For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லீனா மணிமேகலை காளி பட சர்ச்சை: டெல்லி, உத்தர பிரதேச காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு

By BBC News தமிழ்
|

லீனா மணிமேகலையின் 'காளி' ஆவணப்படத்தின் போஸ்டர் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், அதன் ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை மீது டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தான் இயக்கியுள்ள 'காளி' என்கிற நிகழ்த்து ஆவணப்படத்தின் (Performance Documentary) 'ஃபர்ஸ்ட் லுக்' போஸ்டரை சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் லீனா மணிமேகலை பதிவிட்டிருந்தார். இதுதான் தற்போதைய சர்ச்சையின் மையமாக உள்ளது.

அந்த போஸ்டரில் 'காளி' போன்று வேடமணிந்துள்ள பெண், தன் வாயில் சிகரெட்டுடன், கையில் பால்புதுமையினர் (LGBT) கொடியை பிடித்திருப்பது போன்று உள்ளது.

இந்த போஸ்டர் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே அதற்கான எதிர்வினைகள் வெளிவரத் தொடங்கின.

'ArrestLeenaManimekalai' என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ஜூலை 4 அன்று டிரெண்டானது.

டெல்லி, உத்தர பிரதேசத்தில் வழக்குப்பதிவு

இந்நிலையில், 'காளி' ஆவணப்பட போஸ்டர் மத உணர்வுகளை புண்படுத்தியதாக இயக்குநர் லீனா மணிமேகலை மீது திங்கள்கிழமை (ஜூலை 4) டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் ஒருவர் அவருக்கு எதிரான புகாரை பதிவு செய்துள்ளார். காளி பட போஸ்டர் "மிகவும் ஆட்சேபனைக்குரியது" என்று அவர் கூறியிருக்கிறார்.

ஜூலை 2ஆம் தேதி லீனாவால் பகிரப்பட்ட சர்ச்சைக்குரிய போஸ்டர் தொடர்பான தமது புகாரில், ஆவணப்படத்தின் ஆட்சேபனைக்குரிய புகைப்படம் மற்றும் கிளிப்பிங்கை தடை செய்யுமாறு வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் கோரியுள்ளார்.

காளி தேவியின் வேடமிட்ட பெண் ஒருவர் சிகரெட் பிடிப்பது போன்ற அந்த போஸ்டர், இந்து சமூகத்தினரின் உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் புண்படுத்துவதாக அவர் வினீத் ஜிண்டால் கூறியுள்ளார்.

அதேபோன்று, டெல்லி காவல்துறையின் சிறப்பு ஐ.எஃப்.எஸ்.ஓ பிரிவும் லீனா மணிமேகலை மீது ஐபிசி 153 ஏ மற்றும் 295ஏ ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

https://twitter.com/ANI/status/1544176611322318848

மேலும், உத்தர பிரதேசத்திலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதவி ஆணையர் அகிலேஷ் சிங் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

https://twitter.com/ANINewsUP/status/1544176039814828032

இதுதவிர, லீனா மணிமேகலையின் 'காளி' ஆவணப்படம் திரையிடப்படும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இந்த "ஆத்திரமூட்டும் வகையிலான" போஸ்டரை திரும்பப் பெறுமாறு திங்கள்கிழமை இரவு, கனடாவிலுள்ள இந்திய உயர் ஆணையரகம் கேட்டுக்கொண்டது.

மேலும், இந்த போஸ்டர் தொடர்பாக "கனடாவில் உள்ள இந்து சமூகத்தின் தலைவர்கள் தெரிவித்துள்ள புகார்கள்" குறித்தும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய உயர் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

என்ன சொல்கிறார் லீனா மணிமேகலை?

இந்த சர்ச்சை தொடர்பாக, பிபிசி தமிழுக்கு லீனா மணிமேகலை அளித்திருந்த பேட்டியில், "என்னைப் பொருத்தவரை "காளி" பேராற்றல் கொண்ட, கட்டற்ற, அசுரத்தனம் என்று கருதப்படுவதையெல்லாம் காலில் போட்டு மிதிக்கிற, தீமையின் தலைகளையெல்லாம் ஒட்ட நறுக்கி கெட்ட ரத்தமாக ஓடவிடுகிற துடியான ஆதி மனுஷி. அப்படி ஒரு மனுஷி ஒரு மாலை நேரம் எனக்குள் இறங்கி டொரோண்டோ மாநகர வீதிகளில் வலம் வந்தால் என்ன நடக்கும் என்பதை நிகழ்த்திக் காட்டும் படம் தான் காளி.

நான் பால்புதுமையராகவும், திரைப்படங்களை இயக்கும் பெண்ணாக இருப்பதாலும் எனக்குள் இறங்கும் காளி, பால்புதுமையர் கொடியையும் கேமராவையும் பிடித்திருக்கிறார்.

பூங்காவில் படுத்துறங்கும் கனடாவின் வீடற்ற ஏழை கருப்பின உழைக்கும் மக்களிடம் காளியை உபசரிக்க ஒரு சிகரெட் தான் இருக்கிறது. அதை அன்புடன் ஏற்றுக் கொள்கிறார் காளி" என ஆவணப்படம் குறித்து விளக்கினார்.

காளி ஆவணப்படம்
Getty Images
காளி ஆவணப்படம்

யார் இந்த லீனா மணிமேகலை?

கவிஞர், ஆவணப்பட இயக்குநர், சுயாதீன திரைப்பட இயக்குநர் என பன்முகம் கொண்ட லீனா மணிமேகலை, பாலியல் - சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் ஈழப்போராட்டங்கள் குறித்தும் திரைப்படங்களையும், ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவருடைய 'மாடத்தி, 'செங்கடல்' போன்ற திரைப்படங்கள் சர்வதேச கவனம் பெற்றிருக்கின்றன. சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இவரது படங்கள் திரையிடப்பட்டுள்ளன. பல்வேறு சர்வதேச விருதுகளையும் லீனா மணிமேகலை பெற்றுள்ளார்.

தற்போது, கனடாவில் திரைப்பட தயாரிப்பு குறித்து படித்து வருகிறார். "கனடாவின் யோர்க் பல்கலைக்கழகம் சர்வதேச அரங்கில் திறம்பட இயங்கும் படைப்பாளியென என்னை வரவழைத்து உதவித்தொகை வழங்கி மேலதிக பயிற்சிக்கான களத்தையும் மாஸ்டர்ஸ் டிகிரிக்கான வாய்ப்பையும் வழங்கியது" என, பிபிசி தமிழிடம் லீனா மணிமேகலை தெரிவித்தார்.

இந்தியாவில் மதக்கடவுள்களை திரையில் சித்தரிக்கும் விதம் எப்போதும் 'சென்சிட்டிவ்' விஷயமாகவே கருதப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படமான 'ஆங்ரி இந்தியன் காடசஸ்' (Angry Indian Goddesses) திரைப்படத்தில் தணிக்கை வாரியம் சில காட்சிகளை நீக்கியது.

மதம் சார்ந்த சித்தரிப்புகளுக்காக பல திரைப்பட இயக்குநர்கள் எதிர்ப்பை சந்தித்துள்ளனர்.

லீனா மனிமேகலையின் திரை கையாடல்களில் பெண் தெய்வங்கள் குறித்த குறியீடுகள் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டுள்ளன. அவருடைய தேவதைகள் (Goddesses) ஆவணப்படத்தில், ஒப்பாரி பாடும் பெண், இடுகாடுகளில் கைவிடப்பட்ட பிணங்களை அப்புறப்படுத்தும் பெண், மீனவப் பெண் என அசாதாரண வேலைகளை செய்யும் சாமானிய பெண்களின் வாழ்வை ஆவணப்படுத்தியிருப்பார். 2019ஆம் ஆண்டு வெளியான 'மாடத்தி' திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண், எப்படி தெய்வமாக, அழியாதவளாக மாறுகிறாள் என்பதே கதையின் அடிப்படையாகும்.

இதனிடையே, தமிழ் திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் மீது 2018ஆம் ஆண்டில் பாலியல் புகாரை தெரிவித்திருந்தார் லீனா மணிமேகலை. இதுதொடர்பாக, சுசி கணேசன் தொடர்ந்த அவதூறு வழக்கில், சுசி கணேசனுக்கு எதிராக, உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற கருத்துகளை வெளியிட லீனா மணிமேகலைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. 'காளி' ஆவணப்பட சர்ச்சையில் லீனா மணிமேகலை சிக்கியுள்ள நிலையில், இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.

சமீபத்தில் பாஜகவின் தேசிய செய்தித்தொடர்பாளராக இருந்து பின் இடைநீக்கம் செய்யப்பட்ட நூபுர் ஷர்மா முகமது நபி குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் நடைபெற்றன. மேலும், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக, டெய்லர் ஒருவரை கொலை செய்ததாக, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

https://www.youtube.com/watch?v=C2PiZw-lAL0

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
'Kaali' film poster draws flak, complaint filed against director Leena Manimekalai in delhi, uttar pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X