அடிமேல் அடி.. ரூ206 கோடி ஊழல் புகாரில் சிக்கினார் மகா. பா.ஜ.க. அமைச்சர் பங்கஜா முண்டா!
மும்பை: பாரதிய ஜனதா கட்சிக்கு அடிமேல் அடி இடியாக விழுகிறது.. மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஸ்மிருதி இரானி, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியாவைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில அமைச்சர் பங்கஜா முண்டே ரூ206 கோடி ஊழலில் சிக்கியுள்ளார்.
மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா -சிவசேனா கூட்டணி அரசு ஆட்சியில் இருக்கிறது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே.

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகள்தான் இந்த பங்கஜா முண்டே. அண்மையில் 'தன்னை மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக்க மக்கள் விரும்புகிறார்கள்' என்று கூறி பெரும் சர்ச்சையில் சிக்கியவரும் இந்த பங்கஜா முண்டேதான்..
இவர்தான் தற்போது ரூ206 கோடி ஊழல் புகாரில் சிக்கியுள்ளார். அதாவது பள்ளிகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு தகுதியற்ற நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கொடுத்தது; மிக அதிக விலைக்கு பொருட்கள் வாங்கியது என்கிற வகைகளில் ஊழல் முறைக்கேட்டில் பங்கஜா முண்டே சிக்கியுள்ளார். அதுவும் ஒரே நாளில் கடந்த பிப்ரவரி 13-ந் தேதியன்று மட்டும் இந்த 24 கொள்முதல்களுக்கு உத்தரவு பிறப்பித்து சரித்திரமும் படைத்திருக்கிறாராம்...
மகாராஷ்டிரா அரசைப் பொறுத்தவரை ரூ3 லட்சத்துக்கும் மேலான டெண்டர்களுக்கு ஆன்லைன் ஒப்பந்த முறை கடைபிடிக்கப்படுகிறது. ரூ5.6 கோடிக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்க நவிமும்பையின் ஜகத்குரு பிரஸ்ஸுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த நிறுவனத்தின் பெயரில் செக் வழங்காமல் உரிமையாளரின் தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு செக் கொடுக்கப்பட்டுள்ளது.
வாட்டர் பில்டர் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் நாசிக்கை சேர்ந்த எவரெஸ்ட் நிறுவனம் ஒரு பில்டருக்கு ரூ4,500 என நிர்ணயித்திருந்தது. ஆனால் பங்கஜா முண்டேவோ, ஒரு பில்டருக்கு ரூ5,200 என கூடுதலாக நிர்ணயித்திருக்கிறார்... இத்தனைக்கும் அந்த நிறுவனம் சொந்தமாக வாட்டர் பில்டர் தயாரிக்கவில்லையாம்..
இதேபோல் கடலை மிட்டாய் வாங்குவதற்கு ரூ80 கோடிக்கு ஒரு என்.ஜி.ஓ நிறுவனத்துக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் தயாரிப்பாளர் யார் என்கிற விவரம் இல்லை.
இப்படி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையில் ஏகத்துக்குமாக விளையாடி இருக்கிறாராம் பங்கஜா முண்டே. இதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.












Click it and Unblock the Notifications