For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மஹிந்த ராஜபக்ஷ பேட்டி: அழுத்தங்களுக்கு அடிபணிந்து விலக மாட்டேன்

By BBC News தமிழ்
|

(இலங்கை, இந்திய செய்தித் தாள்கள், இணைய தளங்களில் இன்று வெளியான செய்திகளில் முக்கியமான சில செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.)

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் தரப்பினரிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கத்தயார், அதனை விடுத்து அழுத்தங்களுக்கு அடிபணிந்து பதவி விலகப் போவதில்லை என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கட்சித் தலைவர் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், நாட்டின் பொருளாதார, சமூக கூட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்னைகள் மற்றும் முன்னெடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு விலக்கமளிக்கப்படும் எனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், "நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்பதை அரசங்கம் என்ற ரீதியில் ஒருபோதும் மறுக்கவில்லை. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கு நாடாளுமன்றத்தில் சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்தே சகல தரப்பினரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய பிரச்னைக்கு தீர்வு காண எவரும் ஒத்துழைப்பு வழங்க முன்வராததை தொடர்ந்து, புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் தரப்பினரிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க எவ்வித ஆட்சேபனையும் கிடையாது. அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டால் தற்போதைய அரசியல் மற்றும் பொருளதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலினுக்கு மனோ அழைப்பு

இலங்கை தமிழர்கள்
BBC
இலங்கை தமிழர்கள்

இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 200ஆவது வருட நிறைவை முன்னிட்டு, தமிழ் முற்போக்கு கூட்டணி அடுத்த ஆண்டு ஒழுங்கு செய்துள்ள நிகழ்வுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதம விருந்தினராக பங்கேற்க வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் எம்.பி.யுமான மனோ கணேசன் சபையில் தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நிதி அமைச்சர் அலி சப்ரியின் விசேட அறிக்கை மற்றும் சர்வதேச செலாவணி நிதியத்துடனான அவரின் சந்திப்பு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அழைப்பு விடுத்த மனோ கணேசன் மேலும் கூறுகையில், "இந்தியாவின் தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் சில அறிவிப்புக்களை செய்துள்ளார்.

கடனில் சிக்கித்தவிக்கும் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்காகவும் அவர் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். அதனை முன்னெடுப்பதற்காக இந்திய அரசின் அனுமதியையும் இலங்கை அரசின் அனுமதியையும் பெற்றூள்ளார். 40,000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால்மாவு, 137 வகை மருந்துகள் என இலங்கை ரூபாவில் 600 கோடி ரூபாய் பெறுமதியான நிவாரண உதவிகளை அவர் வழங்குகின்றார்.

தமிழ்நாடு முதல்வரின் இந்த நடவடிக்கை இலங்கை தமிழகத்துக்கிடையிலான சந்தேகங்களைப் போக்கும் முதல் அடியாகவே இதனை நான் பார்க்கின்றேன். தென்னிலங்கை மக்களினதும் தமிழ் மக்களினதும் உறவுப்பிணைப்பை தமிழ்நாடு முதல்வர் புரிந்துகொண்டுள்ளார். அவர் ஒரு சமூக நீதிக் காவலர்" என்றார்.

குறுகிய அரசியல் நலன்களுக்காகவே வேலைநிறுத்த ஏற்பாடுகள் - தொழிற்சங்கப் பிரதிநிதிகள்

கோட்டாபய ராஜபக்ஷ
Getty Images
கோட்டாபய ராஜபக்ஷ

குறுகிய அரசியல் நலன்களுக்காக மக்களை அசௌகரியப்படுத்தும் நோக்கத்துக்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்போவதில்லையென பல அத்தியாவசிய சேவை வழங்குநர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர் என, 'தினகரன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

உத்தேசித்துள்ள வேலைநிறுத்தம், தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அல்ல என்றும், பல அரசியல் கட்சிகளின் நலனுக்காகவே மேற்கொள்ளப்படவுள்ளதென்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தவும், மக்களை ஒடுக்குவதும் இந்த வேலைநிறுத்தத்தின் நோக்கமாகும். அதனால் நிலைமையை சரியாகப் புரிந்துகொண்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வது சகல ஊழியர்களினதும் கடமை, பொறுப்பு என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிய வழிமுறைகளைக் கையாண்டு, அரசியல் பிளவுகளிலிருந்து விலகிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வேலைநிறுத்தங்களால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்துவதே இதன் பின்னணியிலுள்ள அரசியல் நோக்கமாகும். இதை உணர்ந்து, நிறுவனங்கள் வீழ்ச்சியடைய இடமளிக்கக் கூடாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 28 ஆம் தேதி நடைபெற்ற வேலைநிறுத்தத்தை பொருட்படுத்தாமல் தமது கடமைகளை ஆற்றிய தொழிலாளர்களுக்குத் தமது நன்றியை தெரிவித்த ஜனாதிபதி, தற்போதைய நிலைமையை புரிந்துகொண்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அனைத்து தொழிற்சங்கங்களையும் கேட்டுக்கொண்டார்.

திமுக ஆன்மிகத்துக்கு எதிரானது என சித்தரித்தால் அடிபணிந்துவிடமாட்டோம் - ஸ்டாலின்

திமுக ஆன்மிகத்துக்கு எதிரானது என்று சித்தரிப்பதால் நாங்கள் அடிபணிந்து போய்விடமாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக, 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவையில் நேற்று அறநிலையத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதிமுக எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன் பேசும்போது, முதல்வர் ஏன் தீபாவளி வாழ்த்து சொல்வதில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், எங்கள் கூட்டணிக்கே மதச்சார்பற்ற கூட்டணி என்றுதான் பெயர் வைத்துள்ளோம். அந்த வகையில்தான் தேர்தலை சந்தித்தோம். தொடர்ந்து அப்படித்தான் இருப்போம். அதில் எந்த சந்தேகமும் உறுப்பினருக்குத் தேவையில்லை.

தற்போது சிலர் திட்டமிட்டு, திமுக ஆன்மிகத்துக்கு எதிராக இருப்பதுபோல சித்தரிக்கின்றனர். அந்த அடிப்படையில், இதை பேரவையிலும் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அதிமுக எம்எல்ஏ விஸ்வநாதன் பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கெல்லாம் நாங்கள் அடிபணிந்துபோக மாட்டோம். தெளிவாகச் சொல்கிறேன், இது பெரியார் ஆட்சி, அண்ணா உருவாக்கிய ஆட்சி, கருணாநிதி வழிநடத்திய ஆட்சி. ஒரே வரியில் சொன்னால் திராவிட மாடல் ஆட்சி" என தெரிவித்தார்.

பாக் நிர்வாக காஷ்மீரில் இருந்து இந்தியப் பகுதிக்குள் நுழைந்தவர் திரும்பி ஒப்படைப்பு

பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதியில் இருந்து இந்தியாவுக்குள் தவறுதலாக நுழைந்த நபர் பாகிஸ்தான் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது தொடர்பாக 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டில் பாதுகாப்பு படையினர் கடந்த 28-ம் தேதி இரவு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஒரு நபர் இந்திய கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைவதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக, துரிதமாக செயல்பட்ட பாதுகாப்பு படையினர் அந்த நபரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரின் கோட்லி பகுதியை சேர்ந்த முகமது ஹசன் என்பது தெரியவந்தது, என்ற தகவலை தினத்தந்தி தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, இது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நல்லெண்ண அடிப்படையில் பிடிபட்ட முகமது ஹசனை இந்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=P-o8cdUQ8xo

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
I will not resign under any pressure, sri lankan political crisis mahinda announce
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X