
கூட்டத்தில் அத்துமீறிய ரசிகர்.. கன்னத்தில் பளார் விட்டு நடிகை சானியா ஐயப்பன் பதிலடி.. பரபரப்பு!
கோழிக்கோடு: திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகையிடம் ரசிகர் ஒருவர் பாலியல் ரீதியாக அத்துமீறிய போது, அவரை அங்கேயே அந்த நடிகை அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக் காலமாக சினிமாவை மக்களிடம் நேரடியாக பிரபலப்படுத்தும் முறைகள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் பொன்னியின் செல்வன் படத்தின் ஒரு பாடலை சென்னையில் உள்ள பிரபல மாலில் வெளியிட்டனர். அதேபோல் கல்லூரிகள், திரையரங்குகள் என்று படத்தை விளம்பரப்படுத்த பல்வேறு யுக்திகளை பிரபலங்கள் கையாண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் சாட்டர்டே நைட் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில், கோழிக்கோடில் உள்ள ஷாப்பிங் மாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு படத்தின் நாயகிகளான சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி ஆகியோர் சென்றுள்ளனர்.
ராணி 2-ம் எலிசபெத் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு மருதநாயகம்- கமல்ஹாசன் நெகிழ்ச்சி இரங்கல்

நடிகை சானியா ஐயப்பன் வீடியோ
இதனையறிந்து ரசிகர்கள் ஏராளமானோர் மாலில் குவிந்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாவலர்கள் திணறினர். அப்போது கூட்டத்தில் ரசிகர் ஒருவர், நடிகைகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டார். அதற்கு நடிகை சானியா ஐயப்பன், அந்த ரசிகரை கன்னத்தைல் பளாரன்று அறைந்து பதிலடி கொடுத்துள்ளார். இவர் ரசிகரை கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சானியா ஐயப்பன் விளக்கம்
இதுகுறித்து நடிகை சானியா ஐயப்பன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நானும் எனது படக்குழுவினரும் எங்களின் புதிய திரைப்படமான 'சேட்டர்டே நைட்' திரைப்படத்தை கோழிகோட்டில் உள்ள ஒரு மாலில் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தோம். விளம்பர நிகழ்வுகள் கோழிக்கோடு மற்றும் அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடந்தன. கோழிக்கோடு மக்களின் அன்புக்கு நன்றி. மாலில் நடந்த நிகழ்ச்சி அதிகளவிலான மக்களால் நிரம்பியிருந்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த எங்கள் பாதுகாவலர்கள் திணறினர்.

பாலியல் சீண்டல்
தொடர்ந்து விளம்பர நிகழ்ச்சிக்குப் பிறகு, நானும் என் சக நடிகர்களில் ஒருவரும் வெளியேறினோம். அப்போது சிலர் எங்கள் குழுவில் இருந்த சக நடிகையிடம் தவறாக நடந்துகொண்டார்கள். அங்கிருந்த கூட்டம் காரணமாக அவரால் சரியாக எதிர்வினையாற்ற முடியவில்லை. அதன்பிறகு, இதேபோன்ற என்னிடமும் தவறாக நடந்துகொண்டார்கள்.

நடவடிக்கை நிச்சயம்
ஆனால் நான் வீடியோவில் பார்த்தது போல் பதில் அளித்தேன். இதுபோன்ற அதிர்ச்சியை யாரும் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். ஏனெனில் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

போலீசார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்கள் அளித்த புகாரின் பேரில் கோழிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். நடிகைகளில் ஒருவர் தற்போது கண்ணூரிலும் மற்றொருவர் கொச்சியிலும் உள்ளனர். எனவே அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய பெண் காவலர் தலைமையிலான போலீசார் சென்றுள்ளனர்.