ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அறுவை சிகிச்சை.. 10 நாட்கள் ஓய்வெடுக்க டாக்டர்கள் அட்வைஸ்!
அமராவதி: நடிகரும், ஆந்திர மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக ஜன சேனா கட்சி தெரிவித்துள்ளது. இந்த அறுவை சிகிச்சையைச் தொடர்ந்து அவர் ஓய்வில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் ஆந்திர மாநில துணை முதலமைச்சராக உள்ளார். அவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று வெள்ளிக்கிழமை நடந்த கட்சி கூட்டத்தின்போது அவருக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டது.

உடனே, பவன் கல்யாண் தனது தனிப்பட்ட மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வெள்ளிக்கிழமை அன்று தனது அலுவல் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகளும் எம்.ஆர்.ஐ ஸ்கேனும் செய்யப்பட்டன.
எம்.ஆர்.ஐ ஸ்கேன் முடிவுகளின் அடிப்படையில், அவருக்கு அறுவை சிகிச்சை தேவை என மருத்துவர்கள் முடிவு செய்து, அதற்கான நடைமுறைகளை மேற்கொண்டனர் என்றும், இன்று மாலை அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் தனது அலுவல் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு, சுமார் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், முழுமையாக குணமடைய அதிக காலம் எடுக்கும் என்பதால், நீண்ட கால பராமரிப்பு அவசியமாக இருக்கும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், பவன் கல்யாணுக்கு உடல்நலப் பிரச்சனையின் தன்மை அல்லது அறுவை சிகிச்சை குறித்த மேலதிக விவரங்கள் வெளியிடப்படவில்லை.














Click it and Unblock the Notifications