For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் அப்பாவை வெறுத்தேன்.. வக்கீல், ஒரு பாவத் தொழில்.. ஜார்ஜ் பெர்னாண்டஸின் மறுபக்கம்

Google Oneindia Tamil News

-ஆர்.மணி

Recommended Video

    முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்- வீடியோ

    சென்னை முன்னாள் மத்திய அமைச்சரும், சமதா கட்சி தலைவருமான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் காலமாகி விட்டார். அவருக்கு வயது 88.

    கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டு வந்தார் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ். ஜூன் 3, 1930. கர்நாடகாவின் மங்களுரில் கத்தோலிக்க கிறிஸ்த்துவ குடும்பத்தில் பிறந்தார். ஆரம்ப காலங்களில் கிறிஸ்த்துவ பாதிரியாராக இருந்திருக்கிறார். அவர் தீவிர அரசியலுக்கு வந்த பின்னர் கொடுத்த ஒரு பேட்டியில் இப்படி சொன்னார்;

    George Fernandez death great loss to India

    நான் பள்ளிப் படிப்புடன் எனது படிப்பை நிறுத்திக் கொண்டேன். என்னுடைய தந்தை நான் வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்பினார். நான் இதனை வெறுத்தேன். காரணம் என்னுடைய அப்பாவின் நடவடிக்கைகள் தான். மங்களூரில் எங்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டிடங்களில் இருந்து குத்தகைதார ர்கள் மற்றும் குடியிருப்போரை, அவர்கள் மீது வழக்குகள் போட்டு, அவர்கள் பல ஆண்டுகள் தங்கியிருந்த இடங்களில் இருந்தும், அவர்கள் உழுது செழுமையாக்கிய நிலங்களில் இருந்தும் என்னுடைய அப்பா வெளியேற்றுவார்.

    நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் இது தொடர்ந்து நடந்த கொண்டிருந்தது. அப்போது வழக்கறிஞர்கள்தான் இந்த காரியத்தை அப்பாவுக்கு செய்து கொடுப்பார்கள். ஆகவே வக்கீல் பணியை நான் பாவ தொழிலாக பார்த்தேன். படிக்க மறுத்தேன். நேரடியாக தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும், பின்னர் அரசியலுக்கும் வந்தேன்'' .

    ஜார்ஜ் 1949 ல் மும்பைக்கு வந்து சோஷலிஸ்ட் தொழிற் சங்கத்தை கட்டமைத்தார். 1967 ல் தெற்கு மும்பை மக்களவைத் தொகுதியிலிருந்து எம்.பி யாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1974 ம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தின் சூத்திரிதாரியாக இருந்தார். ஒட்டு மொத்த இந்தியாவும் அந்த ரயில்வே வேலை நிறுத்தத்ததால் ஸ்தம்பித்தது.

    1975 ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலைக் காலத்தில் தலைமறைவானார் ஜார்ஜ் ஃபெர்னான்ட்டஸ். அவர் தலைமறைவாக இருந்த இடம் தமிழ் நாடு. அப்போதய திமுக அரசின் முதலமைச்சர் மு.கருணாநிதி தமிழகத்தில் ஃபெர்னான்ட்டஸூக்கு அடைக்கலம் கொடுத்தார். பின்னர் சில காலம் அந்தமானில் தங்கியிருந்தார். அதன் பின்னர் டில்லி திரும்பிய ஃபெர்னான்டஸை போலீஸ் கைது செய்தது. கைது செய்யப் பட்டவுடன் 16 கிலோ மீட்டர் தூரம் ஃபெர்னான்டஸை நடக்க வைத்தே அழைத்துச் சென்றது போலீஸ். ஒரு இடத்தில் தேநீர் அருந்துவதற்காக ஃபெர்னான்டஸ் நிறுத்தப் பட்டார். அவருக்கு கொடுக்கப் பட்ட தேநீரில் ஈக்கள் மிதந்து கொண்டிருந்தன. வேறு தேநீரை வாங்கித் தருமாறு கேட்டார். ஆனால் போலீஸ் மறுத்து விட்டது.

    George Fernandez death great loss to India

    பின்னர் சிறையிலிருந்து விடுதலையானவுடன், தன்னுடைய சிறை அனுபவங்கள் பற்றிய புத்தகத்தில் ஃபெர்னான்டஸ் அந்த சம்பவம் பற்றி இப்படிக் குறிப்பிட்டார். ''ஈக்களுக்கு பறக்க மட்டுமே தெரியும் என்று அதுவரையில் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஈக்களுக்கு நீந்தவும் தெரியும் என்று கைவிலங்குடன் போலீஸ் அழைத்துச் செல்லப் பட்டபோதுதான் தெரிந்து கொண்டேன்'' என்று எழுதினார்.

    1977 - 1979 ம் ஆண்டுகளில் நாட்டை ஆண்ட மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியில் தொழிற்துறை அமைச்சராக இருந்தார். அந்த காலகட்டத்தில் கோகோ கோலா, ஐபிஎம் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றினார் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ். 1979 ல் மொரார்ஜி தேசாய் பதவி விலகி சரண்சிங் பிரதமரானார். அப்போது முதல் நாள் மொரார்ஜி தேசாயை ஆதரித்து நாடாளுமன்றத்தில் பேசினார். அடுத்த நாள், அணி மாறி, சரண்சிங்கை ஆதரித்து பேசினார் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்க முடியாமல் அடுத்த சில நாட்களில் சரண்சிங் அரசாங்கம் கவிழ்ந்தது.

    1989 - 1990 ம் ஆண்டு காலத்தில் வி.பி. சிங் பிரதமரானபோது அந்த அரசில் ரயில்வே துறை அமைச்சராக இருந்தார் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ். காஷ்மீர் விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சராகவும் இருந்தார். மறைந்த ஜம்மு, காஷ்மீர் முதலமைச்சரும், வி.பி. சிங் அரசில் மத்திய உள்துறை அமைச்சராகவும் இருந்த முஃப்தி முஹம்மது சயத்தின் மூத்த மகள் டாக்டர் ரூபயா சயத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அப்போது ரூபயா சயத் பத்திரமாக மீட்கப் பட ஜார்ஜ் ஃபெர்னான்டஸின் சாதுர்யமான அணுகுமுறை பெரும்பங்கு ஆற்றியதாக கூறப்பட்டது.

    George Fernandez death great loss to India

    1998 - 1999 மற்றும் 1999-2004 வாஜ்பாய் தலைமையிலான தேசீய ஜனநாயக கூட்டணியில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார் ஜார்ஜ் ஃபெர்னான்ட்டஸ். வாஜ்பாய் அரசில் 18 எம் பி க்களை கொண்டிருந்த அஇஅதிமுக வும் பங்கேற்றது. 1999 ஏப்ரலில் ஜெயலலிதா வாஜ்பாய் அரசை ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கவிழ்த்தார். ஆதரவை ஜெயலலிதா வாபஸ் வாங்கியதற்கு வெளியில் சொன்ன காரணம், பாதுகாப்பு துறையில் ஊழல் மலிந்து விட்டதாகவும், ஆகவே இதற்கு காரணமான ஜார்ஜ் ஃபெர்னான்டஸை பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் தான் வைத்த கோரிக்கை ஏற்கப் படாததுதான் என்று கூறினார். ஆனால் ஆட்சி கவிழ்ந்த பின்னர் பாஜக சொன்னது என்னவென்றால், அன்றைய கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்ய ஜெயலலிதா வற்புறுத்தியதாகவும், இதனை ஏற்க வாஜ்பாய் மறுத்ததால் ஜெயலலிதா ஆட்சியை கவிழ்த்தார் என்பதுதான்.

    இந்திரா காந்தியை யே கதி கலங்க வைத்த ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் கடைசி பத்தாண்டுகளில் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே அறியாமல் ஞாபக மறதி நோயால் கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தார். சமதா கட்சி தலைவர் ஜெயா ஜெட்லி, ஜார்ஜ் ஃபெர்னான்டஸூக்கு நெருங்கிய நண்பர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் ஜெயா ஜெட்லியின் வீட்டில்தான் ஜார்ஜ் ஃபெர்னான்ட்டஸ் தங்கியிருந்தார். ஆனால் பின்னர் ஜார்ஜ் ஃபெர்னான்ட்டஸின் மனைவி லைலா கபீரும், மகன் சியானும் டில்லியின் பஞ்சஷீல் பார்க் பகுதியில் உள்ள தங்களது வீட்டுக்கு ஜார்ஜை அழைத்துச் சென்று விட்டனர். ஒரு கட்டத்தில் ஜார்ஜ் ஃபெர்னான்டஸின் பழைய நண்பர்கள் சிலர் ஃபெர்னான்ட்டஸை காணவில்லை என்று ஊடங்களுக்கு அறிக்கை வெளியிட்டனர். தாங்கள் ஜார்ஜ் ஃபெர்னான்டஸை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று ஜெயா ஜெட்லியும், வேறு சிலரும் டில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு போட்டனர். அதனை ஏற்றுக் கொண்ட உயர்நீதி மன்றம் ஜார்ஜ் ஃபெர்னான்டஸை அவரது பிறந்த நாளன்று பார்க்க, ஜெயா ஜெட்லிக்கும் வேறு சிலருக்கும் அனுமதியளித்தது.

    தற்போது பெரிய பிரச்சனையாக உருவெடுத்து இருப்பது ஜார்ஜ் ஃபெர்னான்டஸின் சொத்துக்கள் யாருக்கு என்பதுதான். ஜார்ஜ் ஃபெர்னான்டஸின் பூர்வீக சொத்துக்களை அபகரிக்க ஜெயா ஜெட்லி, ஃபெர்னான்டஸின் மூன்று சகோதர ர்களுடன் சேர்ந்து சதி செய்வதாக ஜார்ஜ் ஃபெர்னான்ட்டஸின் மனைவி லைலா கபீரும், மகன் சியானும் பகிரங்கமாகவே கடந்த சில ஆண்டுகளாக குற்றஞ் சாட்டி வந்தனர். இன்று காலை ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் மறைந்தவுடன் செய்தியாளர்களிடம் பேசிய லைலா கபீர் இந்த குற்றச் சாட்டை மீண்டும் கூறினார். நாளை காலை சியான் அமெரிக்காவிலிருந்து டில்லி திரும்புகிறார். அவர் வந்தவுடன் ஜார்ஜ் ஃபெர்னான்ட்டிஸின் இறுதி சடங்குகள் நடைபெற இருக்கின்றன.

    ஜார்ஜ் ஃபெர்னான்டஸின் இறுதி நாட்கள் பற்றி அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் இன்று ஃபெர்னான்டஸின் மறைவுக்குப் பிறகு இவ்வாறு கூறினார்; ''ஜார்ஜ் ஃபெர்னான்டஸூக்கு கொங்கினி (தாய்மொழி), கன்னடம், ஹந்தி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் தெரியும். சில நாட்களுக்கு முன்பு கொங்கினியிலும், கன்னடத்திலும் பேசிய போது அவரது கண்கள் சில நிமிடங்கள் திறந்தது. ஆனால் மற்ற மூன்று மொழிகளை அவர் சுத்தமாக மறந்து விட்டார். அவர் கிட்டத்தட்ட எல்லோரையும், எல்லாவற்றையும் மறந்த போய் விட்டார்''.

    காலம்தான் எப்பேற்பட்ட கோலங்களை போடுகிறது.

    English summary
    George Fernandez death great loss to India
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X