For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று சசி, இளவரசி ஆஜராகின்றனர்! ஜெ நிலம், நகைகள், சுதாகரன் திருமண செலவுகள்!!

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோர் இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கின்றனர். இந்த வழக்கு விசாரணையின் போது ஜெயலலிதா தரப்பில் வாங்கிக் குவிக்கப்பட்ட நிலம் மற்றும் நகை விவரங்களை சாட்சியங்களை முன்வைத்து அரசு வழக்கறிஞர் பவானிசிங் விவரித்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங் இறுதி விவாதத்தை தொடங்கி வாதிட்டு வருகிறார்.

இந்த வழக்கில் கடந்த 3-ந் தேதியன்று ஜெயலலிதா உள்பட 4 பேரும் சனிக்கிழமையன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி குன்ஹா உத்தரவிட்டார். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக நேரில் ஆஜராவதில் இருந்து ஜெயலலிதாவுக்கு மட்டும் விலக்கு அளிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

சுதாகரன் ஆஜர்

சுதாகரன் ஆஜர்

இதைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று நீதிபதி குன்ஹா முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது சுதாகரன் மட்டும் ஆஜரானார். சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அவர்கள் 2 பேரும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்தனர். அதில் 2 பேரும் சர்க்கரை நோயால் அவதிப்படுவதால் ஆஜராக முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.

40% பேருக்கு நீரிழிவு நோய் இருக்கே..

40% பேருக்கு நீரிழிவு நோய் இருக்கே..

ஆனால் இக்கோரிக்கையில் அதிருப்தி அடைந்த நீதிபதி, நாட்டில் வாழும் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது. அதையெல்லாம் காரணமாக சொல்லக்கூடாது என்றார். அதை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நேரில் ஆஜராகாமல் விலக்கு அளிக்ககோரி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ள காரணம் ஏற்க தக்கதல்ல. இருப்பினும் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன். வரும் 7ம் தேதி (இன்று) மூன்று பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். மீறும்பட்சத்தில் சட்டத்தில் உள்ள உரிமைகள் பயன்படுத்தப்படும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங் தொடர்ந்து வாதிட்டார்.

நீலாங்கரை 2,400 சதுர அடி நிலம்

நீலாங்கரை 2,400 சதுர அடி நிலம்

சென்னை மகாபலிபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரையில் 2,400 சதுர அடி நிலம் வாங்கிய வழக்கில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இளவரசி பெயரில் கடந்த 1995 மே 17ம் தேதி கிரயம் செய்யப்பட்டுள்ளதாக அகமது என்பவர் அளித்துள்ள சாட்சியத்தை சிங் படித்து காட்டினார்.

தர்மபுரி வாடகை வீடு

தர்மபுரி வாடகை வீடு

தர்மபுரியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் கொடுத்துள்ள சாட்சியத்தில் 1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராகவும், பர்கூர் தொகுதி பேரவை உறுப்பினராகவும் இருந்த ஜெயலலிதா, தொகுதி பணியை கவனிப்பதற்காக எனது தாயார் பெயரில் இருந்த வீட்டை வாடகைக்கு எடுத்தார். ஆரம்பத்தில் மாதம் ரூ.34 ஆயிரம் வாடகை கொடுக்கப்பட்டது. எனது தாயார் இறந்த பின் வாடகை தொகை ரூ.13 ஆயிரமாக குறைத்து வழங்கினார். கடந்த 1996ம் ஆண்டுக்கு பின் வீட்டை காலி செய்தனர். எண் 36 போயஸ் கார்டன் முகவரியில் இருந்து சசிகலா கையெழுத்திட்டு காசோலை அனுப்பி வைக்கப்படும் என்று கூறியுள்ளதை படித்து காட்டினார்.

ராம்ராஜ் ஆக்ரோ மில்

ராம்ராஜ் ஆக்ரோ மில்

தமிழக அரசின் பொதுப்பணி துறையில் செயற்பொறியாளராக இருந்த வி.பாஸ்கரன் அளித்துள்ள சாட்சியத்தில் திருவாரூர் மாவட்டம், வண்டாள்பாளையத்தில் இயங்கி வந்த ராம்ராஜ் ரைஸ் மில்லை வாங்கி ராம்ராஜ் ஆக்ரோ மில்லாக மாற்றம் செய்ததாக பவானிசிங் தெரிவித்தார்.

கீர்த்திலால் ஜூவல்லர்ஸ் சாட்சியம்

கீர்த்திலால் ஜூவல்லர்ஸ் சாட்சியம்

கீர்த்திலால் ஜுவல்லர்ஸ் நிர்வாகி சுப்புராவ் அளித்துள்ள சாட்சியத்தில் வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் சிலர் எங்களிடம் அணுகி தங்களிடம் உள்ள தங்க ஆபரணங்களை மதிப்பீடு செய்து கொடுக்கும்படி கேட்டனர். மொத்தம் 228 அயிட்டங்களை மதிப்பீடு செய்தோம். அதில் 75 வைரம், 24 தங்க ஆபரணங்கள் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. எங்களிடம் கொடுத்த ஆபரணங்களை கடந்த 1986, 87ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாகவும், அப்போது ஆபரணங்களின் தொகை எவ்வளவு என்பதை மதிப்பீடு செய்யும்படி கேட்டு கொண்டனர். அதன்படி எங்களிடம் கொடுத்த ஆபரணங்களில் மதிப்பை 1986- 87ல் ரூ.78 லட்சத்து 10 ஆயிரத்து 400 என்றும் 1989-90ம் ஆண்டில் ரூ.1 கோடியே 41 லட்சத்து 18 ஆயிரத்து 90 என்று மதிப்பீடு செய்து கொடுத்ததாக சாட்சியம் அளித்துள்ளதை ஆதாரத்துடன் தெரிவித்தார்.

கோத்தாரி பைனான்ஸ் சாட்சியம்

கோத்தாரி பைனான்ஸ் சாட்சியம்

கோத்தாரி ஓரியண்ஸ் பைனான்ஸ் நிறுவன நிர்வாகி மோகன்ராஜ் கொடுத்துள்ள சாட்சியத்தில், தங்கள் நிறுவனத்தில் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, மூன்று தவணையாக ரூ2 லட்சத்து 81 ஆயிரத்து 307 டெபாசிட் செய்துள்ளதாக தெரிவித்தார்.

நடிகர் எஸ்.எஸ்.ஆர். மகன் சாட்சியம்

நடிகர் எஸ்.எஸ்.ஆர். மகன் சாட்சியம்

பிரபல திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மகன் இளங்கோவன் அளித்துள்ள சாட்சியத்தில் எனது தந்தையும், வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதாவும் இணைந்து மணிமகுடம் என்ற திரைப்படத்தில் நடித்தனர். அதன் மூலம் எங்கள் குடும்பத்துடன் ஜெயலலிதாவுக்கு உறவு ஏற்பட்டது. எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான எஸ். எஸ்.ஆர். திருமண மண்டபம் மற்றும் எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் திருமணமண்டபத்தை நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் நடத்த வாடகைக்கு கொடுத்ததாக தெரிவித்தார்.

ஜெ. ஆடிட்டர்

ஜெ. ஆடிட்டர்

வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் ஆடிட்டராக இருந்த கோபால்ரத்தினம் அளித்துள்ள சாட்சியத்தில், கடந்த 1964 முதல் 1986ம் ஆண்டு வரை ஜெயலலிதாவின் ஆடிட்டராக நான் பணியாற்றி வந்தேன். ஜெயலலிதா மற்றும் அவரது தாயார் பெயரில் இருந்த சொத்துகள், அதன் மூலம் கிடைத்த வருவாய் ஆகியவற்றை ஆண்டுதோறும் தணிக்கை செய்து அறிக்கை கொடுப்பதுடன், அதற்கேற்ற வருமான வரியும் தவறாமல் செலுத்தி வந்தோம். கலாநிகேதன் நாடக மன்றம், ஜாக்பேட், நிலத்தில் விளையும் பயிர்கள் மூலம் கிடைத்த வருவாய் ஆகியவையும் சொத்து கணக்கில் காட்டப்பட்டுள்ளது என்ற முழு விவரத்தை படித்து காட்டினார். ஆந்திரா மாநிலத்தில் ஹைதராபாத் நகரில் திராட்சை தோட்டம் வாங்கியது உள்பட பல தகவல்களையும் அவர் சாட்சியத்தில் தெரிவித்துள்ளதை படித்து காட்டினார்.

ஜெயா பப்ளிகேஷனுக்கு கடன்

ஜெயா பப்ளிகேஷனுக்கு கடன்

சென்னை அபிராமபுரத்தில் உள்ள இந்தியன் வங்கியில் மேலாளராக பணியாற்றிய பவானி கொடுத்துள்ள சாட்சியத்தில் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை பங்குதாரராக கொண்டு இயங்கி வரும் ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு எங்கள் வங்கியில் இருந்து ரூ.1.50 கோடி கடன் 1992ம் ஆண்டு வழங்கப்பட்டது. அந்த கடனை வட்டியுடன் 1994ம் ஆண்டு திருப்பி செலுத்தியதாக தெரிவித்தார்.

இதர வங்கி கடன்கள்

இதர வங்கி கடன்கள்

மேலும் கனரா வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, இந்தியன் வங்கி அதிகாரிகள் கொடுத்துள்ள சாட்சியத்தில் ஜெயலலிதா உள்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான கம்பெனிகள், பங்குதாரர்களாக உள்ள கம்பெனிகள் பெயரில் குறைந்த பட்சம் ரூ.500 முதல் ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்து கணக்கு தொடங்கியது, அந்த கணக்குகள் மூலம் கடன் பெற்றது, டெபாசிட் செய்தது போன்ற விவரங்களை தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக அனைத்து வங்கி கணக்குகளும் எண். 36 போயஸ் கார்டன் மற்றும் எண் 31ஏ போயஸ் கார்டன், சென்னை என்ற முகவரியில் மட்டுமே தொடங்கியுள்ளதாக சாட்சியம் அளித்துள்ளனர் என்றார்.

ஸ்ரீகுமரன் சில்க்ஸ்

ஸ்ரீகுமரன் சில்க்ஸ்

வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள வி.என்.சுதாகரன் திருமணத்திற்காக சென்னையில் உள்ள ஸ்ரீகுமரன் சில்க்ஸ் ஷோ ரூமில் ரூ.4 லட்சத்து 84 ஆயிரத்து 725 மதிப்பிலான பட்டு சேலைகள் உள்பட ஆடைகள் வாங்கியதாகவும், அதற்கான தொகையை ஜெயலலிதாவின் வங்கி கணக்கில் எடுத்து கொள்ளும் வகையில் அவரது கையெழுத்திட்ட காசோலை கொடுத்தாகவும் ஸ்ரீகுமரன் சில்க்ஸ் நிர்வாகி கேசவன் கொடுத்துள்ள சாட்சியத்தை படித்து காட்டினார்.

கிண்டி நிலம்..

கிண்டி நிலம்..

ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்காக சென்னை கிண்டியில் உள்ள தொழிற்பேட்டையில் ரூ.1.70 லட்சம் கொடுத்து நிலம் வாங்கியதாக விஸ்வநாதன் கொடுத்துள்ள சாட்சியத்தை எடுத்துரைத்தார்.

சேம நலநிதி தலைவராக சசிகலா

சேம நலநிதி தலைவராக சசிகலா

தமிழக சுற்றுலா துறை அலுவலர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி கொடுத்துள்ள சாட்சியத்தில் தமிழக சுற்றுலா துறையில் செய்தி தொடர்பாளராக நடராஜன் இருந்தபோது, சுற்றுலாத்துறை சேமநல நிதி பிரிவின் தலைவராக அவரது மனைவி சசிகலாவை நியமனம் செய்தார் என்ற விவரத்தை எடுத்து காட்டினார்.

இளவரசி பணம் டெபாசிட்

இளவரசி பணம் டெபாசிட்

முகமது ஆயூப் கொடுத்துள்ள சாட்சியத்தில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டியில் சசிகலா பெயரில் 3 பேரிடம் 13.57 ஏக்கர் நிலம் வாங்கி கிரயம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ரிவர்வே ஆக்ரோ கம்பெனி

ரிவர்வே ஆக்ரோ கம்பெனி

தமிழக மின்துறையில் பொறியாளராக பணியாற்றி வரும் மருதையன் கொடுத்துள்ள சாட்சியத்தில் ரிவர்வே ஆக்ரோ கம்பெனிக்கு மின் இணைப்பு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நிலம் வாங்கிக் குவிப்பு

நிலம் வாங்கிக் குவிப்பு

தமிழக அரசின் பத்திர பதிவுதுறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராஜகோபால் கொடுத்துள்ள சாட்சியத்தில் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெயரில் சென்னையில் உள்ள ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி, நீலாங்கரை, பையனூர், திருவல்லிகேணி, கிண்டி உள்பட பல பகுதிகள் நெல்லை, தஞ்சாவூர், கொடைக்கானல், கொடாநாடு, ஆந்திரா மாநிலம் உள்பட பல இடங்களில் நிலம் மற்றும் கட்டிடங்கள் வாங்கி குவித்துள்ளதையும், குறிப்பாக தமிழகத்தில் வாங்கிய சொத்துகளை நேரடியாக பதிவு துறை அலுவலகம் வந்து பதிவு செய்யாமல், சம்மந்தப்பட்ட பகுதி சார் பதிவாளரை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா வீட்டிற்கு வரவழைத்து அங்கேயே பத்திர பதிவு செய்துள்ளதை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்.

ரிவர்வே ஆக்ரோ நிறுவனத்துக்கு 948.80 ஏக்கர் நிலம்

ரிவர்வே ஆக்ரோ நிறுவனத்துக்கு 948.80 ஏக்கர் நிலம்

ரிவர்வே ஆக்ரோ நிறுவனம் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட பத்திர பதிவுகள் மூலம் 948.80 ஏக்கர் நிலத்தை பல கோடி மதிப்பில் வாங்கி வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள வி.என்.சுதாகரன் பெயரில் கிரயம் செய்யப்பட்டுள்ளது. ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்காக ரூ.16 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் கட்டிடம் வாங்கப்பட்டுள்ளது.

அடிமாட்டு விலையில் கங்கை அமரன் நிலம்

அடிமாட்டு விலையில் கங்கை அமரன் நிலம்

சென்னை அடுத்த பையனூரில் இசையமைப்பாளர் கங்கை அமரன் மற்றும் அவரது மனைவி மணிமேகலை பெயரில் இருந்த நிலங்கள் ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. அன்றைய மார்க்கெட் விலையை விட அடிமாட்டு விலைக்கு நிலம் வாங்கி வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா பெயரில் பதிவு செய்துள்ளதை ஆதாரத்துடன் விளக்கினார். மேலும் ராமையாவுக்கு சொந்தமான நிலம் ரூ.1 லட்சம், காந்தபாயிக்கு சொந்தமான நிலம் ரூ.3 லட்சத்து 04,500, வசந்தபாயிக்கு சொந்தமான நிலம் ரூ.3 லட்சத்து 46,500, அசோக்குமார் என்பருக்கு சொந்தமான நிலம் ரூ.2.84 லட்சம் என்று மொத்தம் ரூ.17 லட்சத்து 26 ஆயிரம் கொடுத்து வாங்கி சசிகலா பெயரில் பதிவு செய்துள்ளதை எடுத்து கூறினார்.

சிறுதாவூர் நிலம்

சிறுதாவூர் நிலம்

சிறுதாவூரில் அமானுல்லாவுக்கு சொந்தமான 41.85 ஏக்கர் நிலம் ரூ.1.90 லட்சத்திற்கும், கோபிநாத் என்பவருக்கு சொந்தமான 10.86 ஏக்கர் நிலம் ரூ.1.80 லட்சத்திற்கும், அமானுல்லாவுக்கு சொந்தமான 7.44 ஏக்கர் நிலம் ரூ.1,10 லட்சத்திற்கும், முனியன் என்பருக்கு சொந்தமான 03.4 ஏக்கர் நிலம் ரூ.1.07 லட்சத்திற்கும், பழனிசாமி என்பவருக்கு சொந்தமான தலா 3,197 சதுர அடி கொண்ட 3 கட்டிடம் னீ15 லட்சம் கொடுத்து பதிவு செய்யப்பட்டுள்ளதை புள்ளி விவரத்துடன் தெரிவித்தார். மெடோ ஆக்ரோ பாரம் நிறுவனத்திற்காக பலரிடம் 16 லட்சத்து 94 ஆயிரத்து 250 விலையில் 113.21 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமராஜ் ஆக்ரோ நிறுவனத்திற்காக காந்தி என்பவருக்கு சொந்தமான 18.58 ஏக்கர் நிலம் ரூ.3 லட்சத்து 96 ஆயிரம் கொடுத்து வாங்கி பதிவு செய்யப்பட்டுள்ளது. லட்சுமி என்பவருக்கு சொந்தமான 3.84 ஏக்கர் நிலம் ரூ.76,800க்கும், அசோகன் என்பவருக்கு சொந்தமான 8.01 ஏக்கர் நிலம் ரூ1 லட்சத்து 62,200க்கு வாங்கி பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ்

ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ்

ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்காக வாடே ரமேஷ் என்பவருக்கு சொந்தமான 6 ஆயிரத்து 943 சதுர அடிகள் கொண்ட கட்டிடம் ரூ.90 லட்சத்திற்கு வாங்கி பதிவு செய்யப்பட்டுள்ளது.

லெக்ஸ் பிராபர்ட்டிஸ்

லெக்ஸ் பிராபர்ட்டிஸ்

லெக்ஸ் பிராபர்ட்டிஸ் நிறுவனத்திற்கு ரூ.26 லட்சம் மதிப்பில் கட்டிடம் வாங்கி பதிவு செய்துள்ளதாக புள்ளி விவரத்துடன் தெரிவித்தார்.

கோடநாட்டுக்கு கடன்

கோடநாட்டுக்கு கடன்

அபிராமபுரம் இந்தியன் வங்கியில் மூத்த மேலாளராக பணியாற்றிய சண்முகசுந்தரம் கொடுத்துள்ள சாட்சியத்தில், கோடநாடு தேயிலை தோட்டத்தில் குணபூசனம் என்பவர் பங்குதாரராக இருந்தார். சில நாட்கள் கழித்து, இந்த வழக்கில் 2, 3, 4வது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, வி.என்.சுதாகரன், இளவரசி ஆகியோர் பங்குதாரர்களாக நியமிக்கப்பட்டனர். ஓரிரு மாதங்களில் உடல்நிலையை காரணம் காட்டி, தேயிலை தோட்ட பங்குதாரர் பொறுப்பில் இருந்து விலகிய குணபூசனம், மேற்கண்ட மூன்று பேரை தேயிலை தோட்டத்தில் முழு பங்குதாரராக நியமனம் செய்வதாக அதிகாரபூர்வமாக கடிதம் கொடுத்தார். கோடநாடு தேயிலை தோட்டத்தின் மேம்பாட்டிற்காக கடன் கேட்டு இந்த 3 பேரும் விண்ணப்பித்தனர். அதை பரிசீலனை செய்து ரூ.2 கோடியே 55 லட்சம் விவசாய கடன், ரூ.1 கோடியே 20 லட்சம் நீண்டகால கடன் என்ற வகையில் மொத்தம் ரூ.3 கோடியே 75 லட்சம் கடனாக வங்கி மூலம் வழங்கினோம்.

வி.என்.சுதாகரன் திருமண செலவு

வி.என்.சுதாகரன் திருமண செலவு

சென்னையில் உள்ள பாலு கலர் லேப் உரிமையாளர் ஆறுமுகம் கொடுத்துள்ள சாட்சியத்தில், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வீட்டில் இருந்து எனக்கு போன் வந்தது. அதில் பேசிய ஜெயலலிதா, வி.என்.சுதாகரனுக்கு 1995 செப்டம்பர் 7ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது. அந்த திருமண நிகழ்ச்சியை படம் எடுத்து கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். அதையேற்று திருமண நிகழ்வுகளை படம் பிடித்து 3 ஆல்பமாக தயாரித்து கொடுத்தேன். அதற்கான கட்டணம் ரூ.54 ஆயிரத்து 660 பில்லை காசோலையாக கொடுத்தனர். அதில் ஜெயலலிதா கையெழுத்து போட்டிருந்தார். அதை தொடர்ந்து எனது தனிபட்ட தேவைக்காக ரூ.3 லட்சம் கடனுதவி வழங்கும்படி அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினேன். எனது கடிதத்திற்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கூறியுள்ளார்.

மண மேடைக்கு மட்டும் ரூ2 கோடி

மண மேடைக்கு மட்டும் ரூ2 கோடி

சுதாகரன் திருமணம் தொடர்பாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தங்கராஜ் கொடுத்துள்ள சாட்சியத்தில், சுதாகரன் திருமணமேடை அமைக்க மட்டும் 2 கோடியே 11 லட்சம் செலவிடப்பட்டு இருந்தது. பந்தல் அமைப்பதற்கு ரூ7 லட்சத்து 28 ஆயிரத்து 527 செலவிடப்பட்டிருந்தது. வி.வி.ஐ.பிகள் வரவேற்புக்காக அமைக்கப்பட்டிருந்த நுழைவு வாயிலுக்கு ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 200, வி.ஐ.பிகள் வரவேற்பு வளையத்திற்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் செலவிடப்பட்டிருந்தது. பந்தலை சுற்றி தடுப்புவேலி அமைப்பதற்காக ரூ87 ஆயிரம் செலவிடப்பட்டிருந்தது. திருமணத்தில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களின் கார்கள் பார்கிங் செய்ய மட்டும் ரூ.15 லட்சம் செலவில் வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. ஒட்டு மொத்தமாக அலங்கார வேலைபாடுகள், தென்னங்குறுத்தில் வரவேற்பு வளையும் அமைப்பது உள்பட அலங்கார தேவைகளுக்கு மட்டும் ரூ.5 கோடியே 91 லட்சம் செலவிடப்பட்டிருந்ததாக ஆய்வு அறிக்கை தயாரித்து கொடுத்தேன் என்றார்.

திருமண அழைப்பிதழ்கள்

திருமண அழைப்பிதழ்கள்

சென்னையில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வரும் உரிமையாளர் ரமேஷ் கொடுத்துள்ள சாட்சியத்தில், வி.என்.சுதாகரன் திருமணத்தின்போது நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அழைப்பிதழ்கள் அச்சடித்து கொடுக்கும்படி தமிழக அரசில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த ஜவஹர்பாபு என்னுடன் தொடர்பு கொண்டு கேட்டார். அவரின் கோரிக்கையை ஏற்று 65 ஆயிரம் திருமண அழைப்பிதழ்கள் மற்றும் 6 ஆயிரம் கார் பாஸ்கள் அச்சடித்து கொடுத்தேன். அதற்கான கட்டணமாக ரூ.11 லட்சம் காசோலை மூலம் வழங்கப்பட்டது. காசோலையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டிருந்தார்' என்று கூறியிருந்தார்.

அழைப்பிதழ் அனுப்ப ரூ.2.22 லட்சம் செலவு

அழைப்பிதழ் அனுப்ப ரூ.2.22 லட்சம் செலவு

சென்னை அ.தி.மு.க அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றிய மகாலிங்கம் கொடுத்துள்ள சாட்சியத்தில், வி.என்.சுதாகரன் திருமணத்திற்காக சுமார் 55 ஆயிரம் அழைப்பிதழ்கள் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு அழைப்பிதழ் அனுப்ப ரூ.4 என்ற வகையில் ரூ.2.20 லட்சம் செலவிடப்பட்டது' என்று கூறியுள்ளார்.

250 வைர கற்களுடன் ஒட்டியாணம்

250 வைர கற்களுடன் ஒட்டியாணம்

உம்மடி பங்காருசெட்டி ஜூவல்லர்ஸ் நிறுவன பங்குதாரர் ஸ்ரீஹரி கொடுத்துள்ள சாட்சியத்தில், கடந்த 1975ம் ஆண்டு முதல் ஜெயலலிதா எங்கள் நிறுவனத்தில் வாடிக்கையாளராக இருந்துள்ளார். பல சமயங்களில் அவர் ஆர்டர் கொடுக்கும் தங்க, வைர ஆபரணங்களை தயாரித்து கொடுத்துள்ளேன். ஜெயலலிதா வீட்டில் உள்ள பழைய தங்க ஆபரணங்களை வேதரத்தினம் என்ற பொற்கொல்லர் மூலம் மதிப்பீடு செய்தும் கொடுத்துள்ளேன். அவர் பயன்படுத்தி வரும் பல ஆபரணங்கள் எங்கள் நிறுவனத்தில் ஆர்டர் கொடுக்கப்பட்டு, மும்பை, கோவை உள்பட பல நகரங்களில் தயாரித்து கொடுத்ததுதான். ஒருநாள் ஜெயலலிதா அழைப்பின் பேரில் வீட்டிற்கு சென்றேன். வைரகற்கள் பதித்த ஒட்டியாணம் தயாரித்து கொடுக்கும்படி கேட்டனர். அதையேற்று 250 வைரகற்கள் படித்த ஒட்டியாணம் தயாரித்து கொடுத்தேன் என்று கூறியிருக்கிறார்.

ஜெ. வீட்டு பணியாளர்

ஜெ. வீட்டு பணியாளர்

சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமை செயலகத்தில் இணை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள ஜெயராமன் என்பவர் கொடுத்துள்ள சாட்சியத்தில், ‘நான் அரசு பணியில் இருந்து கடந்த 1993ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். எதாவது பணியாற்ற வேண்டும் என்று எனக்கு சீனியர் அதிகாரியாக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி கருப்பண்ணாவிடம் கூறினேன்.

வங்கி கணக்கு, வாகன ஏற்பாடு

வங்கி கணக்கு, வாகன ஏற்பாடு

அவர் சிபாரிசு கடிதம் கொடுத்து சசிகலாவிடம் அனுப்பினார். சில மாதங்கள் அவரது வீட்டில் பணியாற்றிய பின், சசிகலாவின் சிபாரிசின் பேரில் ஜெயலலிதா வீட்டில் மாதம் ரூ3 ஆயிரம் சம்பளத்தில் பணியில் சேர்ந்தேன். சசிகலா, ஜெயலலிதாவின் முழு நம்பிக்கையை பெற்றதால், முக்கிய பணிகளை என்னிடம் ஒப்படைத்தனர். அவர்கள் செய்ய சொன்னதை தட்டாமல் செய்தேன்.

என் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்து ஏற்கனவே ஜெயலலிதா வீட்டில் பணியாற்றி வந்த ராமஜெயத்துடன் இணைந்து முக்கிய பணிகளை கவனிக்கும்படி உத்தரவிட்டனர். முக்கியமாக ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் வங்கி கணக்குகளை கவனித்து கொள்வது, வீட்டில் இருந்து வங்கியில் செலுத்தும் பணத்தை பத்திரமாக கொண்டு சேர்ப்பது, வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்கான சலான்களை பூர்த்தி செய்து கொடுப்பது, சென்னை மட்டுமில்லாமல், தமிழகத்தில் பல இடங்களில் வாங்கிய நிலம் மற்றும் கட்டிடங்களின் பத்திர பதிவு பணிகளை கவனித்து கொள்வது, ஜெயலலிதாவால் நிலம் பார்க்க அனுப்பி வைக்கப்படும் அரசு அதிகாரிகள், நில உரிமையாளர்களுக்கு வாகனம் உள்பட பல வசதிகள் செய்து கொடுப்பது, தணிக்கையாளர்களுக்கு தேவையான ஆவணங்கள் தயார் செய்து கொடுப்பது உள்பட பல பணிகளை கவனித்துள்ளேன்' என்று கூறியிருக்கிறார் என விவரித்தார் பவானிசிங்.

இதைத் தொடர்ந்து இன்று திங்கள்கிழமையும் பவானிசிங்கின் வாதம் தொடர்கிறது

English summary
The special court trying the multi-crore disproportionate assets case involving Tamil Nadu chief minister J Jayalalithaa on Saturday directed V K Sasikala and J Ilavarasi to appear on Monday along with V N Sudhakaran. Only Sudhakaran, the third accused in the case, appeared before the court on Saturday.The judge observed that diabetes is now common in the country as nearly 40% of the population are said to be affected.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X