கோரமான ரயில் விபத்து..பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி இரங்கல்..நிவாரண உதவிகள் அறிவிப்பு
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்தது அறிந்து மிகுந்த துயருற்றேன் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் எனவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் உள்ள ஷாலிமார் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலத்தில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதே நேரத்தில் பெங்களூரில் இருந்து சென்ற துரந்தோ ரயிலும் விபத்தில் சிக்கியது. 3 ரயில்கள் மோதியதில் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 300 முதல் 400க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

ஒடிசா மாநிலத்தில் ரயில் விபத்து குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனையை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் குறிப்பில் "ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்தது அறிந்து மிகுந்த துயருற்றேன். இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் பேசினேன். அவர், நிலைமையை தீவிரமாகக் கண்காணித்து வருகிறார். தேவையான அனைத்து உதவிகளையும் அளித்து வருகிறோம்.
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் குறிப்பில், ஒடிசா மாநிலத்தில் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஏற்கனவே விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளனர். பிரியமானவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் குறிப்பில், "ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து செய்தியால் வேதனை அடைந்தேன். தங்கள் உற்றார் உறவினரை இழந்துவாடும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன். மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் அளிக்குமாறு காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
விபத்தில் சிக்கிய இரண்டு ரயில்களும் தமிழ்நாட்டை கடந்து செல்லக்கூடியவை என்பதால் தமிழக பயணிகள் அதிகம் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதனிடையே ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் நிவாரண உதவி வழங்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
