வாக்குப் பதிவு நாளில் பிரசாரம் செய்ய மோடியை அனுமதிப்பதா? தேர்தல் ஆணையம் மீது ப.சிதம்பரம் பாய்ச்சல்
டெல்லி: குஜராத் சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் செய்வதை தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. அகமதாபாத்தின் ராணிப் வாக்குச் சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார்.
முன்னதாக படைபரிவாரங்கள் சூழ மோடி வாக்குச் சாவடிக்கு வருகை தந்தார். அப்போதும் வாக்களிக்க வரிசையில் நின்றபோதும் வாக்காளர்களைப் பார்த்து கையசைத்துக் கொண்டே இருந்தார் பிரதமர் மோடி.

சிதம்பரம் ட்விட்டர்
வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் பிரதமர் மோடி இப்படி வாக்கு சேகரிப்பது போல் நடந்து கொண்டிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
|
என்ன செய்தது ஆணையம்?
வாக்குப் பதிவு நாளில் மோடி வீதிகளில் பிரசாரம் செய்ய அனுமதித்தது அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறல். மோடி பிரசாரம் மேற்கொள்ளும் போது தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது?
|
உறங்கிக் கொண்டிருக்கிறது
தேர்தல் ஆணையத்தின் இந்த அதிகார துஷ்பிரயோகம் வன்மையான கண்டனத்துக்குரியது. மோடியின் தேர்தல் விதிமுறை மீறலை கண்டுகொள்ளாமல் தனது கடமையில் இருந்து தவறி தேர்தல் ஆணையம் உறங்கிக் கொண்டிருக்கிறது.
|
ராகுல் பேட்டிதான் தெரிகிறதா?
இதுமட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடி ஊடகங்களில் பேசியிருக்கிறார். பாஜக தலைவர் பேட்டியளித்துள்ளார். ரயில்வே அமைச்சரும் பேட்டியளித்திருக்கிறார். இவை அனைத்துமே தேர்தல் ஆணையத்தின் பார்வையில் இருந்து தப்பிவிட்டன. ஆனால் ராகுல் காந்தி அளித்த பேட்டி மட்டுமே தேர்தல் ஆணையத்தின் கண்களுக்கு தெரிந்திருக்கிறது.
விரக்தியின் உச்சத்தில் இருக்கிறது பாஜக. அதனால்தான் தெர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது.
இவ்வாறு ப.சிதம்பரம் பதவிட்டிருந்தார்.