பயங்கர சத்தம்..மரண ஓலம்..கடைசி 4 பெட்டியில் சேதமில்லை..ரயில் விபத்தை நேரில் பார்த்த பயணி தகவல்
புவனேஸ்வர்: கோரமண்டல் ரயில் பயங்கர சத்தத்துடன் திடீரென குலுங்கி நின்றது. பெட்டியில் இருந்து இறங்கிய பின்னர்தான் விபத்து நிகழ்ந்ததை உணர முடிந்ததாக ரயில் பயணம் செய்து உயிர் தப்பிய பயணி ரமேஷ் வேல்ராஜ் என்பவர் கூறியுள்ளார். கடைசி 4 பெட்டிகளுக்கு எந்த சேதமும் இல்லை என்றும் அனைவரும் பத்திரமாக தமிழகம் திரும்புவதாகவும் ரமேஷ் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த ஹவுரா விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் மோதி பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ரயிலில் பயணித்த ஏராளமான பயணிகள் பலியாகியுள்ளனர். இதுவரை வெளியாகியுள்ள தகவலின்படி, 288 பேர் உயிரிழந்ததாகவும், 900 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள இந்த ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. விபத்தில் இருந்து தப்பிய தமிழர்களுக்காக இன்று புவனேஸ்வரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதே போல சென்னை சென்ட்ரலில் இருந்து புவனேஸ்வருக்கு கட்டணமில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. விபத்தில் சிக்கிய உறவினர்களை மீட்பதற்காக இந்த ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கர கோர விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த பலரும் அந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீள முடியாத நிலையில் உள்ளனர். விமானம் மூலமும் பயணிகள் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். நடந்த சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ரமேஷ் வேல்ராஜ் என்பவர்,
கோரமண்டல் ரயிலில் பயணம் செய்த கடைசி கோச்சில் இருந்தோம். கடைசி 4 பெட்டிகளில் பயணம் செய்த யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இரவு 7 மணிக்கு விபத்து ஏற்பட்டது என்று கூறினார்.
ஏசி பெட்டியில் பயணம் செய்தோம் சத்தம் பயங்கரமாக கேட்டது. மின்சார வயர்கள் எல்லாம் அறுந்தது. வண்டி குலுங்கி நின்றது. நாங்கள் கீழே இறங்கி பார்த்த போதுதான் விபத்து ஏற்பட்டது தெரிந்தது. பலருக்கு கை கால்கள் உடைந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்ற அலறல் சத்தம் கேட்டது. இரவு 7.30 மணிக்கு ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அடுத்தடுத்து ஆம்புலன்ஸ்கள் வர ஆரம்பித்தன. மீட்பு பணிகள் படிப்படியாக தொடங்கியது.
நான் A 2 கோச்சில் இருந்தேன் A 1 கோச் , முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்தவர்களுக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. கடைசி 4 பேட்டிகளில் பயணம் செய்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழகம் வந்து கொண்டிருக்கின்றனர். இரவு 11 மணிக்கு மேல் சென்னை கண்ட்ரோல் ரூமில் இருந்து தொடர்பு கொண்டனர். கவலைப்படாமல் இருங்கள் என்று கூறினார்கள். தமிழகத்தை சேர்ந்தவர்களில் நான் உள்பட கடைசி 4 பெட்டிகளில் இருந்தவர்களுக்கு எந்த சேதாரமும் இல்லை என்றும் ரமேஷ் வேல்ராஜ் தெரிவித்தார். விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளதாகவும் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இன்று மாலை சிறப்பு ரயில் மூலம் ஓடிசாவிற்கு பயணம் செல்ல உள்ளனர். கட்டணமில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால் உறவினர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஒடிசாவில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் 200 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications