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

இதையடுத்து, புதிதாக மனுதாக்கல் செய்யத் தேர்தல் ஆணையம் தங்கள் தரப்புக்கு அவகாசம் வழங்கியிருப்பதாகவும், சின்னம் தொடர்பான விசாரணை இன்றுடன் முடிவடைய வாய்ப்பில்லை என்றும் தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்து வாதத்தைத் தொடங்கிய ஒருங்கிணைந்த அணிகள் தரப்பு, நீளமான வாதங்களை முன்வைத்து, தினகரன் தரப்பினர் நேரத்தை விரயமாக்குகின்றனர் வழக்கை இழுத்தடிக்கின்றனர் என்று தெரிவித்தனர்.

தினகரன் தரப்புக்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், இரட்டை இலை தொடர்பாக இறுதி உத்தரவையே எங்களிடம் எதிர்பார்க்கலாம், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது" என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, சின்னம் தொடர்பான விசாரணையை வரும் நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. நவம்பர் 1ஆம் தேதியன்று இரட்டை இலை யாருக்கு என்று தேர்தல் ஆணையம் அறிவிக்குமா?

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dinakaran group has urged the EC to probe minister Rajendra Balaji in ADMK poll symbol issue.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற