For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆண் குழந்தையை 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்ற தாய் மற்றும் வாங்கியவர்கள் கைது - நாளிதழ் செய்திகள்

By BBC News தமிழ்
|
குழந்தை
Getty Images
குழந்தை

இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

சென்னையில் வறுமையின் காரணமாக குழந்தையை 80,000 ரூபாய்க்கு விற்றதாக குழந்தையின் தாய் மற்றும் அவரிடமிருந்து வாங்கிய இருவரையும் செங்குன்றம் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அது தொடர்பான செய்தியில், "சென்னையிலுள்ள கண்ணகி நகரைச் சேர்ந்தவர் சின்னதுரை. கூலி வேலை செய்துவருகிறார். அவரும் அவருடைய மனைவி விஜயலட்சுமியும், பிறந்து 10 மாதமே ஆன தங்களுடைய ஆண் குழந்தையை வறுமையின் காரணமாக 80,000 ரூபாய்க்கு செங்குன்றத்தைச் சேர்ந்த தரகர் தங்கம் என்பவருக்கு விற்பனை செய்ததாகச் சொல்லப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, குழந்தையை வாங்கிய தங்கம் செங்குன்றத்திலுள்ள நவநீதம் என்பவருக்கு மூன்று லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில், குழந்தையை வாங்கிய நவநீதம் ஆந்திராவிலுள்ள அவருடைய உறவினரிடம் கொடுத்து வளர்க்கச் சொல்லியுள்ளார்.

இந்தத் தகவல் தெரிந்தவுடன், சென்னையிலுள்ள ராயபுரத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நல அமைப்பின் உறுப்பினர் லலிதா, செங்குன்ற காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, செங்குன்ற காவல்துறையினர் குழந்தையை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தோடு, குழந்தையை விற்ற தாய் மற்றும் வாங்கியவர்களான தரகர் தங்கம் மற்றும் நவநீதம் ஆகிய மூவரையும் கைது செய்தனர்," என்று அந்தச் செய்தி கூறுகிறது.

"காங்கிரஸாருக்கு மக்கள் மீது அக்கறையில்லையா?" - கேள்வியெழுப்பிய கர்நாடக உயர்நீதிமன்றம்

மேகதாட்டூவில் அணை கட்ட வலியுறுத்தி கொரோனா பரவும் சூழலில் ஏன் பாத யாத்திரை நடத்தவேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கர்நாடகா உயர்நீதிமன்றம்
Getty Images
கர்நாடகா உயர்நீதிமன்றம்

அது தொடர்பான செய்தியில், "மேகதாட்டூவில் அணை கட்ட வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் அந்தக் கட்சியினர் மேகதாட்டூவை நோக்கி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, டி.கே.சிவகுமார் உள்ளிட்ட 41 காங்கிரஸ் பிரமுகர்கள் மீது கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் நாகேந்திர பிரசாத், மேகதாட்டூ யாத்திரையை நிறுத்த உத்தரவிடக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்தபோது தலைமை நீதிபதி, 'கர்நாடகாவில் கொரோனா வேகமாகப் பரவி வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாள் ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. அரசு நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், காங்கிரஸார் மேகதாட்டூ நோக்கிப் பாத யாத்திரை நடத்துவது ஏன்? அந்தத் தலைவர்களுக்கு பொதுமக்களின் நலனில் அக்கறை இல்லையா? ஒரேநேரத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு கொரோனா பரவினால் யார் பொறுப்பேற்பார்கள்? வெள்ளிக்கிழமைக்குள் காங்கிரஸ் கட்சியும் கர்நாடக அரசும் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும்' எனக்கூறி, வழக்கை 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்," என்று அந்தச் செய்தி கூறுகிறது.

கோயில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு

திருக்கோயில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருவாய் பெறும் கோயில்களில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 31 சதிவிகிதமாக நிர்ணயம் செய்து உத்தரவிப்படுகிறது.

இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும். இதன்பட், அர்ச்சகர்கள் மற்றும் சீட்டு விற்பனையாளர்களுக்கு 2,500 ரூபாயும் காவல் பணியாளர்களுக்கு 2,200 ரூபாயும் தூய்மைப் பணியாளர்களுக்கு 1,400 ரூபாயும் என்று அடிப்படையில் மாத ஊதியம் உயரும். இதன்மூலம் சுமார் 10,000 கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். இதனால், ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளதாக அதுகுறித்த செய்தி கூறுகிறது.

கருணாநிதி
Getty Images
கருணாநிதி

கருணாநிதி நினைவேந்தல் திட்டத்திற்கு இருந்த தடைகள் நீக்கம்

மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதி நினைவிடம் அமைக்க தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த செய்தியில், "மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதி நினைவிடம் அமைக்க தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புத்தல் அளித்துள்ளது. டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற அதன் 114-வது கூட்டத்தில், அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கரில் வரவுள்ள இந்தத் திட்டத்திற்கு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது.

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் 39 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்" என்று கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Mother arrested for selling baby boy for Rs 80000 near Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X