வரலாற்று சாதனை மைல்கல்லை எட்டிய இந்தியா 150 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் பெருமிதம்
கொல்கத்தா: 150 கோடி மக்களுக்கும் மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது எனக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
உலகின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாகவும், இந்தியாவில் 15 வயது முதல் 18 வயதுக்குள் உள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதிமுதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என பாரத பிரதமர் நரேந்திர மோடி கிறிஸ்துமஸ் தினத்தன்று நாட்டு மக்களுக்கு இடையே ஆற்றிய உரையில் கூறியிருந்தார்.
ஓமிக்ரான் குறித்து பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம், ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனக் கூறிய பிரதமர், இந்தியாவில் 18 லட்சம் கொரோனா சிகிச்சை படுக்கைகள் தயாராகவுள்ளன எனவும், குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், 90,000 குழந்தைகளுக்கான கொரோனா படுக்கைகள் தயாராகவுள்ளன எனக் கூறியிருந்தார்

தடுப்பூசி செலுத்தும் பணி சவலானது
கடும் சவால்களுக்கு இடையே தடுப்பூசி திட்டம் பாதுகாப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது எனக் கூறிய பிரதமர் நரேந்திரமோடி, மாநில அரசுகளுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது எனவும், தொடர்ந்து மக்களிடையே பேசிய பிரதமர் மோடி, கொரோனாவை சமாளிக்க தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதமாக உள்ளது என ஏற்கனவே கூறியிருந்தார்.

150 கோடி பேருக்கு தடுப்பூசி
இந்நிலையில் நாட்டில் கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் கீழ் மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 150 கோடியைத் தாண்டியது. அன்றைய தினம் மதியம் 2.20 மணி நிலவரப்படி நாட்டில் உள்ள தகுதியுள்ள பயனாளிகளுக்கு 1,50,17,23,911 தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக கோவின் இணையதளத்தில் உள்ள தரவுகளில் படி உறுதியாகியுள்ளது.

வரலாற்று மைல்கல்
150 கோடி மக்களுக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ள இந்தச் சாதனையை வரலாற்று சிறப்புவாய்ந்த மைல்கல் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கொல்கத்தாவில் உள்ள சித்தரஞ்சன் நேஷனல் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டை (சிஎன்சிஐ) திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நன்றி கூறிய பிரதமர்
நாட்டு மக்களுக்கு 150 கோடிக்கும் மேல் தடுப்பூசி செலுத்தியுள்ள சாதனையை "வரலாற்று மைல்கல்" என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் நாடு 20022ஆம் ஆண்டைத் தொடங்கியது என்று கூறிய அவர், அதே நேரத்தில் ஆண்டின் முதல் மாதத்தின் முதல் வாரத்திலேயே இந்தியா 150 கோடி அதாவது 1.5 பில்லியன் தடுப்பூசி செலுத்தியுள்ளது என்ற வரலாற்று மைல்கல்லை எட்டுகிறது என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications