‘ஜெனரல் டயரே திரும்பி போ’: அமித் ஷா-வுக்கு எதிராக குஜராத்தில் ஒலிக்கும் கோஷம்

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil
அமித் ஷா
Getty Images
அமித் ஷா

இந்தியாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான அமித் ஷா தான் பிரதமர் மோடிக்கு அடுத்தப்படியாக முக்கியமான தலைவராக கருதப்படுகிறார். ஆனால் அவர், தன்னுடைய சொந்த மாநிலமான குஜராத்தில், இந்த தேர்தல் நேரத்தில் மிக கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகிறார். அதோடு இல்லாமல், சுதந்திரத்துக்கு முன்பு, பஞ்சாப்பில் பல்லாயிரம் இந்தியர்களை கொன்று குவித்த ஜெனரல் டயருடன் ஒப்பிடப்பட்டு இருக்கிறார். ஏன் அமித் ஷா-வுக்கு இந்த எதிர்ப்பு? ஏன் அவர் ஜெனரல் டயருடன் ஒப்பிடப்படுகிறார்? பிபிசி செய்தியாளர் ரோக்ஸி கக்டேகர், இதற்கான காரணத்தை கூறுகிறார்.

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சார தொடக்க நிகழ்வு அது. அந்த மாநிலத்தில் பா.ஜ.க 1990-லிருந்து ஆட்சியில் இருக்கிறது. ஆனால், அக்டோபர் 1 -ம் தேதி, கரம்சாத்தில் நிகழ்ந்த அந்த நிகழ்வு, பா.ஜ.கவுக்கு உவப்பானதாக இல்லை. ஆம், அந்த தேர்தல் பிரச்சார தொடக்க நிகழ்வு அமளியில் முடிந்தது.

அந்த நிகழ்வில், அவர் பிரச்சாரத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தபோது, சிலர் அவருக்கு எதிராக, பி.ஜே.பி ஒழிக என்றும், ஜெனரல் டயரே வெளியே போ' என்றும் கோஷமிட்டு, அந்த நிகழ்வில் குறுக்கிட்டனர்.

போலீஸ் அவர்களை கைது செய்தது. பின் ஊடகத்திடம் பேசிய போலீஸ், அவர்கள் அனைவரும் பட்டிதர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றது.

பட்டிதர்களும், அவர்களது கோரிக்கையும்

வைரத்துக்கு பாலிஷிடும் இந்தியாவின் செல்வாக்கான தொழில்,குஜராத் மக்கள் தொகையில் இருபது சதவீதம் இருக்கும் பட்டிதர்களிடம்தான் இருக்கிறது. இது மட்டுமல்ல, பட்டிதர் மக்கள்தான் குஜராத்தில் வளமான தொழிலதிபர்கள் மற்றும் விவசாயிகள்.

ஆனால், அவர்கள் தங்களுக்கு கல்லூரிகளில் இடம் மறுக்கப்படுவதாக கூறுகிறார்கள்.

தங்களுக்கு இடம் மறுக்கப்படுவதற்கு இடஒதுக்கீடு முறைதான் காரணமென்கிறார்கள்.

பா.ஜ.க பட்டிதர்களின் போராட்டத்தை குறைத்து மிதிப்பிட்டுவிட்டது. சமூகத்துக்குள் பிளவை உண்டாக்கி, காங்கிரஸ் கட்சி அரசியல் லாபம் அடைய பார்க்கிறது என்றும் அந்தக் கட்சி குற்றஞ்சாட்டியது.

பிபிசியிடம் இதுக் குறித்து பேசிய குஜராத் உள்துறை அமைச்சர் பிரதீப்சின் ஜடேஜா, "காங்கிரஸ் 1990 -ம் ஆண்டு பாஜகவிடம் ஆட்சியை பறிக்கொடுத்தது. அப்போதிலிருந்தே, அதனால் பாஜகவுடன் நேரடியாக மோத முடியவில்லை. அதனால் வாக்காளர்களை திசை திருப்ப பார்க்கிறது." என்றார்.

ஜெனரல் டயருடன் ஓர் ஒப்பீடு

பட்டிதர் சமூகம் 2016-ம் ஆண்டிலிருந்து, பா.ஜ.க தலைவரை ஜெனரல் டயருடன் ஒப்பிட்டு பேசி வருகிறது.

தங்கள் சாதியையும் இடஒதுக்கீடு பட்டியலில் கொண்டுவர வேண்டும் என்று ஆகஸ்டு 2015-ல் பட்டிதர்கள் நடத்திய போராட்டம் கடுமையான போலீஸ் நடவடிக்கையை சந்தித்தது.

பட்டிதர்களின் போராட்டத்தை முன்னெடுத்த ஹர்திக் பட்டேல், போராட்டக்காரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஜாலியன் வாலாபாக் படுகொலையுடன் ஓப்பிட்டு இருந்தார்.

ஹர்திக் பட்டேல்
Getty Images
ஹர்திக் பட்டேல்

பஞ்சாப் ஜாலியன் வாலாபாக்கில் ஜெனரல் டயரின் படை அமைதியான போராட்டக்காரர்களை நோக்கி சுட்டதில் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தார்கள்.

பிபிசியிடம் பேசிய ஹர்திக் பட்டேல், "2015-ல் நடந்தது ஒரு அமைதியான போராட்டம். தங்களின் உரிமையை வலியுறுத்தி லட்சக்கணக்கான பட்டிதர்கள் திரண்டு இருந்தார்கள். ஆனால், போலீஸ் அவர்களை கலைக்க, அவர்கள் மீது வன்முறையை ஏவியது. இதனால், பட்டிதர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் பகுதிகளில் வன்முறை வெடித்தது. 9 பேர் இறந்தார்கள். அதில், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் மட்டும் 8 பேர். ஒருவர் இன்னும் கவலைக்கிடமாக இருக்கிறார்." என்று கூறினார்.

அதன் பின் நடந்த போராட்டங்களில், அமித் ஷா ஜெனரல் டயருடன் ஒப்பிடப்பட்டார்.

கடந்த செப்டம்பர் மாதம், அமித் ஷா ஒரு கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, கூட்டத்திலிருந்து 'அமித் ஷாவே திரும்பி போ என்ற கோஷம் எழுந்தது. இதனால், அவர் தன் உரையை பாதியிலேயே முடித்துக் கொண்டு சென்றார்.

இந்த போராட்டம் குறித்து நம்மிடம் பேசிய பட்டிதர் அனாமட் அந்தோலான் சமிதியின் சூரத் பகுதி ஒருங்கிணைப்பாளர் அல்பேஷ் கத்தாரியா, "செப்டம்பர் 9, 2016-ல் நடந்த கூட்டத்தில், அமித் ஷா உரையாற்றிக் கொண்டிருந்த போது ஏறத்தாழ 150 இளைஞர்கள் ஜெனரல் டயரே திரும்பி போ' என்று கோஷமிட்டார்கள். அந்த கூட்டத்தில்தான் முதன்முறையாக பா.ஜ.க தலைவர் ஜெனரல் டயருடன் ஒப்பிடப்பட்டார்."

"வைர பாலீஷ் மையமாக இருக்கும் சூரத்தில், 'ஜெனரல் டயரே திரும்பி போ ' என்று சுவரொட்டிகள் அதிகளவில் ஒட்டினோம். அதன் பின், பட்டிதர்கள் எந்த தயக்கமும் இல்லாமல், அமித் ஷாவை ஜெனரல் டயருடன் ஒப்பிட்டனர்." என்கிறார் பட்டிதர் தலைவர் வருண் பட்டேல்.

அமித் ஷா
Getty Images
அமித் ஷா

அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் வணிகம் படித்த வருண், 2015 போராட்டக்காரர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை, குருதி படிந்த அந்த நிகழ்வை ஜாலியன் வாலாபாக் நிகழ்வுடன் தன்னால் ஒப்பிட முடிகிறது என்கிறார்.

வருண் கூறுகிறார், "ஆகஸ்ட் 25, 2015 மாலை முதல் அடுத்த நாள் பின்னிரவு வரை, மிக மோசமாக பட்டிதர்கள் தாக்கப்பட்டார்கள். சுடப்பட்டார்கள். போலீஸ் மீதான அச்சத்தின் காரணமாக பட்டேல் சமூகத்தைச் சேர்ந்த பலர் வீட்டை விட்டு வெளியேறினர்." என்றார்.

பட்டேல் தலைவர்களில் ஒருவரான ரேஷ்மா பட்டேலும் இந்த ஒப்பீட்டில் தவறில்லை என்கிறார்.

அமித் ஷா வை தங்கள் கட்சியின் முக்கிய தலைவராக மற்றும் சாணக்கியராக பா.ஜ.க கருதுகிறதென்றால், எங்களுக்கு அமித் ஷாவை ஜெனரல் டயர் அடைமொழியுடன் அழைக்க உரிமை இருக்கிறது என்கிறார் ரேஷ்மா.

மேலும் அவர், "ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கும், 2015-ம் ஆண்டு போராட்டத்தில் எங்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களிலும், அதிகாரம் படைத்தவர்கள், அதை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள்."

பட்டிதர் அனாமட் அந்தோலான் சமிதியின் செய்தி தொடர்பாளர் அடுல் பட்டேல், " இது போராட்டத்தின் அளவு, அதன் தீவிரம் குறித்த ஒப்பீடல்ல . இது இரண்டு சம்பவங்களிலும், தங்கள் உரிமைகளுக்காக போராடிய, ஆயுதமற்ற சாமன்ய மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு இருக்கிறது." என்றார்.

போராட்டங்களில், கூட்டங்களில் அமித் ஷாவை டயருடன் ஒப்பிடுவது, கூட்டத்தை எழுச்சி அடைய செய்கிறது என்கிறார் உள்ளூர் பட்டேல் தலைவர்.

பிற செய்திகள்


BBC Tamil
English summary
People of Gujarat raised slogans against BJP chief Amit Shah comparing him with General Dyer.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற