ஜார்க்கண்ட் தேர்தல்: தொகுதி பங்கீட்டால் இந்தியா கூட்டணியில் பிளவு! ஆர்ஜேடி, இடதுசாரிகள் செம்ம கோபம்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் இடதுசாரி கட்சிகள் தங்களுக்கு சொற்பமான எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ததால் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளன. அதே நேரத்தில் பாஜக கூட்டணி சுமூகமாக தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்து வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 என இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. நவம்பர் 13-ந் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிகள் இணைந்துள்ள இந்தியா கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக கூட்டணியில் பாஜக 68; ஏஜேஎஸ்யூ 10; ஜேடியூ 2, எல்ஜேபி 1 தொகுதியில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி 10 இடங்களைக் கேட்டிருந்தது. ஆனால் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.
இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்து பேசிய முதல்வர் ஹேமந்த் சோரன், காங்கிரஸ்- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இரு கட்சிகளும் 70 தொகுதிகளில் போட்டியிடும்; எஞ்சிய 11 தொகுதிகள் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிகளுக்கு ஒதுக்கப்படும் என கூறியிருந்தார்.
2019-ம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் 31 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸுக்கு இந்த முறை 27 அல்லது 28 தொகுதிகளையே ஒதுக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முடிவு செய்துள்ளதாம். இதனை ஏற்க முடியாது என்கிறது காங்கிரஸ். அதேபோல ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிகளும் மொத்தமே 11 தொகுதிகளை ஒதுக்கினால் எப்படி ஏற்க முடியும்? என கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்பட்டிருக்கிறது என்கின்றனர் மூத்த அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications