என்ன மறந்துட்டீங்களா? சின்னதாக திலகம் வையுங்க! கோவில் பூசாரியிடம் கேட்டு வாங்கிய ராகுல்! விடாத பாஜக
புவனேஸ்வர்: ஒடிசாவில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் கோவிலில் தரிசனம் செய்த ராகுல் காந்தி பூசாரியிடம் நெற்றியில் சிறியதாக திலகமிடும்படி கூறி பெற்று கொண்டார். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் ராகுல் காந்தியை பாஜக விமர்சனம் மற்றும் கிண்டல் செய்து வருகிறது.
கடந்த 2014, 2019 ஆகிய நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தன்னை நிரூபித்து காட்ட வேண்டிய சூழலில் உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி நாடு முழுவதும் பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து உரையாடி வருகிறார்.

மேலும் அவர் யாத்திரையும் மேற்கொண்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் கன்னியாகுமரியில் இருந்து 2023 ஜனவரி மாதம் வரை ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டார்.
அதன்பிறகு 2வது கட்டமாக ராகுல் காந்தி கடந்த மாதம் 14ம் தேதி மணிப்பூரில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தொடங்கி உள்ளார். மொத்தம் 66 நாட்கள் இந்த யாத்திரை நடக்கிறது. மார்ச் மாதம் 20ம் தேதி மும்பையில் இந்த யாத்திரை முடிவடையும். மொத்தம் 6,713 கிலோமீட்டர் தொலைவை ராகுல் காந்தி கடக்க உள்ளார்.
மணிப்பூர், நாகலாந்து, அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா என 15 மாநிலங்களில் யாத்திரை நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் 110 மாவட்டங்களில் 337 சட்டசபை தொகுதிகள், 100 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ராகுல் செல்ல உள்ளார். இதன்மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்சிக்கு பெரிய பலன் கிடைக்கும் என காங்கிரஸ் கட்சி நினைக்கிறது.
தற்போது இந்த யாத்திரை என்பது ஒடிசாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் ராகுல் காந்தி ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள வேத்வியாஸ் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இந்த வேளையில் ராகுல் காந்தி சாமி சிலையை பார்த்த கும்பிட்டார். அதன்பிறகு அவருக்கு பூசாரி பிரசாதம் வழங்கினார். இந்த வேளையில் ராகுல் காந்தி பூசாரியிடம், ‛எனது நெற்றியில் சிறியதாக திலகமிடுங்கள்' எனக்கூறினார்.
இதையடுத்து பூசாரி ராகுல் காந்தியின் நெற்றியில் திலகமிட்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் தான் ராகுல் காந்தியை பாஜகவினர் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். அதாவது ‛‛தேர்தல் நேரத்தில் மட்டும் ராகுல் காந்தி இந்து கோவில்களுக்கு சென்று திலகம், திருநீர் பூசிக்கொள்கிறார். இவர் தேர்தல் கால இந்து'' என விமர்சனம் செய்துள்ளனர். மேலும் ராகுல் காந்தி சிறியதாக திலகமிடும்படி கூறியதையும் குறிப்பிட்டு பாஜகவினர் சாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications