தலைகீழ் மாற்றம்.. குஜராத் தேர்தலில் தேயும் பாஜக.. முன்னேறி வரும் காங்கிரஸ்.. ஷாக்கில் ‛தாமரை’.. ஏன்?
காந்தி நகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக வந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் களநிலவரங்களை பார்த்தால் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பாஜகவுக்கு கிடைக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
அதோடு காங்கிரஸ் கட்சியின் ஓட்டு சதவீதம் தொடர்ந்து உயர்ந்து வருவது கருத்து கணிப்பையும் தாண்டி பாஜக தலைவர்களை கலக்கமடைய செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் தான் குஜராத் அரசியல் களத்தில் இந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது பாஜகவின் 24 ஆண்டு தொடர் ஆட்சிக்கு காங்கிரஸ் கட்சி முற்றுப்புள்ளி வைக்குமா? என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல்
குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி தேர்தல் நடக்கிறது. 2வது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 5ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. ஆட்சியை பிடிக்க 92 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

மும்முனை போட்டி
குஜராத்தில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் களத்தில் உள்ளன. இதனால் குஜராத் சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் காங்கிரசும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. பாஜக இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட வாய்ப்புள்ளது.

பாஜகவின் பக்கம் கருத்து கணிப்பு
இதற்கிடையே தான் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி மீண்டும் குஜராத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த உற்சாகத்தில் பாஜக தொடர்ந்து களப்பணி ஆற்றி வருகிறது. இது ஒருபுறம் இருக்க எப்படியாவது பாஜகவை தோற்கடித்து ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் உள்ளது. ஆம்ஆத்மியும் பாஜக, காங்கிரசுக்கு சவால் அளிக்கும் வகையிலும் தங்களின் செல்வாக்கை அறியும் வகையிலும் களமிறங்கி உள்ளது.

களநிலவரம் என்ன?
தற்போதைய கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக வந்தாலும் கூட கடந்த 1998 முதல் 24 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. அதன்படி 1998 முதல் 2017 வரை நடந்த தேர்தல் அடிப்படையில் பார்த்தால் 2002ம் ஆண்டு நடந்த தேர்தலை தவிர பிற அனைத்து தேர்தல்களில் பாஜகவின் பலம் சரிந்து வருவதும், அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு உயர்ந்து வருவது வெளிப்படையாகவே தெரிகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி உற்சாகமடைந்துள்ளது. அதேநேரத்தில் இது பாஜகவினருக்கு கவலையடைய செய்துள்ளது. இதனால் தான் வேட்பாளர் தேர்வில் பாஜக அதிக கவனம் செலுத்தி வருகிறது. தற்போது முதற்கட்டமாக 160 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

1995-1998 தேர்தல்
குஜராத்தை பொறுத்தமட்டில் முதல் முதலாக பாஜக 1995ல் ஆட்சிக்கு வந்தது. அப்போது முதல் முறையாக 121 இடங்களில் பாஜக வென்றது. இதில் காங்கிரஸ் கட்சி 45 இடங்களில் மட்டுமே வாகை சூடியது. அதன்பிறகு 1998 ல் நடந்த தேர்தலில் பாஜகவின் பலம் 117 ஆக சரிந்தது. காங்கிரஸ் கட்சி 47 தொகுதிகளில் இருந்து 53 ஆக அதிகரித்தது.

2002 தேர்தல்
அதன்பிறகு 2002ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக முதல் அமைச்சரானார். இந்த தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்றது. 127 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இது தான் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 51 இடங்களில் மட்டுமே வென்றது

சரிந்த பாஜக
அதன்பிறகு 2007ல் பிரதமர் மோடி தலைமையில் பாஜக 10 இடங்கள் சரிந்தது 117 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 59 இடங்களில் வெற்றி பெற்றது. முந்தைய தேர்தலை ஒப்பிடும்போது 8 இடங்களை காங்கிரஸ் அதிகமாக கைப்பற்றியது. இதையடுத்து கடந்த 2012ம் ஆண்டு மோடி தலைமையில் நடந்த தேர்தலில் பாஜக 115 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சியின் பலம் என்பது 61 ஆக அதிகரித்தது.

அமித்ஷா ஷாக்
2017 ல் நடந்த தேர்தலில் பாஜக 150 இடங்களில் வெல்ல குறிக்கோள் வைத்து அப்போதைய பாஜக தலைவர் அமித்ஷா தனது சொந்த மாநிலத்தில் செயல்பட்டது. ஆனால் இது கைக்கூடவில்லை. அமித்ஷா ஷாக் ஆனார். ஏனென்றால் தொடர் வெற்றிக்கு பிறகு முதல் முதலாக பாஜக வெற்றி 100 இடங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த தேர்தலில் பாஜக 99 இடங்களில் மட்டுமே வென்றது. இது முந்தைய 2012 தேர்தலை ஒப்பிடும்போது 17 இடங்கள் குறைவாகும். அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி 2017 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வென்றது. 2012ல் 61 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சியின் தொகுதி 77 ஆக அதிகரித்தது.

ஓட்டு சதவீதம் அதிகரிப்பு
மேலும் பாஜகவுக்கு, காங்கிரஸ் இடையே தொடர்ந்து ஓட்டு சதவீதம் அதிகரித்து வருகிறது. 1995ல் நடந்த தேர்தலில் பாஜக 121 இடங்களில் வென்றபோது 42.51 சதவீத ஓட்டுக்களை பெற்றது. காங்கிரஸ் 45 இடங்களில் வென்று 32.86 ஓட்டுக்களை பெற்றது. 1998 தேர்தலில் பாஜக 117 இடங்களில் வென்றபோது 44.81 சதவீத ஓட்டுக்களை அறுவடை செய்தது. காங்கிரஸ் 53 இடங்களில் வெற்றி பெற்று 34.85 சதவீத ஓட்டுக்களை கைப்பற்றியது. அதன்பிறகு 2002 தேர்தலில் பாஜக 49.80 சதவீத ஓட்டுக்கள் பெற்று 127 இடங்களில் வெற்றியை பதிவு செய்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 39.03 சதவீத ஓட்டுக்களுடன் 51 இடங்களில் வென்றது.

2007-2017 ஓட்டு சதவீதம்
இதையடுத்து 2007 தேர்தலில் பாஜக ஓட்டு சதவீதம் 49.01 ஆக குறைந்தது. இந்த தேர்தலில் பாஜக 117 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஓட்டு சதவீதமும் 38 சதவீதமாக குறைந்து வெறும் 59 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது. 2012 தேர்தலில் பாஜகவின் ஓட்டு சதவீதம் இன்னும் சரிந்தது. பாஜக 47.85 சதவீத ஓட்டுக்கள் பெற்று 115 இடங்களில் வென்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 38.93 சதவீத ஓட்டுக்களுடன் 61 இடங்களில் வெற்றியை பதிவு செய்தது. அதன்பிறகு கடந்த 2017 தேர்தலில் பாஜக 99 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றாலும் ஓட்டு சதவீதம் என்பது 49.05 சதவீதமாக அதிகரித்தது. இதில் காங்கிரஸ் கட்சியும் 77 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் ஓட்டு சதவீதம் 41.44 சதவீதமாக அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம்ஆத்மியால் ஆபத்து யாருக்கு?
இதன்மூலம் கடந்த 1998 முதல் 2017 வரை நடந்த 5 சட்டசபை தேர்தல்களில் 2002ம் ஆண்டு தேர்தலை தவிர பிற அனைத்து தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதும், அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தொகுதிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுதவிர பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் ஓட்டு சதவீதம் ஒருசேர அதிகரித்து வருகின்றன. தற்போது ஆம்ஆத்மி கட்சி களமிறங்கி உள்ளது. இது பாஜக, காங்கிரஸ் வாக்கு வங்கிகளில் எதை பாதிக்கும் என்பது தெரியவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் இந்துத்துவா சார்ந்த விஷயங்களை பேசி வரும் நிலையில் இத்தகைய களநிலவரங்கள் பாஜகவை அச்சுறுத்துகின்றன.

பாஜக கலக்கம் ஏன்?
மேலும் குஜராத்தில் ஆட்சியமைக்க 91 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதுமானதாகும். காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 77 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் இன்னும் 14 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றால் போதுமானதாகும். இதனால் தான் பாஜக தலைவர்களும் அதிக கவனத்துடன் உள்ளனர். ஏனென்றால் கடந்த 2012 தேர்தலில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் 16 தொகுதிகளை காங்கிரஸ் கட்சியிடம் 2017 தேர்தலில் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கருத்து கணிப்புகளையும் தாண்டி பாஜக தலைவர்கள் கலங்கி போய் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications