For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜபக்ஷ அரசாங்கத்தை பாதுகாக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் சஜித்: விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

By BBC News தமிழ்
|
சஜித் பிரேமதாச
Getty Images
சஜித் பிரேமதாச

(இலங்கை, இந்திய செய்தித் தாள்கள், இணைய தளங்களில் இன்று வெளியான செய்திகளில் முக்கியமான சில செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.)

பிரதி சபாநாயகராக இம்தியாஸ் பாகீர் மார்க்கரை பரிந்துரைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தன்னிடம் கூறியிருந்தால் தாமும் அவருக்கே ஆதரவளித்திருப்போம் என்றும், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாச, ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்ததாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் கட்சி தலைவர்களின் கூட்டு ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. அப்போது பிரதி சபாநாயகர் விவகாரம் தொடர்பில் எழுந்த சர்ச்சை குறித்து தெளிவுபடுத்தும் போதே விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், "எதிர்க்கட்சி என்பது ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமல்ல. அரசாங்கத்திலிருந்து விலகிய நாமும், ஜே.வி.பி.யும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்க்கட்சியிலேயே உள்ளோம். எனவே, எமக்கான ஒரு பொது வேட்பாளராகவே பிரதி சபாநாயகர் பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்தினால் அனைத்தும் சிதைவடைந்தது. ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பரிந்துரைக்கப்பட்டவருக்கு ஜேவிபியின் வாக்குகளைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலேயே சஜித் உள்ளார். நாம் பரிந்துரைத்த பெயரில் அவருக்கு ஆட்சேபனை அல்லது விருப்பமின்மை காணப்பட்டிருக்குமாயின் அதனை முன்னரே எம்மிடம் கூறியிருக்கலாம். அவ்வாறு கூறியிருந்தால் அவர்கள் பரிந்துரைக்கும் நபருக்கு நாம் எமது ஆதரவை வழங்கியிருப்போம்.

தற்போது சுயாதீனமாக செயற்படும் நாம் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகின்றோம் என்று காண்பிக்க வேண்டும் என்பதே பொதுஜன பெரமுனவின் இலக்காகும். நாம் பொதுஜன பெரமுனவுடனேயே இருக்கின்றோம் என்று காண்பிக்கும் இலக்கு சஜித்தினுடையதாகும். இரு தரப்புமே எம்மை இலக்கு வைத்தே செயற்படுகின்றனர். இதனை மக்கள் புரிந்துகொள்வார்கள். இரு தரப்புமே எம்மை இலக்கு வைத்தே செயற்படுகின்றனர். எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு சஜித், ராஜபக்ஷ அரசங்கத்திற்கு சார்பாகவே செயற்படுகின்றார். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.

"சர்வதேச செலாவணி நிதியத்தின் உதவி என்பது வெறும் கனவே"

சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐ.எம்.எஃப்.) உதவி என்பது இலங்கைக்கு வெறும் கனவாகவே இருக்கும் என, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (மே 05) நடைபெற்ற அரசியல், பொருளாதார நெருக்கடிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"வெளிநாட்டுக் கடன்களில் 70 சதவீதத்தை மீள செலுத்த முடியாதென அரசாங்கம் அறிவித்துள்ளது. கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது இலகுவான ஒன்றல்ல. இலங்கையைவிட செல்வந்த நாடான கிரீஸ் 2010ஆம் ஆண்டு கடன் நெருக்கடியில் சிக்கியது. எனினும், இன்றுவரையில் அந்நாட்டால் மீண்டுவர முடியவில்லை" எனவும் அவர் தெரிவித்தார்.

"ஓர் அரசாங்கத்தை விரட்டிவிட்டு மற்றுமோர் அரசாங்கத்தைக் கொண்டுவருவதல்ல பிரச்னை. இப்போது முழு ஆட்சியும் வீழ்ச்சியடைந்துள்ளது. இத்தனைக்காலம் இலங்கைக் கடைப்பிடித்துவந்த கலாசாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனாலேயே ஜனாதிபதி, 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டுமென இளைஞர்கள் கூறுகிறார்கள்" என்றார்.

நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஒன்றிணைந்த கலந்துரையாடல் - ரணில் அழைப்பு

ரணில் விக்ரமசிங்க
BBC
ரணில் விக்ரமசிங்க

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வுகாண அனைவரும் இணைந்து கலந்துரையாட வேண்டும் என, இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக, 'தினகரன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று நிதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், "நாடு பெரிய பிரச்னைக்கு ஆளாகி இருக்கும் நிலையில் இடைக்கால அரசாங்கமா அல்லது தனியான அரசாங்கத்தை அமைப்பதா என்பது தொடர்பிலும் ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்றும் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. எனினும், இத்தகைய சூழ்நிலையில் தேவையற்ற செலவுகள் நிறுத்தப்பட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வீழ்ச்சி அடையாமல் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நம்பிக்கையில்லா பிரேரணை, புதிய அரசியலமைப்பு தொடர்பில் பேசப்படுகிறது. அதனைப் பேசலாம். ஆனால், தற்போதைய நிலையில் பிளவுகளுக்கு முன் இணைந்து செயற்படுவதிலேயே கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வுகாண அனைவரும் இணைந்து கலந்துரையாட வேண்டும்" என்றார்.

மக்களவை செயல்பாடுகளில் தமிழக அளவில் திமுக எம்.பிக்கள் செந்தில்குமார், தனுஷ்குமார் ஆகியோருக்கு சிறப்பிடம்

இந்திய நாடாளுமன்றம்
Getty Images
இந்திய நாடாளுமன்றம்

மக்களவையில் எம்.பி.க்களின் செயல்பாடுகளை ப்ரைம் பாயின்ட் ஃபவுண்டேஷன், கடந்த 12 ஆண்டுகளாக மதிப்பிட்டு வருகிறது. அந்த மதிப்பீட்டின்படி, ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவில் சிறப்பாகப் பணியாற்றிய எம்பி.க்களுக்கு 'சன்சத் ரத்னா' விருது வழங்கி கவுரவிக்கிறது.

இந்த ஃபவுண்டேஷன் சார்பில் 17-வது மக்களவையில் எம்பி.க்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அதன் நிறுவனர் ப்ரைம் சீனிவாசன் கூறியது குறித்து, 'இந்து தமிழ் திசை' நாளிதழ் வெளியிட்ட செய்தியில், "மக்களவையின் செயல்பாடுகளை பிஆர்எஸ் இந்தியா என்ற அமைப்பு ஆராய்ச்சி செய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 எம்.பி.க்கள் உள்ளனர். கடந்த ஜூன் 2019 முதல் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரை 40 எம்.பி.க்களின் செயல்பாடுகள் மதிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி, தமிழக எம்.பி.க்களில் தருமபுரி திமுக எம்.பி. எஸ்.செந்தில்குமார் 386 புள்ளிகளுடன் தமிழக அளவில் முதலிடத்திலும், தேசிய அளவில் 18-வதுஇடத்திலும் உள்ளார். எம்.பி. செந்தில்குமார் தொடர்ந்து முயற்சித்தால் முதலிடம் பிடித்து, 'சன்சத் ரத்னா' விருது பெற முடியும்.

தென்காசி திமுக எம்.பி. தனுஷ்குமார் 348 புள்ளிகளுடன் தமிழக அளவில் 2-ம் இடத்திலும், தேசிய அளவில் 31-வது இடத்திலும் உள்ளார். தமிழக அளவில் செந்தில்குமார் 322 கேள்விகளை எழுப்பி முதல் இடத்திலும், தனுஷ்குமார் 317 கேள்விகள் எழுப்பி 2-ம் இடத்திலும் உள்ளனர். இருவருமே 99% அமர்வுகளில் பங்கேற்றுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் சுயேச்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதம் சிறைத்தண்டனை

ஜிக்னேஷ் மேவானி
BBC
ஜிக்னேஷ் மேவானி

5 ஆண்டுக்கு முந்தைய வழக்கில் குஜராத் சுயேச்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

குஜராத் மாநில சுயேச்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம், குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டம் மெசானாவில் இருந்து தானேரா பகுதிவரை பேரணி நடத்தினார்.

அவர் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஜிக்னேஷ் மேவானி மற்றும் அவரது ராஷ்டிரீய தலித் அதிகார் மஞ்ச் என்ற அமைப்பைச் சேர்ந்த 9 பேர் மீது சட்டவிரோதமாக கூடியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை மெசானாவில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டு விசாரித்து வந்தது. ஜிக்னேஷ் மேவானி உள்பட 10 பேரும் குற்றவாளிகள் என்று மாஜிஸ்திரேட் பார்மர் நேற்று தீர்ப்பு அளித்தார். 10 பேருக்கும் தலா 3 மாதம் சிறை தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

https://www.youtube.com/watch?v=P-o8cdUQ8xo

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
National Freedom Front Leader MP wimal weerawansa has criticized sajith
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X