For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகாவை ஒருதரப்பாக சேர்க்காத ஜெ. அப்பீல் மனு தவறு- தண்டனையை உறுதி செய்க: பி.வி. ஆச்சார்யா

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்த ஜெயலலிதா, கர்நாடகா அரசை ஒருதரப்பாக சேர்க்காதது சட்டப்படி தவறு என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா அதிரடியாக தமது வாதத்தை முன்வைத்தார். மேலும் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆச்சார்யா தமது வாதத்தில் வலியுறுத்தினார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி குன்ஹா. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதமும் எஞ்சிய மூவருக்கும் தலா ரூ10 கோடி அபராதமும் விதித்தார்.

Jaya appeal case: Karnataka justifies trial court verdict

இதனை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி விசாரித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.

இதனிடையே ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங்கை தமிழக அரசு நியமித்தது செல்லாது எனக் கோரி தி.மு.க. பொதுச்செயலர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச், பவானிசிங் நியமனம் செல்லாது; விசாரணைகள் நடத்தி முடிக்கப்பட்டதால் மறுவிசாரணை தேவை இல்லை என்று தீர்ப்பளித்தனர்.

மேலும் பவானிசிங்கின் வாதத்தை நீதிபதி குமாரசாமி நிராகரிக்க வேண்டும்; கர்நாடகா அரசு மற்றும் அன்பழகன் தரப்பு தமது வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வாதங்களின் அடிப்படையில் நீதிபதி தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அன்பழகன் தரப்பு நேற்றே தமது வாதத்தை முன்வைத்தது. இன்று கர்நாடகா அரசு தமக்கான அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யாவை நியமித்தது. அவருக்கு உதவியாக சந்தேஷ் சவுடாவும் நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 9 ஆண்டுகாலம் அரசு வழக்கறிஞராக இருந்தவர் ஆச்சார்யா. கர்நாடகா அரசின் அட்வகேட் ஜெனரலாக 8 முறை பதவி வகித்த மூத்த வழக்கறிஞர். ஜெயலலிதா தரப்பு கடும் நெருக்கடி கொடுத்ததால் தமது அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.

இதன் பின்னர் இன்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் 18 பக்கங்களில் அடங்கிய தமது எழுத்துப்பூர்வ வாதத்தை பி.வி.ஆச்சார்யா தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

  • ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக அரசின் தலையீடு அதிகமாக இருந்ததால் இந்த வழக்கை 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கு மாற்றியது.
  • கர்நாடகாவுக்கு வழக்கை மாற்றிய உச்சநீதிமன்றம், இனி ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் கர்நாடகாதான் முதல் தரப்பு என்று உத்தரவிட்டது.
  • இதனடிப்படையில் 2004ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்துக்கு ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு மாற்றப்பட்ட பின்னர் கர்நாடகாவுக்கே முதல் உரிமை உண்டு.
  • உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதா தமது மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்த போது கர்நாடகா அரசை ஒரு தரப்பாக சேர்த்திருக்க வேண்டும்.
  • கர்நாடகா அரசை ஒருதரப்பாக சேர்க்காத ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவே சட்டப்படி தவறானது.
  • கர்நாடகா அரசை மேல்முறையீட்டு மனுவில் ஒரு தரப்பாக சேர்க்காததன் மூலம் ஜெயலலிதா உள்ளிட்டோர் தங்களது குற்றத்தை ஒப்புக் கொள்வதாகவே அர்த்தம்.
  • பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா உரிய விசாரணைகள் நடத்தி சாட்சியங்களை விசாரித்தே குற்றத்தை உறுதி செய்து தீர்ப்பு அளித்திருக்கிறார்.
  • இதனால் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு சிறைத் தண்டனை, அபராதம் விதித்து நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.
  • இந்த வழக்கில் நீதிமன்றம் அனுமதித்தால் கூடுதலான வாதத்தை முன்வைக்கவும் கர்நாடகா அரசு தயாராக உள்ளது.
  • இவ்வாறு ஆச்சார்யா தமது 18 பக்க வாதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
English summary
‎The Karnataka government has filed its written submissions before the Karnataka High Court in the J Jayalalithaa disproportionate assets case. The submission runs into 18 pages. ‎The Karnataka government has justified the verdict of the trial court which had sentenced J Jayalalithaa to 4 years imprisonment. In the 18 page written statement the government has said that it want to file an additional statement if permitted to do so.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X