பெண்களே.. வீட்டில் திரிசூலத்தை வைத்து கொள்ளுங்கள்.. பாஜக தலைவர் பரபர பேச்சு.. காரணத்தை பாருங்க
கொல்கத்தா: பெண்களே வீட்டில் அனைவரும் திரிசூலத்தை வைத்து கொள்ள வேண்டும் என மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் பேசி உள்ளார். மேலும் அதற்கான காரணத்தை அவர் கூறியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது.
இந்த மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ்-பாஜக இடையே பயங்கர மோதல் நீடித்து வருகிறது. இருகட்சியினரும் ஒருவரையொருவர் பொதுமேடைகளில் சரமாரியாக தாக்கி பேசி வருகின்றனர்.

பாஜக தலைவர் பேச்சு
இந்நிலையில் தான் கொல்கத்தா புறநகரில் ஜகதாத்ரி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் ராஜூ பந்தோபாத்யாய் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது ஆன்மிகம் சார்ந்து சில விஷயங்களை கூறியதோடு, ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸையும் விமர்சனம் செய்தார். இந்த நிகழ்ச்சில் ராஜூ பந்தோபாத்யாய் பேசியதாவது:

பாஜக தொண்டர்களை பாதுகாக்க..
மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற வேண்டி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபடுவார்கள். வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி தோட்டாக்களை பயன்படுத்துவார்கள். இதனால் பாஜக தொண்டர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தற்காப்புக்காக நம்மிடம் என்ன இருக்கிறது?.

வீட்டில் திரிசூலம் வேண்டும்
நம்மை பாதுகாத்து கொள்ள தான் தெய்வம் துர்கா கொடுத்த திரிசூலம் உள்ளது. இதனால் பாஜக தொண்டர்களை பாதுகாக்க பெண்கள் அனைவரும் வீடுகளில் திரிசூலம் வைத்திருக்க வேண்டும் என பகிரங்கமாக கூறினார். இதனை பார்த்த ராஜூ பந்தோபாத்யாய் பேசிய கருத்துக்கு பாஜக எம்பி திலீப் கோஷ் தைத்தட்டினார்.

அடுத்த ஆண்டு தேர்தல்
மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த முறை நடந்த தேர்தலில் மாநிலத்தின் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்க மாநில பஞ்சாயத்து தேர்தலை அமைதியாக நடத்த மத்திய பாஜக அரசு மத்திய பாதுகாப்பு படைகளை அனுப்ப வேண்டும் என இப்போதே மேற்கு வங்க பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் பாஜக தலைவர் இவ்வாறு பேசியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு
இதனை திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ தபாஸ் ராய் கடுமையாக கண்டித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛பாஜக தலைவரின் இந்த கருத்து சரியானது அல்ல. இது கண்டிக்கத்தக்கது. திரிசூலங்களை வீட்டில் வைக்க அவர் கூறுகிறார். இது மேற்கு வங்காளத்தின் அமைதியான, ஆரோக்கியமான வாழ்க்கையை கெடுப்பதோடு, சட்டம் ஒழுங்கை கெடுக்கும். அதோடு வன்முறையை தூண்டும். இருப்பினும் மேற்கு வங்காளத்தில் கலாச்சாரத்தை காக்க உள்ளதாக கூவி வருகின்றனர். இதுபற்றி விசாரித்து கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

பாஜக எம்பி விளக்கம்
இதுபற்றி பாஜகவின் எம்பி திலீப் கோஷ் கூறுகையில், ‛‛மத்திய படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இருப்பினும் தேர்தலை முறைப்படி நடத்த நாங்கள் போராட வேண்டும். அதற்காக பாஜக இப்போதே தயாராகி வருகிறது. மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி தேர்தல் என்பது அமைதியான முறையில் நடைபெறுவது இல்லை. தேர்தல் வேளையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி காவல்துறை உட்பட அனைத்து அரசு எந்திரத்தையும் பயன்படுத்தும். இதனால் முழுபலத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எதிர்கொள்வோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications