• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

தாலிபன்: சிறிய வளைகுடா நாடான கத்தாரை வலுவான மத்தியஸ்த மையமாக மாற்றிய "ஸ்மார்ட் பவர்" உத்தி

By BBC News தமிழ்
|
கத்தார்
Getty Images
கத்தார்

பிடிவாதமான சர்வாதிகாரிகள், மன்னர்கள் அல்லது அரசியல்வாதிகளை விட இஸ்லாமியவாத தீவிரவாதிகளுடன் பேசுவது எளிதானது மற்றும் லாபகரமானது என்பதை கத்தார் நீண்ட காலத்திற்கு முன்பே உணர்ந்தது என்று சொல்ல முடியாது. அப்படியிருந்தாலும், ராஜதந்திர மற்றும் அரசியல் ரீதியாக கத்தாருக்கு இது ஒரு பெரிய வெற்றியாகும்.

சுமார் மூன்று லட்சம் மக்கள்தொகை கொண்ட 4471 சதுர மைல்கள் கொண்ட இந்த சிறிய நாட்டின் 'ராஜதந்திர' வெற்றிகளைப் பார்ப்போம். பட்டியல் நீளமானது, ஆனால் சில விஷயங்களை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.

2008 ல் ஏமன் அரசுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கத்தார் மத்தியஸ்தம் செய்தது (சண்டை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்பது வேறு விஷயம்). 2008 ல் லெபனானின் போரிடும் பிரிவுகளுக்கு இடையே மத்தியஸ்த பேச்சுவார்த்தை, அதைத் தொடர்ந்து 2009 ல் ஒரு கூட்டணி அரசு.

2009 ஆம் ஆண்டில், கிளர்ச்சியாளர்கள் பிரச்சனையில் சூடான் மற்றும் சாட் இடையேயான பேச்சுவார்த்தையில் அந்த நாடு பங்கேற்றது. 2010 ஆம் ஆண்டில், ஜிபூத்தி மற்றும் எரித்ரியா இடையே எல்லையில் ஆயுத மோதலைத் தொடர்ந்து, ஒரு மத்தியஸ்தராக செயல்பட கத்தார் ஒப்புக்கொண்டது. இது ஆப்பிரிக்க கூட்டணியால் மிகவும் பாராட்டப்பட்டது.

இதுமட்டுமல்லாமல், 2011 ஆம் ஆண்டில், தோஹா ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் தார்ஃபூர் ஒப்பந்தம், சூடான் அரசுக்கும் கிளர்ச்சி குழுவான லிபரேஷன் அண்ட் ஜஸ்டிஸ் இயக்கத்திற்கும் இடையே கத்தாரின் மத்தியஸ்தத்துடன் கையெழுத்திடப்பட்டது.

2012 ஆம் ஆண்டில், அமைதி மற்றும் இடைக்கால அரசை அமைப்பதற்கான ஹமாஸ் மற்றும் ஃபதாஹ் குழுக்களுக்கிடையிலான ஒப்பந்தத்தில் கத்தார் முக்கிய பங்கு வகித்தது. மேலும் இந்த ஒப்பந்தமும் தோஹாவில் கையெழுத்திடப்பட்டது. ஆனால் தாலிபன்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான, ஆப்கானிஸ்தானில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறும் உடன்படிக்கையில் மத்தியஸ்தம் என்பது இப்போதெல்லாம் அதிகமாக பேசப்பட்டுவரும் ஒன்றாக, புதிய சரித்திரத்தை படைத்துள்ளது.

கத்தார் தலைநகர் தோஹாவில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கா, குறிப்பிட்ட தேதியில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

அமெரிக்கா வெளியேறிய பிறகு காபூலை யார் ஆட்சி செய்வார்கள் என்று இதில் குறிப்பிடவில்லை என்றாலும், ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி முதல் தாலிபன் தலைவர் அகுந்த்ஸாதா வரை, அரியணையில் யார் அமரப்போகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அது செயல்முறையின் வேகம் பற்றியதுதான். இந்த மாற்றங்கள் எவ்வளவு வேகமாக நடக்கும் என்பதே இப்போதுள்ள கேள்வி..

How Smart Power Qatar becomes a game changer in Taliban victory
Getty Images
How Smart Power Qatar becomes a game changer in Taliban victory

கத்தாரின் ராஜதந்திரம் ஒரு வெற்றிக் கதையாகப் பார்க்கப்பட வேண்டும் என்றும், உலகின் பெரிய மற்றும் சிறிய சக்திகள் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் காய்த்-இ-ஆஸம் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் பொலிடிக்ஸ் அண்ட் இண்டர்நேஷனல் ரிலேஷன்ஸின் உதவிப் பேராசிரியர் டாக்டர் சையத் கந்தீல் அப்பாஸ் கூறுகிறார். ஒரு சிறிய நாடு தனது ஒருமைப்பாட்டின் அடிப்படையில் ஒரு பெரிய சர்வதேச மற்றும் பிராந்திய வீரராக முடியும் என்கிறார் அவர்.

சுதந்திரத்திற்குப் பிறகு அதாவது கத்தாரின் முன்னாள் கலீஃபா ஹமாத்-பின்-கலிபா-அல்-சானி தனது தந்தையிடமிருந்து ஆட்சியை கைப்பற்றிய பிறகு அவர் எந்த முதலீடு செய்தாலும், அது லாபகரமானது என்பதை நிரூபித்தார். அந்த முதலீடு ஒரு ராஜதந்திர அளவில் செய்யப்பட்டிருந்தாலும், நிதி சம்மந்தமாக இருந்தாலும், இரண்டிலுமே நன்மைகள் உள்ளன என்று டாக்டர் கந்தீல் குறிப்பிட்டார்.

டாக்டர் கந்தீல் இதை ஒரு உதாரணமாகக் குறிப்பிடுகிறார். 'முதலில் அவர் ஐரோப்பாவில் அதிக முதலீடு செய்தார், கால்பந்து கிளப்புகள் மற்றும் ஹோட்டல்களில் பணம் முதலீடு செய்தார், இதன் அடிப்படையில் அவர் ஒரு மென்மையான பிம்பத்தை உருவாக்கினார் மற்றும் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற சக்திகளுடன் நல்ல உறவை உருவாக்கினார். கத்தாரில் உள்ள அல்-அதீத் விமானப்படை தளம் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதிலிருந்து பணம் சம்பாதிக்கிறார்கள். அதன் மூலம் அரசியல் முக்கியத்துவமும் கிடைக்கிறது."

"மற்ற விஷயங்கள் உள்ளன. ஆனால் சர்வதேச அரங்கில் அவர்கள் முத்திரை பதிக்க சிறந்த கருவி அவர்களின் அல் ஜசீரா நெட்வொர்க். அல் ஜசீரா, பத்திரிகை கலாச்சாரத்தை மாற்றியது மட்டுமல்லாமல் முதன்முறையாக ஒரு நெட்வொர்க் , அரசு அல்லாத அதிகார அமைப்பை (non state actor) முன்னுக்குக் கொண்டு வந்தது. இதனால் பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் கத்தார் மென்மையான சக்தியாக உருவெடுத்தது,"என்கிறார் அவர்.

காயித்-இ-ஆஸம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் இந்த மாற்றத்திற்கு மத்திய கிழக்கில் ஏற்பட்ட 'அரபு எழுச்சி' ( அரசுகளுக்கு எதிரான புரட்சி) காரணம் என்று கூறுகிறார். இது மத்திய கிழக்கில் புதிய சுதந்திர மற்றும் சிந்தனையின் புதிய அலைகளை உருவாக்கியுள்ளது.

"அரபு எழுச்சியின்போது, கத்தாரிடம் இரண்டு வழிகள் இருந்தன. பேரரசர்கள் மற்றும் சர்வாதிகாரிகளின் பக்கம் நின்று அவர்கள் கீழ் அமைதியாக நடப்பது அல்லது அரசு அல்லாத அதிகார அமைப்புகளுடன் செல்வது. கத்தார் இரண்டாவது தேர்வை மேற்கொண்டது என்று நான் நினைக்கிறேன் கத்தார் பல்வேறு நாடுகளில் ஜனநாயகத்தின் பெயரில் போராடும் குழுக்களை ஆதரிக்கத் தொடங்கியது."

கத்தார் எப்போதும் இக்வான்-உல்-முஸ்லிமூனை ஆதரித்தது. பின்னர் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனத்தை ஆதரித்தது. அதே நேரத்தில் அது சிரியாவிலும் முக்கிய பங்கு வகித்தது. குறிப்பாக வடக்கு சிரியாவை துருக்கி தாக்கியபோது, கத்தார் அதை முழுமையாக ஆதரித்தது. இவை அனைத்தும் அந்த நேரத்தில் வாஷிங்டன் மற்றும் மத்திய கிழக்கில் 'ஸ்டேடஸ் கோ'( நடப்பு நிலையை பராமரித்தல்)வுக்கு எதிராக இருந்தது. கத்தார் ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி எதிர் திசையில் நகரத் தொடங்கியது.

பல்வேறு அரசுகளின் எதிர்ப்பை கத்தார் எதோ ஒரு காலகட்டத்தில் எதிர்கொண்டது உண்மைதான். ஆனால் அது பொதுவில் பரவலாக பாராட்டப்பட்டது மற்றும் ஒரு தனித்துவமான சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றது.

தாலிபன்
Getty Images
தாலிபன்

கத்தார் இரானுடன் நெருக்கமாக இருப்பதாகவும், அல் ஜசீரா மூலம் இப்பகுதியில் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி, செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து மற்றும் பஹ்ரைன், கத்தாருடனான உறவை 2017 இல் முறித்துக்கொண்டன. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் கத்தார் மறுக்கிறது. உறவை முறித்துக் கொண்ட நாடுகள் பின்னர் உறவுகளை மீண்டும் நிலைநாட்டினாலும் அந்த உறவுகள் இன்னும் நெருக்கமாக இல்லை என்றே தோன்றுகிறது..

கத்தார் மற்றும் 'ஸ்மார்ட் பவர்'

2007 ஆம் ஆண்டில், அமெரிக்க அரசியல் நிபுணர் ஜோசப் நை தனது கோட்பாட்டில், ஸாஃப்ட் பவர் (மற்றவர்களின் விருப்பங்களை மாற்றும் திறன்) மற்றும் ஹார்ட் பவர் (பலம் மற்றும் சக்தியுடன் ஒருவரின் இலக்குகளை அடையும் திறன்) ஆகியவற்றை இணைத்து, ஒரு ஸ்மார்ட் பவர் கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். ஸ்மார்ட் பவர் என்பது மென்மையான மற்றும் கடின சக்தியை இணைப்பதன் மூலம் உங்கள் இலக்குகளை அடைய வைக்கும் திறன் கொண்டதாகும். அழுத்தம் கொடுத்தல் தேவைப்பட்டால் இழுவை சக்தியை பயன்படுத்தல், பல்ப்பிரயோகம் தேவையென்றால் அதையும் செய்வது, புதிய கூட்டணிகள் மற்றும் அமைப்புகளை ஆதரித்தல் ஆகியவை இதில் அடங்கும்.

இப்போது ஹார்ட் பவரின் சகாப்தம் முடிவடைந்து வருகிறது மற்றும் மென்மையான சக்தியின் சகாப்தம் துவங்குவதாக டாக்டர் கந்தீல் தெரிவிக்கிறார்.

"இப்போது கத்தாரும் ஸ்மார்ட் சக்தியை முன்வைக்க முயல்கிறது என்று நினைக்கிறேன். எல்லா அரபு நாடுகளும் மேற்கு அல்லது அமெரிக்க சார்பு கொள்கையை ஏற்க முயன்றபோது, கத்தார் ஒரு சுதந்திரமான மற்றும் நடுநிலையான கொள்கையை ஏற்க விரும்பியது. அதாவது ஒருபுறம், தன் சுதந்திரத்தை வெளிப்படுத்துதல் மற்றும் நடுநிலை கொள்கையை கடைப்பிடித்தல். பிராந்திய அமைதி மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை நோக்கி செல்வதே அதன் முக்கிய குறிக்கோளாக இருந்தது."

" இந்த விஷயங்கள் அனைத்துமே 'ஸ்டேடஸ் கோ'வுக்கு எதிராக நடக்கின்றன. எனவே, அவர்கள் அல் ஜசீராவைப் பயன்படுத்தியபோது, இரண்டு விஷயங்கள் முன்னால் வந்தன. ஒன்று அல் ஜசீரா நெட்வொர்க் மூலம் புரோக்கிங் இன்ஸ்டிடியூஷன் மற்றும் கிளிண்டன் ஃபவுண்டேஷனுக்கு அதிக நன்கொடை அளித்து கத்தார்,மென்மையான உருவத்தை உருவாக்கியது. மேற்கத்திய நாடுகளில் அதிக முதலீடும் செய்தது. இதன்காரணமாக, பிராந்திய சக்திகள் கத்தாரை தங்களுக்கு ஒரு அச்சுறுத்தலாகக் கருதத்தொடங்கின. "

"மறுபுறம், அல் ஜசீரா அரசு இல்லாத சக்திகளை சித்தரிக்கும் விதம் மற்றும் முதன்முறையாக தீவிரவாதிகள் மக்களின் தலையை துண்டித்துக் கொல்வதைக் காட்டுவது போன்றவை, முஸ்லிம்கள் இப்படித்தான் செய்வார்கள் என்ற மேற்கத்திய நாடுகளின் கருத்தை நிரூபிப்பது போல இருப்பதாக இரான் சுட்டிக்காட்டுகிறது. இதை எல்லாம் அவர்களே செய்வதற்குப் பதிலாக, அல் ஜசீரா மூலம் செய்து முடித்தார்கள். இந்த பார்வையை மனதில் வைத்து, பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரை மேற்கத்திய நாடுகள் அறிவித்தன என்று இரான் நம்புகிறது."

தாலிபன் மற்றும் கத்தார்

கத்தாரின் ஸ்மார்ட் பவர் கொள்கைக்கு சமீபத்திய உதாரணம் ஆப்கானிஸ்தான். கத்தாரின் துணிச்சலான மற்றும் அயராத மத்தியஸ்தம் தான் அமெரிக்காவுக்கும் தாலிபன்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தத்திற்கு வழிவகுத்தது. பின்னர் தாலிபன் காபூலைக் கைப்பற்றியது. அமெரிக்காவும் அங்கிருந்து வெளியே வந்தது.

தாலிபன்
Getty Images
தாலிபன்

"கத்தார் தன்னுடைய அளவு மற்றும் எடையை விட அதிகமான எடையைத்தூக்க முயற்சிப்பதாக சிலர் நினைக்கிறார்கள், அவ்வாறு செய்வது சில நேரங்களில் சிறிய அரசுகளை அழித்துவிடும். ஆனால் இது சர்வதேச புரிதல் இல்லாமல் நடந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அது மட்டுமல்லாமல் அமெரிக்கா காட்டிய பச்சைக்கொடியின் அடிப்படையில், கத்தார் அல்-காய்தா, ஐஎஸ்ஐஎஸ், ஹமாஸ், ஹிஸ்புல்லா, இக்வான்-உல்-முஸ்லீம் மற்றும் தாலிபன்களுடன் நல்ல உறவைப் பேணி வருகிறது.சர்வதேச சக்திகளுக்கும், அரசு அல்லாத சக்திகளுக்கும் இடையே புரிதல் இடைவெளி எதுவும் இல்லாமல் இருப்பதற்காவே இந்த நடவடிக்கை,"

"கத்தார் ஒரு பாலம். ஒரு பக்கத்தில் சர்வதேச சக்திகள், மறுபுறம் அரசு அல்லாத சக்திகள், மற்றும் நடுவில் கத்தார். இப்போது தாலிபன்களுடன் கத்தார் மட்டுமே தொடர்பு கொள்ளும் வழிமுறையாக உள்ளது. அதாவது யார் இணைந்தாலும் தாலிபன்கள் பேச விரும்புகிறார்கள். கத்தார் அவர்களை பேச வைக்கிறது. தாலிபன்களின் அணுகுமுறையை மாற்றுவதில் அது ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்., கத்தாரில் இருந்தபடி அவர்கள் தனதுமுழு செயல்தந்திர வழிமுறைகளையும் மாற்றி தங்களுக்கென ஒரு மென்மையான உருவத்தை உருவாக்கினர். ஆப்கானிஸ்தானில் அவர்கள் அடைந்த வெற்றிக்கு கத்தார்தான் காரணம்."

இது அனைத்தும் ஒரு முக்கோணம் போல் தெரிகிறது. அமெரிக்கா, கத்தார் மற்றும் தாலிபன்கள், ஒருவரை ஒருவர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள், இதனால் அனைவரும் பயனடைகிறார்கள்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்காசிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் அஃப்தாப் கமால் பாஷாவும், ராஜதந்திரத்தில் 'ட்ராக் ஒன் மற்றும் டூ' என்பது அடிப்படை கொள்கைகள் என்று நம்புகிறார்.

ட்ராக் ஒன்னில், இரு தரப்பினரும் அதாவது புட்டோ மற்றும் இந்திரா காந்தி சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைப் போல உட்கார்ந்து பேசுகிறார்கள். ட்ராக் டூவில், மூன்றாவது தரப்பு நாட்டின் பெரிய அமைப்பு, பேச்சுவார்த்தைகளில் அதிகாரபூர்வமற்ற முறையில் பங்கேற்கிறது.

இதேபோல், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுடன் முழுமையான முறிவை அமெரிக்கா விரும்பவில்லை. எனவே அது எகிப்தையும் சில சமயங்களில் கத்தாரையும் பயன்படுத்துகிறது. இதேபோல், அமெரிக்கா பல ஹாட்ஸ்பாட்களில் நேரடியாக தலையிட விரும்பவில்லை. எனவே அது சூடான், லிபியா, சோமாலியா அல்லது ஆப்கானிஸ்தான் என்று எதுவாக இருந்தாலும் கத்தாரை பயன்படுத்துகிறது.

தாலிபன்
EPA
தாலிபன்

அதேபோல் 2010 ல், அமெரிக்காவின் அனுமதியுடன் ஷேக் தமீமின் தந்தை ரகசியமாக தாலிபன் பிரதிநிதிகளை நாட்டிற்குள் நுழைய அனுமதித்து அவர்களுக்கு ஆடம்பரமான வீடுகள் மற்றும் வசதிகளை வழங்கினார். தாலிபன்களின் அலுவலகம் அங்கு திறப்பதற்கு 2013 -ல் அனுமதிக்கப்பட்டபோது இது தெரியவ்ந்தது.

2013 முதல், அமெரிக்காவிற்கும் தாலிபன்களுக்கும் இடையே ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன, கலீல்சாதா ஆட்சிக்கு வந்த பிறகு கத்தார் அதை நடத்துகிறது என்று தெரியவந்தது. காலித் மஷால், செச்சன்யா மற்றும் விகோர் தலைவர்களுடனும் கத்தார் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது.

அமெரிக்கா, இந்த குழுக்களிடம் பொதுவில் வெளிப்படையாகப் பேச முடியாத அளவுக்கு உள்நாட்டில் பல அழுத்தங்கள் உள்ளன, ஆனால் அதே நேரத்தில் அது 'வாய்ப்பின் சாளரத்தை' திறந்து வைக்க விரும்புகிறது, மேலும் கத்தார் மூலம் அதை செய்கிறது..

கத்தாருக்கு அமெரிக்கா தேவைப்படுகிற அளவுக்கு அமெரிக்காவுக்கு கத்தார் தேவையா?

கத்தார் அமெரிக்காவின் முழு ஆதரவைக் கொண்டுள்ளது என்று பேராசிரியர் பாஷா பதிலளித்தார்,

"தாலிபன்களுக்காக கத்தார் என்ன செய்தாலும் அது அமெரிக்காவின் ஆதரவுடன் செய்யப்படுகிறது. இரண்டாவதாக, கத்தாரிடம் இயற்கைஎரிவாயு காரணமாக நிறைய பணம் உள்ளது.அல்- சைனி குழு அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதரவுடன் பிராந்திய ராஜதந்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ நாடுகள் ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் தூதரகங்களை அகற்றிவிட்டன. கிட்டத்தட்ட அவை அனைத்தும் தோஹாவிலிருந்து செயல்படுகின்றன. காபூலில் உள்ள கத்தார் தூதரகம் இன்னும் திறந்தே உள்ளது."என்று அவர் குறிப்பிட்டார்.

காபூலில் இருந்து மக்களை மீட்பதில் கத்தாரின் பங்கு

காபூலில் இருந்து அகதிகளை வெளியேற்றுவதில் கத்தாரின் பங்கு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. காபூலில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் 40 சதவிகிதம் பேர் கத்தார் வழியாக சென்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய சுமார் 43 ஆயிரம் பேர் தங்கள் நாடு வழியாக சென்றுள்ளதாக கத்தார் கூறுகிறது. கத்தாரில் தற்போது ஆயிரக்கணக்கான ஆப்கான் அகதிகள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் 2022 ஃபிஃபா உலகக் கோப்பைக்காக கட்டப்பட்ட இடங்களில் வாழ்கின்றனர். அவர்களில் ஒருவர் ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர் அகமது வலி சர்ஹதி. காபூலில் இருந்து உயிருடன் தப்பித்த அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர்.

தான் காபூலைச் சேர்ந்தவர் என்றும், அசோசியேட்டட் பிரஸ், தோலோ நியூஸ் மற்றும் பிற ஏஜென்சிகளுக்கு காந்தஹார், ஹெல்மண்ட் மற்றும் உருஸ்கன் ஆகிய இடங்களில் இருந்து சுயாதீன அறிக்கையிடல் செய்வதாகவும் பிபிசியிடம் பேசுகையில் கூறினார்.

தாலிபன்கள் நாட்டின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றியபோது ஆகஸ்ட் 13 அன்று கந்தஹாரை விட்டு வெளியேறியதாகவும், காபூலில் தாலிபன்கள் நுழைந்தபோது தான் அங்கு இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

ஆகஸ்ட் 15 அன்று, பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் சமூகத்திற்கு (CPJ) மின்னஞ்சல் அனுப்பினேன், என் நிலைமையைச் சொன்னேன். என்ன நடக்கும் என்று நான் மிகவும் அச்சம் அடைந்தேன். CPJ ஒரு மின்னஞ்சல் அனுப்பியது, 22 ஆகஸ்ட், 5 மணிக்கு காபூலில் உள்ள செரீனா ஹோட்டலில் இருந்து ஹமீத் கர்சாய் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவேன் என்று அந்த செய்தி தெரிவித்தது. ஹோட்டலில் இருந்து விமான நிலையத்திற்கு கத்தாரியர்கள் என்னை அழைத்துச் சென்றனர். சிபிஜே, கத்தார் வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டிருந்தது. மேலும் எனது அடையாள ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட்டை சரிபார்த்தனர். அதன் பிறகு, அவர்கள் எங்களை நான்கு பேருந்துகளில் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்."

"நாங்கள் பத்து மணிக்கு ஹமீத் கர்சாய் விமான நிலையத்தை அடைந்தோம். எங்களைப் பாதுகாக்க தாலிபன் வாகனங்கள் முன்னால் இருந்தன. கத்தார் அதிகாரிகளின் சுமார் ஐந்து வாகனங்களும் எங்களுடன் வந்தன. தாலிபனும் கத்தாரும் நல்ல உறவைக் கொண்டுள்ளன. தாலிபன் கத்தாரின் பேச்சையும், கத்தார் தாலிபனின் பேச்சையும் கேட்கிறது. "

கத்தார் மக்களுக்காக அகமதின் வாயிலிருந்து பிரார்த்தனைகள் மட்டுமே வெளிவருகின்றன, கடினமான சூழ்நிலைகளில் கத்தார், ஆப்கானிஸ்தான் மக்களை முடிந்தவரை ஆதரிக்கிறது.

"முதலில் அவர்கள் எங்களை அமெரிக்க விமானப்படை தளத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து அழைத்துச்செல்லப்பட்டு இப்போது நான் வசிக்கும் ப்ளூ ஸ்கை வில்லா, 2022 கால்பந்து உலகக் கோப்பைக்காக கட்டப்பட்டது."என்று அவர் கூறினார்.

"கத்தார் போன்ற ஒரு நாட்டை நான் பார்த்ததில்லை. நாங்கள் இங்கு அகதிகளாக இருக்கிறோம். ஆனால் அப்படி இருந்தபோதிலும், கத்தாரின் பெரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எங்களைப் பார்க்க வருகிறார்கள், குழந்தைகளுடன் விளையாடுகிறார்கள். அவர்களுக்கு பொம்மைகளையும் உடைகளையும் தருகிறார்கள்."

தாலிபன்
Kareem Jafri
தாலிபன்

இவை எல்லாமே ஒரு சுகமான கனவு போல இருக்கிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.

"கத்தார் மக்கள் இங்கு வந்து எங்கள் வீட்டின் கதவைத் தட்டி, ஏதாவது தேவை அல்லது பற்றாக்குறை இருந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் என்று சொல்கிறார்கள். நாங்கள் இங்கு வந்து பதினொரு நாட்கள் ஆகிவிட்டன. அவர்கள் எல்லாவற்றையும் நாங்களே தருகிறோம் என்று சொல்கிறார்கள். எங்கள் சொந்த வீட்டை விட இங்கே நாங்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறோம். அவர்கள் எங்களை பெற்றோரைப் போல நடத்துகிறார்கள். என்னால் அதை மறக்க முடியாது. "

"எவ்வளவு காலம் இங்கு இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எங்கள் அடுத்த இலக்கு ஜெர்மனி அல்லது மெக்ஸிகோ. எங்களுக்கு ஆவணங்கள் தயாரிக்கப்படும். பின்னர் அமெரிக்கா தான் இறுதி இலக்கு. நான் AP அகதிகள் திட்டத்தில் இருப்பதால், அமெரிக்கா என் கடைசி இலக்கு."என்கிறார் அகமது..

அகமது தொடர்ந்து பாராட்டிக்கொண்டிருக்கும் அரசு அதிகாரி, கத்தார் துணை வெளியுறவு அமைச்சர் லவ்லா அல்-கதிர். ஆனால் அகமது மட்டுமே அவ்வாறு செய்யவில்லை. லவ்லா ஊடகங்களில் எல்லா இடங்களிலும் விவாதிக்கப்படுகிறார். அவர் ஊடகங்களில் தோன்றுவது போலவே கனிவான இதயமும் நட்பு பாவமும் கொண்டவர்.

காபூலில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதில் கத்தாரின் பங்கை லவ்லா உலக அரங்கில் திறமையாக பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். பார்க்கப்போனால், இங்கேயும் அவருடைய பங்கு 'ஸ்மார்ட் பவர்'. ஆனால் கத்தார் மனிதாபிமான அடிப்படையில் இந்த வேலையைச் செய்கிறது என்றும் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும் அவர் மீண்டும் மீண்டும் கூறுகிறார். ஒரு செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இது ஒரு பிஆர் நடவடிக்கை என்று நினைக்க வேண்டாம்.ஏனென்றால், மக்கள் தொடர்புக்கு இதைவிட எளிதான வழிகள் இருக்கின்றன என்றார்.

கத்தார் நாட்டில் வாழும் அகதிகள் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு சேவை செய்வதற்காக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பல பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

ஒரு பதிவில் அவர் எழுதுகிறார், "ஒருவரின் வீட்டை விட்டு வெளியேறுவது எளிதல்ல, யாரும் தங்கள் சொந்த விருப்பத்துடன் வீட்டை விட்டு வெளியேற மாட்டார்கள். விதியானது சிறிது உதவிசெய்ய எங்களை தேர்வு செய்திருப்பதற்காக மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஒன்று எனக்கு நன்றாக புரிகிறது. நான் எதைப் பற்றியும் புகார் செய்யக்கூடாது. நன்றிதான் சொல்ல வேண்டும். "

தாலிபன்களுடனான பேச்சுவார்த்தைக்கான கதவை உலகம் மூடக்கூடாது என்றும் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு தொடர்ந்து உதவ வேண்டும் என்றும் லவ்லா-அல்-கதிர் கூறுகிறார்.

மற்றொரு ட்வீட்டில் அவர், வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் ஆப்கானிஸ்தான் அகதி குழந்தைகளுடன் கால்பந்து விளையாடுவதையும் காட்டினார். இதுதான் கத்தாரின் முகம், கத்தார் அதிகாரிகள் இதை உலகிற்கு காட்ட விரும்புகிறார்கள். தோஹாவில் தாலிபன்-அமெரிக்க பேச்சுவார்த்தையின் போது கூட, கத்தார் அமைதியாக தனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்தியது.

இதேபோல், சில நாட்களில் கத்தார் உதவியுடன், காபூல் விமான நிலையமும் விமான சேவையை மீண்டும் துவக்கும் திறனைப் பெற்றது.

அமெரிக்காவும் தாலிபன்களும் கத்தாரை பயன்படுத்தினார்களா?

கத்தார் உலக அரங்கில் ஒரு நல்ல மத்தியஸ்தராக இருக்க விரும்பினாலும், ஓரளவிற்கு வெற்றி பெற்றிருந்தாலும், உலகளாவிய சக்திகள் மற்றும் தாலிபன்களும் கத்தாரை தங்கள் நோக்கத்தை அடைவதற்கான ஒரு வழிமுறையாக ஆக்கியுள்ளன என்பது ஒரு உண்மைதான் என்று பிராந்திய அரசியலைப் பார்க்கும் பலர் கூறுகின்றனர்.

தாலிபன்களின் உண்மையான விளையாட்டை பாகிஸ்தானும் இரானும் விளையாடியுள்ளன என்று டாக்டர் கந்தீல் குறிப்பிட்டார்.

"ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் பெற்ற கட்டுப்பாட்டில் பாகிஸ்தானும் இரானும் முக்கிய பங்கு வகித்தன என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அவர்கள் ஆப்கானிஸ்தானின் சண்டையிடும் போர்வீரர்கள் மீது தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தினர். அவர்களும் அதை எதிர்க்கவில்லை."என்று கூறினார்.

தாலிபன்
Kareem Jafri
தாலிபன்

இதற்கான காரணத்தை விளக்கிய அவர், ஆப்கானிஸ்தானில் அஷ்ரப் கனியின் அரசு மிகவும் பலவீனமானது மற்றும் தலைமைத் திறன் இல்லாமல் இருந்தது என்று கூறினார். எனவே இந்த இடைவெளி பாகிஸ்தான் மற்றும் இரானால் நிரப்பப்பட்டது மற்றும் எதிர்காலத்தில் இஸ்லாமாபாத் மற்றும் தெஹ்ரான் உண்மையான விளையாட்டை விளையாடும் என்கிறார் அவர்.

"நீங்கள் ஆப்கானிஸ்தான் சமூகத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று பஷ்டூன் மற்றும் மற்றொன்று பஷ்டூன் அல்லாதது. பெரும்பாலான பஷ்டூன் மக்கள் பாகிஸ்தானின் செல்வாக்கின் கீழ் உள்ளனர் மற்றும் உஸ்பெக்குகள், தஜிக்ஸ், ஹசாராக்கள் மற்றும் மற்றவர்கள் உட்பட பஷ்டூன் அல்லாதவர்கள். இரானின் செல்வாக்கின் கீழ் உள்ளனர்."

"தாலிபன்களுக்கான ஒரு ஊடகமாக அல்லது கருவியாக மட்டுமே கத்தார் பயன்படுத்தப்பட்டது என்று நான் நினைக்கிறேன்,"என்று அவர் குறிப்பிடுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
How Smart Power Qatar becomes a game changer in Taliban victory
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X