குஜாரத் தேர்தல்: மண்ணில் சிக்கிய பாஜக பிரசார வேன்.. மீட்ட காங்கிரஸ் வாகனம்.. கலாய்த்த ஆம் ஆத்மி!
அகமதாபாத்: குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது மண்ணில் சிக்கிய பாஜக பிரசார வேனை காங்கிரஸ் கட்சியின் பிரசார வாகனம் மீட்டது. இதை வைத்து இரு கட்சிகளையும் ஆம் ஆத்மி கலாய்த்துள்ளது.
குஜராத்தில் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
குஜராத்தை பொருத்தவரை கால்நூற்றாண்டு காலமாக பாஜகதான் ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ளது.

கவர்ச்சிகரமான அறிவிப்புகள்
நடைபெற இருக்கும் தேர்தலில் வெற்றி வாகை சூடி தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்க பாஜக மும்முரம் காட்டி வருகிறது. மறுபுறம் இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று காங்கிரசும் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, பாஜகவுடன் மல்லுக்கட்ட தயாராகி வருகிறது.

குஜராத்தில் மும்முனை போட்டி
இந்த முறை ஆம் ஆத்மியும் பஞ்சாபில் பெற்ற வெற்றியுடம் கோதாவில் இறங்கி இருப்பதால் பாஜகவுக்கு சவால் விடுத்து விடலாம் என்று எண்ணத்துடன் வியூகங்களை வகுத்து வருகிறது. இதனால், குஜராத்தில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தல் களம் சூடுபிடித்து விட்டதால் குஜராத்தில் எங்கு பார்த்தாலும் கட்சிக் கொடிகளும் போஸ்டர்களுமாக தென்படுகின்றன. ஆங்காங்கே கட்சிகளின் பிரசார வாகனங்களும் விளம்பர பதாகைகளுடன் செல்வதையும் காண முடிகிறது.

பாஜக - காங்கிரஸ்- ஆம் ஆத்மி
மற்றொரு பக்கம் ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளும் தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதால் குஜராத் தேர்தல் திருவிழா களை கட்டி விட்டது என்றே சொல்லலாம். பாஜக - காங்கிரஸ்- ஆம் ஆத்மி என அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்தும் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, சாலை ஓரத்தின் மணலில் சிக்கிய நிற்கும் பாஜகவின் பிரசார வாகனத்தை காங்கிரஸ் கட்சியின் பிரசார வாகனம் கயிறு கட்டி மீட்கும் காட்சி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

பாஜகவின் தேர்தல் வாகனத்தை காப்பாற்ற
இந்த வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் ஆம் ஆத்மி கட்சி, இரு கட்சிகளையும் கலாய்த்து பதிவிட்டு இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிடப்பட்டு இருப்பதாவது:- குஜராத்தில் சிக்கி நிற்கும் பாஜகவின் தேர்தல் வாகனத்தை காப்பாற்ற காங்கிரஸ் கடுமையாக முயற்சிக்கிறது. தேர்தல்களில் பாஜக மற்றும் காங்கிரசில் கதை இதுதான் என்று கடந்த 1991 ஆம் ஆண்டு வெளி வந்த 'சௌதாகர்' படத்தில் இடம் பெற்ற ILU-ILU- என்ற பாடலை (ஐ லவ் யூ என்று குறிப்பிடும்) குறிப்பிட்டுள்ளது.

உதவும் கட்சி என்றே அர்த்தம்
இணையத்தில் வேகமாக பரவி வரும் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், ''காங்கிரஸ் கட்சி என்றால் பிரச்சினையில் இருப்பவர்களுக்கு உதவும் கட்சி என்றே அர்த்தம். காங்கிரஸ் கட்சி யார் மீதும் வெறுப்பை உமிழாது" என்று பதிவிட்டு இருக்கிறார். அதேபோல், மற்றொரு நெட்டிசன், ''இது ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவுவது மட்டுமே.

மனிதநேயத்தோடு பார்க்கிறோம்
இந்த வாகனத்தை தினக்கூலி வேலையில் ஈடுபட்டு இருக்கும் ஒருவரால்தான் ஓட்டப்படும். தோராயமாக 200 ரூபாய்க்குதான் இந்த வாகனத்தை அவர் ஓட்டுவார். அனைத்து இடங்களிலும் வாக்குகளை பார்ப்பதில்லை. இதை மனிதநேயத்தோடு பார்க்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications