For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொத்து குவிப்பு: முன்கூட்டியே மேல்முறையீட்டு விசாரணை- ஜெ. கோரிக்கை- சுப்ரீம் கோர்ட்டில் மறுப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை முன் கூட்டியே நடத்தக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது. உச்சநீதிமன்றத்தில் வரும் 18-ந் தேதி நடைபெறும் விசாரணையின் போது மேல்முறையீட்டு மனு மீது உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் செப்டம்பர் 27ம் தேதியன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. அத்துடன் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதமும் இதர மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்தது பெங்களூர் நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Supreme Court Rejects Jayalalithaa's Plea to Advance Hearing in Assets Case

4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் எம்.எல்.ஏ. பதவியை ஜெயலலிதா இழந்தார். இதனால் முதல்வர் பதவியையும் அவர் பறிகொடுக்க நேரிட்டது.

இதன் பின்னர் ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கர்நாடகா உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதனால் உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுவை அக்டோபர் 17ம் தேதியன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச், ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு டிசம்பர் 18ம் தேதி வரை இடைக்கால நிபந்தனை ஜாமீன் கொடுத்தது.

மேலும் தனக்கு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா இன்னொரு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் டிசம்பர் 18ம் தேதிக்குள் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் அனைத்து மேல்முறையீட்டு ஆவணங்களையும் தாக்கல் செய்தாக வேண்டும்; இதில் ஒருநாள் கூட அவகாசம் வழங்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இதையடுத்து ஜெயலலிதாவின் வழக்கு தொடர்பான மனு மீதான விசாரணையை டிசம்பர் 18ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனால் 21 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் ஜெயலலிதா உட்பட 4 பேரும் விடுதலையாகினர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குக்கான ஆவணங்கள் அனைத்தையும் ஜெயலலிதா உள்ளிட்டோர் தொகுதி தொகுதிகளாகத் தாக்கல் செய்துவிட்டனர்.

கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை முன்னதாக தொடங்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணையை நடத்த உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு இன்று திடீரென புதிய கோரிக்கையை முன் வைத்தது.

ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் பாலி நாரிமன் இந்தக் கோரிக்கையை விடுத்தார். ஆனால், அதற்கான காரணம் எதையும் நாரிமன் கூறவில்லை. ஆனால், இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தலைமையிலான பெஞ்ச், உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் தரப்பட்ட வழக்கின் விசாரணை டிசம்பர் 18ந் தேதி வர இருக்கிறது. 18-ந் தேதிக்கு இன்னும் 7 நாட்கள்தானே இருக்கிறது.. அதற்குள் ஏன் இந்த அவசரம்.. திட்டமிட்டபடி டிசம்பர் 18ம் தேதியே வழக்கின் விசாரணை நடைபெறும். அன்றைய தினம் மேல்முறையீட்டு மனு மீது உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று கூறி ஜெயலலிதாவின் மனுவை நிராகரித்துவிட்டனர்.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி முதலில் புகார் கொடுத்தவரான பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் சிலவற்றை தமக்கு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று சுப்பிரமணிய சுவாமி கோரும் ஆவணங்களை அளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை 18 வருடங்கள் இழுத்தடித்த ஜெயலலிதா, பதவி காலியான பின் இப்போது வழக்கை வேகவேகமாகவும் முன்கூட்டியும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தது.

அதாவது, வழக்கை ஒரு நாள் கூட வீணாக்காமல் நீதிமன்றம் நடத்தி இவரை விடுவித்துவிட்டால் ரொம்ப சீக்கிரமே மீண்டும் முதல்வராகிவிடுவாராம்...

English summary
The Supreme Court today rejected AIADMK chief and former Tamil Nadu Chief Minister J Jayalalithaa's plea to advance the hearing of her appeal against her conviction and sentence in a disproportionate assets case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X