For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களாக யார் யாருக்கு வாய்ப்பு?

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் காந்தி பேரன் கோபாலகிருஷ்ண காந்தி அல்லது வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு வாய்ப்பு தரப்படலாம்.

Google Oneindia Tamil News

-பா. கிருஷ்ணன்

இன்னும் இரு மாதங்களில் இந்தியாவுக்குப் புதிய குடியரசுத் தலைவர் பொறுப்பேற்கப் போகிறார்.

நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கான வேட்பாளராக பாஜக அறிவிக்கப்பட்ட உடனே எல்.கே. அத்வானியின் பிரதமர் கனவு தகர்ந்து போனது. அதையடுத்து, அவர் குடியரசுத் தலைவராக்கப்படுவார் என்ற யூகங்கள் பேசப்பட்டன.

Gopal Gandhi may be opposition’s choice as presidential candidate?

குடியரசுத் தலைவர் பதவி வாய்ப்பை 1969ம் ஆண்டு இழந்தவர் நீலம் சஞ்சீவ ரெட்டி. அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் அவரையே குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். அன்றைய பிரதமர் அதற்கு நேரடியாகப் பதில் கூறாமல், கடைசி நேரத்தில் "மனசாட்சிப் படி வாக்களியுங்கள்" என்று கட்சியினரை அறிவுறுத்தி, சஞ்சீவ ரெட்டியின் கனவைத் தகர்த்தார். காங்கிரஸே இரண்டாகப் பிளந்தது.

எனினும், 1977ம் ஆண்டு தேர்தலில் எமர்ஜென்சி கொடுமையால் இந்திரா காந்தி தோல்வியடைய, பழைய காங்கிரஸ் தலைவர்களைக் கொண்ட ஜனதா கட்சி ஆட்சி அமைத்ததும் சஞ்சீவ ரெட்டி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அநேகமாக இந்திய அரசியல் வரலாற்றில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தர்ப்பம் அதுதான்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பு அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் தமிழகத்தைச் சேர்ந்த ருக்மணி அருண்டேலின் பெயரை யோசனையாகத் தெரிவித்தார். அப்படி நடந்திருந்தால், முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமை அப்போதே கிடைத்திருக்கும். ஆனால், ருக்மணி அருண்டேல் தனக்கு விருப்பம் இல்லை என்று மறுத்துவிட்டார்.

1984ம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட உடனே அவருக்கு அடுத்த சீனியர் தலைவர்கள் பி.வி. நரசிம்ம ராவ், பிரணாப் முகர்ஜி ஆகியோரில் யாராவதுதான் பிரதமராக வரக் கூடும் என்று பத்திரிகைகள் எழுதிய ஈரம் காய்வதற்கு முன்பே திடீரென்று காங்கிரஸ் கட்சி ராஜீவ் காந்தியைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்தது.

ராஜீவ் பிரதமராவதற்கு உதவியவர் அப்போதைய குடியரசுத் துணைத் தலைவர் ஆர். வெங்கடராமன் என்று கூறுவார்கள். 1984ம் ஆண்டு இறுதியில் பிரதமர் பொறுப்பை முதல் முறையாக ஏற்ற ராஜீவ் காந்தி, தேர்தலை நடத்தி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததும் நரசிம்ம ராவ், பிரணாப் முகர்ஜி ஆகிய இருவரையும் ஓரம் கட்டினார். தான் பிரதமராக வருவதற்கு உதவிய ஆர்.வி. குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வலுவான ஆதரவைத் தந்தார்.

1991ம் ஆண்டு தேர்தலின்போது ராஜீவ் படுகொலையால், வெற்றிடம் ஏற்பட, தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைப் பிடித்தாலும் பிரதமர் பதவிக்கு யார் வருவார்கள் என்று சில தினங்கள் குழப்பமாகவே இருந்தது. அப்போது பிரதமர் பதவிக்கோ கட்சித் தலைமைக்கோ ஆசைப்படவில்லை என்று சோனியா அறிவித்தார். கடைசியில் தேர்தலில் போட்டியிடாத நரசிம்ம ராவ் பிரதமரானார்.

காங்கிரஸின் இன்னொரு மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி கொக்கினைப் போல் காத்திருந்தார். 1984ம் ஆண்டு பிரதமர் கனவில் இருந்த அவருக்கு 2012ம் ஆண்டு குடியரசுத் தலைவர் என்ற நாட்டின் உயரிய பொறுப்பு கிடைத்தது.

இதனிடையில் ஆர்.வியைப் போல் சங்கர்தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன் ஆகியோர் எல்லோரும் எதிர்பார்த்தபடியே குடியரசுத் தலைவரானார்.

1999ம் ஆண்டு ஏ.பி. வாஜ்பாய் தலைமையில் இரண்டாவது முறையாக அரசு அமைந்தது. அப்போது பாஜகவின் ஆதரவு பெற்றிருந்த கிருஷண் காந்த் குடியரசுத் தலைவராகக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திரா காந்தியின் நேர்முக செயலராகவும், தமிழக ஆளுநராகவும் இருந்த பி.சி. அலெக்சாந்தரைக் குடியரசுத் தலைவராக்குவதில் குறியாக இருந்தது அரசு.

ஆனால், பிசி அலெக்சாந்தருக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கிடைக்காது என்பதை அறிந்ததால், வாஜ்பாய் கடைசி நேரத்தில் தனது அறிவியல் ஆலோசகராக இருந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமை வேட்பாளராக்கினார். அவருக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளித்தது குறிப்பிடத் தக்கது. ஆனால், இடதுசாரிகள் நேதாஜியின் படையில் இடம்பெற்ற லட்சுமி சேகலை வேட்பாளராக நிறுத்தினர். பெரும்பான்மை ஆதரவுடன் கலாம் குடியரசுத் தலைவர் ஆனார்.

குடியரசுத் தலைவர் பதவியைப் பொருத்தவரையில் வட மாநிலத்தைச் சேர்ந்தவரும் தென் மாநிலத்தைச் சேர்ந்தவரும் மாறி மாறி தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்கின்றனர். ராஜேந்திர பிரசாத் (பிகார்), எஸ். ராதாகிருஷ்ணன் (ஆந்திரப் பிரதேசம்), ஜாகீர் ஹுசைன் (உத்தரப் பிரதேசம்), வி.வி. கிரி (தமிழ்நாடு), ஃபக்ருதீன் அலி அகமது (உத்தரப் பிரதேசம்), சஞ்சீவ ரெட்டி (ஆந்திரப் பிரதேசம்), ஜைல் சிங் (பஞ்சாப்), ஆர்.வெங்கடராமன் (தமிழ்நாடு), சங்கர்தயாள் சர்மா (மத்தியப் பிரதேசம்), கே.ஆர். நாராயணன் (கேரளம்), அப்துல் கலாம் (தமிழ்நாடு), பிரதீபா பாட்டீல் (மகாராஷ்டிரம்), பிரணாப் முகர்ஜி (வங்காளம்) என்று மாறி மாறி வந்திருக்கிறார்கள்.

இவர்களில் ஜாகீர் ஹுசைன் ஹைதராபாதில் பிறந்தாலும் உத்தரப் பிரதேசம், தில்லி ஆகிய இடங்களில் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்தவர். அவரைத் தென்னாட்டவர் என்று கருதினால், ராதாகிருஷ்ணன், ஜாகீர் ஹுசைன், வி.வி.கிரி ஆகிய மூவருமே தென்னாட்டவர்கள் ஆவர். அதே சமயம் பிரதீபா பாட்டில், பிரணாப் முகர்ஜிக்குப் பின்னர் வட மாநிலத்தவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அடுத்தடுத்து வடநாட்டவரே குடியரசுத் தலைவராகும் நிலை அமையும்.

கே.ஆர். நாராயணனை அடுத்து தென்மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் கலாம்தான் குடியரசுத் தலைவராகியிருக்கிறார். வடநாட்டவரும் தென்னாட்டவரும் மாறி மாறி இப்பதவியை வகிக்க வேண்டும் என்கிற மரபோ, நெறிமுறையோ கிடையாது என்பதால், அது ஒரு விவாதப் பொருளாக ஆனதில்லை.

ஆனால், முஸ்லிம், சீக்கிய சமுதாயத்தினர், தலித் போன்றோர் குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்துவிட்டனர். தற்போது புதிய குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒடிசாவின் பழங்குடியினப் பெண்ணான திரௌபதி முர்முவை நிறுத்த பாஜக கூட்டணி அரசு ஆலோசித்து வருவதாக செய்தி அடிபடுகிறது.

முர்மு தற்போது ஜார்கண்டின் ஆளுநராக இருக்கிறார். பாஜக கூட்டணிக்கு மக்களவையில் பெரும்பான்மை பலம் இருக்கிறது. எனினும், குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு அது பெருமளவு உதவுமா என்று தெரியவில்லை.

இந்நிலையில் மாநிலத்தில் ஆளும் சில கட்சிகளின் ஆதரவை நாட வேண்டியிருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆகியவை ஆதரவு அளிக்க முன் வந்துள்ளது.

தமிழகத்தில் அதிமுக பிளவுபட்டாலும், இரு அணிகளுமே பாஜக வேட்பாளரை ஆதரிக்கும் என்ற நிலை உள்ளது. எடப்பாடி கே. பழனிச்சாமி அணி ஆட்சியில் நீடிக்க வேண்டிய தேவை இருப்பதால் அவர்களது ஆதரவும் கிடைக்கும். ஓ. பன்னீர்செல்வம் அணியும் ஆதரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பழங்குடியினத்தைச் சேர்ந்தவரைக் குடியரசுத் தலைவாக்குவதன் மூலம் பழங்குடி இனத்தவருக்கும் காவலனாக இருப்பதாக பாஜக காட்டிக் கொள்ளமுடியும். காங்கிரஸ் அவ்வாறு செய்யவில்லை எனக் குறை கூறவும் வழி கிடைக்கும்.

பழங்குடியினத்தவரைக் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடச் செய்வதன் மூலம் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பை பலவீனமாக்க இயலும் என்ற உத்தியும் காரணமாக இருக்கலாம்.

அத்வானி போட்டியிட வாய்ப்பே இல்லாவிட்டாலும், பாஜகவின் மூத்த தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், முரளிமனோகர் ஜோஷி ஆகியோரை நிறுத்தினால், அவர்கள் தனது முடிவுகளுக்கு முழுமையான ஆதரவு தருவார்களா என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம்.

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு எதிராக தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தியோ, வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதனோ நிறுத்தப்படக் கூடும். எப்படியோ இரண்டு மாதம் பொறுத்திருந்தால் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும்.

English summary
Columnist Paa Krishnan analysis on upcoming the Presidential Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X