For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா வழக்கில் ஆஜராகாமல் இருக்க எப்படியெல்லாம் மிரட்டப்பட்டேன்?: ஆச்சாரியா பேட்டி

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூரு: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முதலாவது அரசு வக்கீலாக ஆஜராகியவர் ஆச்சாரியா. பாஜக, அதிமுகவினர் அளித்த நெருக்கடியால் அந்த பதவியில் இருந்து விலகியதாக அவர் தனது சுய சரிதையில் குறிப்பிட்டு பரபரப்பை கிளப்பியிருந்தார்.

Jaya case: Former public prosecutor Acharya reveals his horrible experience

இந்நிலையில் இந்து நாளிதழுக்கு ஆச்சாரியா அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியுள்ளதாவது:

என்னுடைய சொந்த ஊர் உடுப்பி பக்கம், ஒரு அழகான கிராமம். சென்னை சட்ட கல்லூரியில், சட்டம் பயிலுவதற்காக 1953-ல் மங்களூருவில், ‘மெட்ராஸ் மெயில்' ரயிலேறி சென்னை சென்ட்ரல் போய் இறங்கினேன். புதிய ஊர், புதிய மனிதர்கள், பல வித்தியாசமான கலாச்சாரங்கள் எனக்கு நிறையக் கற்றுக்கொடுத்தது அன்றைய மெட்ராஸ். உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த அனந்த நாராயணன் எனக்கு அப்போது சட்ட‌க் கல்வி போதித்தார். ஐஸ்ஹவுஸ் வெங்கடேஸ்வரா விடுதியில் தங்கியிருந்தேன். அடிக்கடி கடற்கரைக்குப் போவேன்.

இப்போதெல்லாம் மெட்ராஸை நினைத்தால் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குதான் நினைவுக்கு வருகிறது. அங்கிருந்து வரும் யாரும் அதைப் பற்றியே விசாரிக்கிறார்கள். சமீபத்தில் பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயிடம் பேசிக்கொண்டிருந்தபோதுகூட, "சென்னை பக்கம் போயிடாதீங்க சார். அம்மா ஆதரவாளர்கள் உங்கள் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார்கள்" என்று கிண்டல் அடித்தார்.

எவ்வளவு திறமையான வழக்கறிஞராக இருந்தாலும் தீர்ப்பை 100 சதவீதம் சரியாகக் கணிக்க முடியாது. வழக்குகளும் வாழ்க்கை மாதிரிதான். நிறைய ஆச்சரியங்களும் எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்தவை. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைப்பது உறுதி என்று ஊகித்தேன். அது நடந்தது.

ஜெயலலிதா வழக்கிலிருந்து விலகுமாறு பாஜக மேலிடமும் கர்நாடக அரசும் என்னை ராஜினாமா செய்யுமாறு அழுத்தம் கொடுத்திருந்தாலும், நாகரிக‌த்தின் அடிப்படையில் அவர்கள் பெயரை குறிப்பிடவில்லை. ஜெயலலிதா தரப்பை எதிர்த்து வழக்காடும் அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்யும்படி பாஜக மேலிடத் தலைவர்கள் சிலர் எனக்கு தொலைபேசி மூலமாகவும் நேரிலும் நெருக்கடி கொடுத்தார்கள்.

அப்போதைய கர்நாடக பாஜக அரசும்கூட (சதானந்த கவுடா முதல்வர்), "உங்களுக்கு எதற்கு வீண் சிக்கல்? அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அட்வகேட் ஜெனரல் பதவியைத் தொடருங்கள். தேவைப்பட்டால் வேறு சில வசதிகளும் ஏற்பாடு செய்கிறோம்" என அனுதாபம் காட்டுவதுபோல் மிரட்டியது.

நான் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜெயலலிதாவின் வழக்கில் அரசு வழக்கறிஞராகத் தொடர்ந்தேன். இதனால் என் மீது அவர்களுக்குக் கடுங்கோபம் ஏற்பட்டது. ஜெயலலிதாவின் வழக்கு காலத்தில் எனக்கு தினமும் 10 தொலைபேசி மிரட்டல்களாவது வரும். கண்டபடி திட்டுவார்கள். ஒருகட்டத்தில், கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், லோக் ஆயுக்தா நீதிமன்றத்திலும் என் மீது அவதூறு வழக்குகளைத் தொடுத்தார்கள். நீதிமன்ற வளாகத்தில் அவதூறான துண்டறிக்கைகளைப் பரப்புவது, சுவரொட்டிகளை ஒட்டுவது, சாலையில் காரை இடிப்பது போன்று வருவது... இப்படிப் பல வகைகளிலும் தொல்லைகள் வரும்.

எனக்கு மன உளைச்சல் தந்தது இவையெல்லாம் கூட இல்லை, ஜெயலலிதா தரப்பில் தினமும் மனு மேல் மனு போட்டு வழக்கை இழுத்தடித்தார்கள். ஒரு வருஷத்தில் முடிய வேண்டிய வழக்கு முடிவே இல்லாமல் நீண்டது. அதனால்தான், நிம்மதி இழந்து ராஜினாமா செய்தேன்.

நான் கருணாநிதியின் ஆதரவாளர் என்று கூறுவதாக வெளியாகும் செய்திகள், நானே கேள்விப்படாத பொய்யாக இருக்கிறது. கருணாநிதியை இதுவரைக்கும் டிவியில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அன்பழகனின் வழக்கறிஞர்கள் என்னைச் சந்திக்க முயன்றிருக்கின்றனர். ஆனால், நான் மறுத்துவிட்டேன்.

பணம், சொத்து, பதவி, புகழ் எல்லாவற்றையும்விட எனக்கு தர்மமும் என்னுடைய கொள்கையும் முக்கியம். ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். நான் ஒருபோதும் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் இருந்ததில்லை; ஆதரவாகவும் செயல்பட்டதில்லை. அரசு வழக்கறிஞராக என் கடமையைச் செய்தேன். அவ்வளவுதான்.

எனக்கு எதிர்த் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்களைப் பற்றிக் கருத்து சொல்வது சரியாக இருக்காது. ஆனால், ஒரு விஷயம் சொல்லலாம். சொத்துக்குவிப்பு வழக்கை ஜெயலலிதா அணுகிய முறை தவறு. அவர் இத்தனை வருஷங்கள் வழக்கை இழுத்தடித்திருக்கக் கூடாது. அவர் தவறாக வழிநடத்தப்பட்டதாகவே நான் நினைக்கிறேன். 2013-ல் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்த‌ம் மேற்கொள்ளப்படும் முன்பே இந்த வழக்கை முடித்திருந்தால், இதே தீர்ப்பு வந்திருந்தால்கூட ஜெயலலிதா இப்போது சட்டப்பேரவை உறுப்பினராகத் தொடர்ந்திருக்க முடியும். இவ்வாறு ஆச்சாரியா கூறியுள்ளார்.

வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னர் ஒருமுறை ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடியவர். தற்போது உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாதாடி ஜாமீன் பெற்றுத் தந்திருக்கிறார். ஒரு மூத்த வழக்கறிஞரே ஒரே வழக்கில் இப்படி எதிராகவும், ஆதரவாக வாகவும் வாதிடுவதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு,

"இது தவறு. எதிர்கால தலைமுறைக்கு தவறான முன்னு தாரணமாக அமைந்துவிடும். என்னைப் பொறுத்தவரை எல்லாவற்றையும்விட வழக்கறிஞர்க‌ளுக்கு முக்கியம் தர்மம். தான் உண்மை என்று நம்பும் விஷயத்தின் மீதான உறுதியான பிடிப்பு" என்றும் ஆச்சாரியா கூறியுள்ளார்.

மேலும், வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் சிறிதளவேனும் தொழில் தர்மத்தையும் தார்மீக நெறியையும் கடைப்பிடித்து, அறத்தைக் காக்க வேண்டும். இந்திய ஜனநாயகத்தில் நீதித் துறையும் தன்னுடைய மாண்புகளை இழந்துவிட்டால், எளிய மனிதனின் இறுதி நம்பிக்கையாக இங்கு என்ன இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் ஆச்சாரியா.

English summary
Former public prosecutor Acharya reveals his horrible experience he involved when he appeared against Jayalalitha in asset case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X