For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொத்துக்களின் மதிப்புகளை அதிகப்படுத்தி அவப்பெயர் ஏற்படுத்திவிட்டனர்: ஜெ. தரப்பு வாதம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூரு: சென்னையில் உள்ள போயஸ் கார்டன் பங்களா, ஹைதராபாத் ஜி.டி.மெட்லாவில் உள்ள திராட்சைத் தோட்டம், பஷிராபாத்தில் உள்ள கட்டிடங்கள் ஆகியவற்றின் மதிப்பை பல மடங்கு மிகைப்படுத்திக் காட்டி, என் மனுதாரரின் பொதுவாழ்க்கைக்குக் களங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதனால், இந்த வழக்கில் இருந்து இந்த சொத்துக்களின் பட்டியலை நீக்க வேண்டும்'' என்று ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் ஜெயலலிதாவின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான புடவைகளை மதிப்பீட்டு குழுவினரால் ஆறரை மணி நேரத்தில் எப்படி சரியாக மதிப்பிட முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த சொத்துக்குவிப்பு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜெயலலிதா தரப்பு இறுதி வாதத்தை அவருடைய வழக்கறிஞர் குமார் தொடர்ந்து 10வது நாளாக வைத்து வருகிறார். கடந்த நான்கு நாட்களாக வாதிட்ட குமார் சொத்துக்கள் மதிப்பீடு தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

களங்கம் ஏற்படுத்திவிட்டனர்

களங்கம் ஏற்படுத்திவிட்டனர்

''என் மனுதாரர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகளைச் சேர்த்ததாக அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் பல இடங்களில் சோதனை செய்து, அதன் மதிப்பை பல மடங்கு மிகைப்படுத்திக் காட்டி என் கட்சிக்காரரின் பொதுவாழ்க்கைக்கு களங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

போயஸ்கார்டன்

போயஸ்கார்டன்

சென்னை போயஸ் கார்டன் பங்களா 1968-ல் கட்டப்பட்டது என்பதால், பழுது ஏற்பட்டதன் காரணமாக கட்டடம் புதுபிக்கப்பட்டது. தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸாரின் உத்தரவின் பேரில், கட்டடம் புதுப்பிக்கப்பட்ட செலவு குறித்து பொதுப்பணித் துறை பொறியாளர்கள் ஆய்வுசெய்து கொடுத்த அறிக்கையில், 7 கோடியே 50 லட்சம் செலவு செய்ததாகக் காட்டியிருக்கிறார்கள். அதே காலகட்டத்தில் ஹைதராபாத்தில் உள்ள பங்களாவிலும் 5 கோடியே 50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

தோராயமதிப்பீடு

தோராயமதிப்பீடு

இந்த இரண்டு இடங்களிலும் கட்டடம் புதுப்பிக்கப்பட்ட மதிப்பு 13 கோடி என்று மதிப்பீடு செய்திருக்கிறார்கள். ஆனால், கட்டடம் புதுப்பிக்க வாங்கப்பட்ட கிரானைட் கற்கள், டைல்ஸ், மின்சார ஒயர்கள், பிளம்பிங் பொருட்கள் போன்றவை எவ்வளவு தொகையில் வாங்கப்பட்டது என்ற விவரமோ, அதற்கான பில்லோ இணைக்கப்படவில்லை. தோராயமாக கணக்கிடப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

ஆந்திரா கட்டிடங்கள்

ஆந்திரா கட்டிடங்கள்

ஜி.டி.மெட்லா, பஷிராபாத் கட்டடங்களை மதிப்பீடு செய்ய பொதுப்பணித் துறை பொறியாளர் வேலாயுதம் தலைமையில் சென்ற டீம், ஆந்திரப்பிரதேசத்தில் ஜி.டி.மெட்லா, பஷிராபாத் ஆகிய குக்கிராமங்களில் உள்ள கட்டடத்தின் மதிப்பை சென்னையில் உள்ள கட்டடத்தின் மதிப்போடு கணக்கிட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள சென்னைக்கும் செங்கல்பட்டுக்குமே கட்டடத்தின் விலை மதிப்பு அதிகமாக மாறுபடும் நிலையில், வேறு ஒரு மாநிலத்தில் உள்ள குக்கிராமத்தில் உள்ள கட்டடங்களை சென்னை மாநகராட்சியுடன் ஒப்பிட்டு கணக்கிட்டு இருப்பது, கொஞ்சமும் பொருந்தாது.

தவறான மதிப்பீடு

தவறான மதிப்பீடு

சொத்து மதிப்பை அதிகமாக காண்பிக்க வேண்டும் என்பதற்காகவே மதிப்பீட்டுக் குழுவினர் அதன் மதிப்பை தவறாக காட்டியுள்ளனர். இது சம்பந்தமாக 1997-98-ல் அரசுத் தரப்பு சாட்சி அளித்த பலர், 2002-ல் மறுசாட்சியம் சொன்னபோது மறுத்திருக்கிறார்கள் என்றார் வழக்கறிஞர் குமார்.

ஆயிரக்கணக்கான புடவைகள்

ஆயிரக்கணக்கான புடவைகள்

"போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையிட்டபோது, 740 பட்டுப் புடவைகளும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியஸ்டர் ரக புடவைகளும் கைப்பற்றப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஜெயலலிதாவிற்கு சொந்தமானது அல்ல. அந்த வீட்டில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி உள்ளிட்ட சிலரின் புடவைகளும் இருந்தன.

ஆறரை மணி நேரத்தில் முடியுமா?

ஆறரை மணி நேரத்தில் முடியுமா?

அந்த புடவைகளை மதிப்பீடு செய்வதற்காக ஜவுளித்துறையில் அனுபவம் மிகுந்த 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. மதிப்பீட்டுக் குழுவினர், ஜெயலலிதாவின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புடவைகளை ஆறரை மணி நேரத்தில் மதிப்பீடு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பல்வேறு ரகம், தரம், விலையுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட புடவைகளை ஆறரை மணி நேரத்தில் மதிப்பிடுவது சாத்தியமில்லை" என்று தெரிவித்திருந்தார்.

கட்டிடங்களும் தோட்டங்களும்

கட்டிடங்களும் தோட்டங்களும்

தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை 9-வது நாளாக பி.குமார் மேற்கொண்ட இறுதிவாதத்தின்போது, "ஹைதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவிற்கு சொந்தமான திராட்சைத் தோட்டம், காலி இடம் மற்றும் கட்டிடத்தை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் 1997-ம் ஆண்டு சோதனையிட்டதாக தெரிவித்தார்.

சரியாக மதிப்பிடவில்லை

சரியாக மதிப்பிடவில்லை

அப்போது அவர்களால் நியமிக்கப்பட்ட மாநில வேளாண்துறை அதிகாரிகளும், நிலத்தை அளவிடும் கணக்காளர்களும் உடனிருந்தனர். சுமார் 10 பேர் அடங்கிய மதிப்பீட்டு குழுவினர் திராட்சைத் தோட்டத்தை பார்வையிட்டு, அங்கிருந்த விளைச்சலையும் கணக்கிட்டு மதிப்பிட்டுள்ளனர். 5 நாட்களில் மதிப்பீட்டு குழுவினரால் தோட்டத்தையும், தோட்டத்தில் விளைந்திருந்த திராட்சையையும் எவ்வாறு துல்லியமாகக் கணக்கிட முடியும்?

அவப்பெயர் உண்டாக்க முயற்சி

அவப்பெயர் உண்டாக்க முயற்சி

காலியிடத்தின் மதிப்பை, அதை வாங்கிய தேதியில் வைத்து நிர்ணயிக்காமல், சோதனையிட்ட தேதியில் மதிப்பிட்டுள்ளனர். மதிப்பீட்டு குழுவில் பணியாற்றிய அனைவரும் அப்போதைய திமுக ஆட்சியின் கீழ் பணியாற்றியவர்கள் என்பதால் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை அதிகமாக காண்பித்து, சமூகத்தில் அவருக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதமாக செயல்பட்டுள்ளனர்'' என்றார்.

தொடரும் இறுதி வாதம்

தொடரும் இறுதி வாதம்

ஜெயலலிதா தரப்பின் இறுதி வாதம் இன்னும் முடிவடையவில்லை. இன்னும் சில வாரங்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வழக்கறிஞர் இறுதி தரப்பு வாதத்தை தொடங்க உள்ளனர். அனைவரின் வாதங்களும் முடிவடைந்த பின்னர் 17 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

English summary
CM Jayalalitha's advocate today argued in the Bangalore special court that the prosecution side has defamed her client by exaggerating the value of the assets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X