நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் மத்திய அமைச்சரவை மாற்றம்?
டெல்லி: நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத் தொடர் முடிவடைந்ததும் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவை கடந்த மே மாதம் 26-ந்தேதி பதவி ஏற்றது. மோடியுடன் சேர்த்து மொத்தம் 45 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
பிரதமர் மோடி மிகச் சிறிய அமைச்சரவையை அமைக்கவே முடிவு செய்திருந்தார். ஆனால் இலாகாக்களை ஒருங்கிணைப்பதில் சர்ச்சை ஏற்பட்டதால் மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடிவெடுத்தார்.

கூடுதல் இலாகா அமைச்சர்கள்
தற்போது மத்திய அமைச்சரவையில் அருண்ஜேட்லி உள்பட 3 அமைச்சர்கள் 2 இலாகாக்களை கவனித்து வருகின்றனர். அந்த இலாகாக்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட வேண்டியதிருப்பதுடன், அனைத்து அமைச்சகங்களுக்கும் இணை அமைச்சர்கள் நியமனம் செய்ய வேண்டியதுள்ளது.

செயல்படாத அமைச்சர்கள்
இதனிடையே புதிய அமைச்சரவை அமைக்கப்பட்ட முதல் 2 மாதங்களில் ஒவ்வொரு அமைச்சரும் எப்படி செயல்பட்டு வருகிறார் என்பது பற்றி பிரதமர் மோடி ஆய்வு நடத்தி வருகிறார். திறமையாக செயல்படும் அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்க அவர் திட்டமிட்டுள்ளார்.

சிலருக்கு கல்தா?
அதே சமயத்தில் சிறப்பாக செயல்படாத அமைச்சர்களுக்கு அவர் கல்தா கொடுப்பார் என்று கூறப்படுகிறது. எனவே மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம்
மேற்குவங்கம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் உள்பட சில மாநிலங்கள், மத்திய அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் பெறாமல் உள்ளன. அந்த மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இளைஞர்கள்
அதே சமயத்தில் புதிய அமைச்சர்கள் அனைவரும் இளைஞர்களாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். ஆனால் பாதுகாப்பு, ஊரக மேம்பாடு உள்ளிட்ட முக்கியத் துறைகளை அனுபவம் இல்லாதவர்களுக்கு கொடுக்க முடியாது.

இணை அமைச்சர்கள்
எனவே அனுபவம் உள்ள மூத்த தலைவர்களை முக்கியத் துறைகளிலும், மற்றவர்களை இணை அமைச்சர்களாக்கி உதவிக்கு வைத்துக் கொள்ள திட்ட மிடப்பட்டுள்ளது. இது பற்றி நரேந்திர மோடி பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் ஆலோசனையை தொடங்கி உள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்த பின்னர்..
அடுத்த மாதம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிகிறது. அதன் பிறகு மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றங்களை பிரதமர் மோடி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.