70% சேர்கள் காலி.. பெங்களூர் பாஜக பொதுக்கூட்டத்திற்கு தொண்டர்கள் வராததால் அமித்ஷா அப்செட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  70% சேர்கள் காலி..பொதுக்கூட்டத்திற்கு தொண்டர்கள் வராததால் அமித்ஷா அப்செட்!- வீடியோ

  பெங்களூர்: சட்டசபை தேர்தலையொட்டி, பெங்களூரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற 'பரிவர்த்தன் யாத்திரா' தொண்டர்கள் கூட்டமின்றி வெறிச்சோடியது. யாத்திரையை தொடங்கி வைக்க வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, இதைப் பார்த்து 'அப்செட்' அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

  கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. அடுத்த ஆண்டு கோடை காலத்தில் இங்கு சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இதையடுத்து, தேர்தல் ஆயத்த வேலைகளில் இறங்கியுள்ளது பாஜக. இதற்காக 'பரிவர்த்தன் யாத்திரா' என்ற பெயரில் நடைபெற உள்ள தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

  எடியூரப்பா சுற்றுப்பயணம்

  எடியூரப்பா சுற்றுப்பயணம்

  கர்நாடக பாஜக தலைவரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான பி.எஸ்.எடியூரப்பா இந்த யாத்திரையை முன்னின்று நடத்த உள்ளார். 79 நாட்கள் தொடர்ந்து மாநிலம் முழுக்க அவர் சுற்றுப் பயணம் செய்து ஆளும் காங்கிரஸ் அரசு மீதான விமர்சனங்களையும், பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதே யாத்திரையின் நோக்கம்.

  அமித்ஷா பங்கேற்பு

  அமித்ஷா பங்கேற்பு

  பெங்களூர்-தும்கூர் சாலையிலுள்ள சர்வதேச பொருட்காட்சி திடலில், நேற்று நடைபெற்ற யாத்திரையின் துவக்கவிழாவில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்றார். எனவே இந்த கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த எடியூரப்பா மற்றும் அவரது ஆதரவாளர்கள் தீவிரம் காட்டினர். சுமார் 2லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்த்து, 80,000 சேர்களை போட்டிருந்தனர்.

  அமித்ஷா அதிருப்தி

  அமித்ஷா அதிருப்தி

  அமித்ஷா பொதுக்கூட்டத்தின் மேடையேறிய பிறகும் கூட போதிய அளவுக்கு தொண்டர்கள் வரவில்லை. இதனால் சுமார் 70 சதவீத சேர்கள் காலியாக கிடந்தன. சட்டசபை தேர்தலுக்கு முந்தைய சங்கநாத முழக்கமாக பார்க்கப்பட்ட ஒரு பொதுக்கூட்டத்திற்கு, போதிய அளவுக்கு தொண்டர்கள் வரவில்லையே என்ற அதிருப்தி, அமித்ஷா முகத்தில் தென்பட்டது. இதனால் பதறிப்போயினர் பாஜக நிர்வாகிகள்.

  ஆள்பிடித்த பாஜக

  ஆள்பிடித்த பாஜக

  பாஜக சார்பில் கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மாநில அமைப்பு செயலாளர் சந்தோஷ், பெங்களூரை சேர்ந்த பாஜக சீனியரும், முன்னாள் துணை முதல்வருமான ஆர்.அசோக் ஆகியோர், இதனால் பரபரப்புக்குள்ளாகினர். மேடையின் பின் வரிசையில் நின்றபடி, எப்படியாவது சேர்களை நிரப்புமாறு கட்சி நிர்வாகிகளை நோக்கி பரபரப்பாக கட்டளைகளை பிறப்பித்தபடி இருந்தனர்.

  கண்டுகொள்ளாத நிர்வாகிகள்

  கண்டுகொள்ளாத நிர்வாகிகள்

  மேடையில் பின்வரிசையில் அமர்ந்திருந்த மூத்த கட்சி நிர்வாகிகள் சிலரை பார்த்து, கீழே போய் உட்காருங்களேன் என்று பியூஷ் கோயல் ஜாடையாக வேண்டுகோள்விடுத்தார். ஆனால் அவர்களோ கண்டுகொள்ளவில்லை. அமித்ஷாவுடன் மேடையில் இருப்பதையே அவர்கள் விரும்பினர். இதையடுத்து பியூஷ் கோயல், ஒவ்வொருவர் அருகேயும் சென்று, தயவு செய்து கீழே சென்று அமித்ஷா முன்னால் இருக்கும் சீட்டையாவது நிரப்புங்கள் என்று கேட்கும் நிலை உருவானது.

  கோஷ்டி சண்டை

  கோஷ்டி சண்டை

  இதுகுறித்து பாஜக வட்டாரத்தில் விசாரித்தபோது, கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசல்தான் இந்த நிலைக்கு காரணம் என தெரியவந்தது. முன்னாள் அமைச்சரான ஷோபா கரந்தலாஜேவுக்கு, எடியூரப்பா அதிக முக்கியத்துவம் தருவதால் அவரை பிடிக்காத கோஷ்டிகள் உள்ளடி வேலை பார்த்து கூட்டத்தை வரவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. பொதுக்கூட்டத்திற்கான பொறுப்பாளராக ஷோபா நியமிக்கப்பட்டிருந்ததால் அவரது மூக்கை உடைக்க சந்தர்ப்பம் பார்த்த பிற கோஷ்டிகள் இப்படி அமித்ஷா முன்னிலையில் அவருக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டார்களாம். இதனால் எடியூரப்பா மீதும் அமித்ஷா அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்றைய பொதுக்கூட்டத்தில் அமித்ஷா வழக்கத்தைவிட குறைவாக பேசி அமர்ந்தது இதனால்தானாம்.

  உச்சத்தில் கோஷ்டி பூசல்

  முன்னதாக பெதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, நாட்டிலேயே ஊழலில் முதலிடத்தில் உள்ள மாநிலம் கர்நாடகாதான் என்றார். மேலும், திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாட சித்தராமையா அரசு தீவிரம் காட்டும் அளவுக்கு கர்நாடக ராஜ்யோத்சவா தினத்தை கொண்டாட ஆர்வம் காட்டவில்லை என்றும், சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலை சித்தராமையா முன்னெடுப்பதாகவும் அமித்ஷா குற்றம்சாட்டினார். கர்நாடக பாஜகவில் எடியூரப்பா கோஷ்டி, முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா கோஷ்டி, மத்திய அமைச்சர் அனந்தகுமார் கோஷ்டி என பல கோஷ்டிகள் உள்ளன. இன்னும் கோஷ்டி பூசல் சரியாகாத நிலையில் வரும் சட்டசபை தேர்தல் பாஜக எதிர்பார்க்கும் அளவுக்கு சுலபமாக இருக்கப்போவதில்லை என்பதற்கான 'ஒரு சோற்று பதமே' இந்த பொதுக்கூட்டம்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Karnataka BJP found it very hard to get people to their rally in Bengaluru, as about 70 per cent of the seats went empty.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற