For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது" - சட்டப்பேரவையில் தீர்மானம்

By BBC News தமிழ்
|
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
NASA
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவக்கூடிய சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்து பேசினார்.

"150 ஆண்டு கால கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டுமென்ற தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் முன்மொழிவதைக் கடமையெனக் கருதுகிறேன். அண்ணாவின் கனவுத் திட்டம். மு. கருணாநிதி நிறைவேற்றப் பாடுபட்ட திட்டம் அது. பாக் நீரிணையையும் மன்னார் வளைகுடாவையும் இணைக்க ஆடம்ஸ் பாலத்தில் கால்வாய் வெட்டும் திட்டம்தான் சேது சமுத்திரத் திட்டம்.

1963ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 4வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இடம்பெற்றிருந்த திட்டம் இது. அண்ணா தம்பிக்கு எழுதிய மடலில் இத்திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டுமென குறிப்பிட்டார்கள். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால், வர்த்தகம் பெருகும். இலங்கையைச் சுற்றிக்கொண்டு கப்பல் போக வேண்டிய தூரம் குறையும். மீனவர்கள் வாழ்வு செழிக்கும். தமிழ்நாடு எல்லா வளமும் கொண்ட மாநிலமாக வளரும் என அண்ணா எழுதினார்.

இத்திட்டத்தை நிறைவேற்றித் தர எழுச்சி நாள் கொண்டாடுவதென்றும் அறிவித்தார். 1972ஆம் ஆண்டு தூத்துக்குடி துறைமுக நுழைவு வாயிலில் வ.உ.சிதம்பரனாரின் சிலையைத் திறந்து வைக்க பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது, அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி இதை வலியுறுத்தினார்.

தூத்துக்குடி துறைமுகத்தின் பயன் மேலும் அதிகரிக்க சேது சமுத்திரத் திட்டம் மிக அவசியம் என வலியுறுத்தினார். 1998ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாயி, இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கினார். பா.ஜ.க. ஆட்சியில்தான் இந்தத் திட்டத்திற்கான பாதை எதுவெனத் தீர்மானிக்கப்பட்டது.

2004இல் மத்திய ஆட்சி மாறி, காங்கிரஸ் தலைமையில் தி.மு.கவை உள்ளடக்கிய ஆட்சி வந்தபிறகு, 2,427 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு திட்டப் பணிகள் பாதி முடிந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க. சார்பாக இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. இந்தத் திட்டத்தை ஆரம்பம் முதல் ஆதரித்து வந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் அம்மையார், திடீரென நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இந்தத் திட்டத்திற்கு எதிராக வழக்குப் போட்டார்கள்.

இந்த அரசியல் முட்டுக்கட்டை போடாமல் இருந்திருந்தால், 10 ஆண்டுகளில் ஏராளமான பலன் கிடைத்திருக்கும். மு. கருணாநிதி சுட்டிக்காட்டியதைப்போல, நாட்டின் அந்நியச் செலாவணி அதிகரித்திருக்கும். தமிழ்நாட்டின் தொழில் - வணிகம் பெருகும். கப்பல்களின் பயண நேரமும் தூரமும் குறையும். தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் சரக்குகளைக் கையாளும் திறன் அதிகரிக்கும்.

சிறு சிறு துறைமுகங்களை உருவாக்க முடியும். சேது கால்வாய் திட்டத்தின் கீழ் மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் உயரும். மீனவர்களின் பாதுகாப்பை கணக்கில் கொண்டுதான் இந்தத் திட்டத்தின் காரியங்கள் நடைபெறுகின்றன.

மன்னார் வளைகுடாவிலிருந்து பாக் கடல் சென்றுவர மீனவர்களுக்கு இந்தக் கால்வாய் வசதியளிக்கும். இலங்கை உள்ளிட்ட வேறு நாடுகளின் துறைமுகங்களில் இந்திய சரக்குகள் பரிமாற்றம் செய்யப்படுவது தடுக்கப்படும். நாட்டின் கடலோர பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 50,000க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். இவையெல்லாம்தான் மு. கருணாநிதி சுட்டிக்காட்டியவை. இவை அனைத்தும் நடந்திருக்கும். நடக்காமல் போனதற்கான அரசியல் காரணங்களை நான் விரிவாகப் பேச விரும்பவில்லை.

சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவோம் என பா.ஜ.க. அரசு சொல்லியிருக்கிறது. ஆனால், ராமேஸ்வரம் கடல் பகுதியில் எந்த மாதிரி கட்டுமானம் எனக் கூறுவது கடினம் என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

இந்த நிலைப்பாட்டிற்கு பா.ஜ.க. அமைச்சர் வந்துள்ள நிலையில், சேது சமுத்திரத் திட்டத்தை போராடியும் வாதாடியும் கொண்டுவர வேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும்" என்று பேசினார்.

பிறகு அந்தத் தீர்மானத்தை வாசித்தார். "தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெறச் செய்வதற்கு இன்றியமையாத திட்டமாக சேது சமுத்திரத் திட்டம் விளங்கி வருகிறது. 1860ஆம் ஆண்டு 50 லட்ச ரூபாயில் கமாண்டர் டெய்லர் என்பவரால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் இது. அதன் பிறகு 1955ல் தமிழ்நாட்டின் சிறந்த நிபுணர் டாக்டர் ராமசாமி 'தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெறச் செய்வதற்கு மிக இன்றியமையாத திட்டமாக சேது சமுத்திரத் திட்டம் விளங்கி வருகின்றது.

1860ஆம் ஆண்டு 50 இலட்சம் ரூபாயில் கமாண்டர் டெய்லர் என்பவரால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் இது. அதன் பிறகு 1955இல் தமிழ்நாட்டின் சிறந்த நிபுணர் டாக்டர் ஏ. இராமசாமி முதலியார் குழு, 1963இல் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம், 1964இல் அமைக்கப்பட்ட டாக்டர் நாகேந்திர சிங், ஐ.சி.எஸ் தலைமையிலான உயர்நிலைக் குழு - ஆகிய பொறியியல் வல்லுநர்களால் பல்வேறு ஆண்டுக்காலம் ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டதுதான் சேது சமுத்திரத் திட்டமாம்.

இதன் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் இந்தத் திட்டம் தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய அனுமதியளித்தார்கள். அப்போதுதான் சேதுசமுத்திரத் திட்டத்தின் வழித்தடம் எது என்பதும் இறுதி செய்யப்பட்டது. பின்னர் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றது.

திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமரான மன்மோகன் சிங்கால் 2004ஆம் ஆண்டு 2,427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது. மு. கருணாநிதி, சோனியா காந்தி ஆகியோர் முன்னிலை வகிக்க இந்தத் திட்டத்தை பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் 2-7-2005 அன்று துவக்கி வைத்தார்.

திட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தலைநிமிர வைக்கும் இத்திட்டத்துக்கு, குறிப்பாக தென் மாவட்டங்களைச் செழிக்க வைக்கக்கூடிய இந்தத் திட்டத்துக்கு, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.

எந்தக் காரணத்தைக் கூறி முட்டுக்கட்டை போடப்பட்டதோ, அதையே நிராகரிக்கக்கூடிய வகையில், தற்போது “ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதைக் கூறுவது கடினம்” என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

இப்படி மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், சேது சமுத்திரத் திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே கருதி, இந்த மன்றம் கவலை தெரிவிக்கிறது.

இனியும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவிடாமல் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த மாமன்றம் கருதுகிறது.

எனவே, மேலும் தாமதமின்றி இந்த முக்கியமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட, மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்றும், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும் என்றும் இந்த மாமன்றம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது," என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானம் குறித்து உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
"Non-implementation of Sethu Samudra Project is against the development of the country" - Resolution passed in the legislative assembly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X