டார்கெட் “பிஜேபி”.. மோடி கடவுள் என்ற “என்கவுண்டர்” போலீஸ்! குஜராத்தில் புதிய கட்சி தொடங்கி போட்டி
காந்திநகர்: குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் நிலையில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று அழைக்கப்படும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி தனி கட்சி தொடங்கி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.
பாரதிய ஜனதாவின் கோட்டை என கருதப்படும் குஜராத் மாநிலத்துக்கான சட்டசபைத் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது.
டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.

போலீஸ் கட்சி
இது அல்லாமல் அசதுத்தீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி உள்ளிட்டவை சில இடங்களில் தனித்து போட்டியிடுகின்றன. இதற்கிடையே குஜராத்தை சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரி டிஜி வஞ்சாரா தொடங்கிய பிரஜா விஜய் பக்ஷ் என்ற அரசியல் கட்சி இந்த குஜராத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 182 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது.

என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்
குஜராத்தில் பல முன்னாள் போலீஸ் அதிகாரிகள், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மியில் போட்டியிட காத்துக்கிடக்கும் நிலையில் போலீஸ் அதிகாரியே கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிடுகிறார். என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என மக்களால் அழைக்கப்படும் புகழ்பெற்ற போலீஸ் அதிகாரியாக திகழ்ந்தவர் டிஜி வஞ்சாரா.

சொரோபுத்தீன், இஸ்ரத் ஜஹான் என்கவுண்டர்
2002 குஜராத் கலவரத்துக்கு பிறகு சொராபுத்தீன் சேக், இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட பலர் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த போலி என்கவுண்டர்களில் ஈடுபட்டதற்காக டிஜி வஞ்சாரா உள்ளிட்ட சில போலீஸ் அதிகாரிகள் கடந்த 2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

மோடி எனது கடவுள்
வஞ்சாரா பல ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்தார். அதன் பின்னர் மகாராஷ்டிரா சிறைக்கு கைதிகள் மாற்றப்பட்டபோது கிடைத்த அவரது 2 கடிதங்கள் பாஜக மீதான அவரது விரக்தியை வெளிப்படுத்தியது. மோடியை தனது கடவுளாக கருதுவதாக குறிப்பிட்ட வஞ்சாரா, தனக்கு பாஜக நிவாரணம் தராவிட்டால் சிக்கல் கொடுப்போம் என்று எழுதி இருந்தார்.

8 ஆண்டுகள் சிறை
8 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற வஞ்சாரா, அதன் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட வஞ்சாரா கடந்த 2016 ஆம் ஆண்டு குஜராத் செல்ல அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து என்கவுண்டர் வழக்குகள் அனைத்தில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார். குஜராத் திரும்பியவுடன் அவர் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தனிக்கட்சி
ஆனால், தனி கட்சியுடன் குஜராத் தேர்தல் களத்தில் களமிறங்கி உள்ளார் வஞ்சாரா. குஜராத்தில் 27 ஆண்டுகளாக ஆட்சி செய்து அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்து வரும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் முயன்று வருகின்றன. இந்த நிலையில் தனது கட்சியை போன்ற கொள்கை கொண்ட இயக்கத்தாலேயே பாஜகவை வீழ்த்த முடியும் என வஞ்சாரா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications