For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் விசாரிக்கப்படுவாரா? வரும் 23-ந் தேதி சுப்ரீம் கோர்ட் முடிவு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்தக் கோரும் சுப்பிரமணியன் சுவாமியின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் 23-ந் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

வெளிநாடு வாழ் தொழிலதிபரான சிவசங்கரனின் ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

SC to screen CBI file on P Chidambaram in Aircel-Maxis case

இதே ஏர்செல் நிறுவனத்தில் ரூ4,000 கோடியை முதலீடு செய்வதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் ஒப்புதலை 2005ஆம் ஆண்டு மேக்சிஸ் நிறுவனம் கோரியிருந்தது. ஒப்புதல் தர வேண்டிய இந்த வாரியத்துக்கு நிதி அமைச்சர்தான் தலைவர். அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் ப. சிதம்பரம்.

மேக்சிஸ் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று உடனே சிதம்பரம் ஒப்புதல் தரவில்லை. மேக்சிஸ் நிறுவனத்தின் ஒப்புதல் கோரும் மனு நிலுவையில் இருந்த நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் திடீரென சில நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு கைமாறின.

பின்னர் 2006ஆம் ஆண்டு மேக்சிஸ் நிறுவனம் முதலீட்டுக்கு ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்த நிலையில் இந்த பங்குகளும் பெருந்தொகைக்கு விற்பனையாகின. இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பது பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமியின் புகார்.

அத்துடன் சிதம்பரத்தையும் இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்தார். இதுதொடர்பான மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான சுப்பிரமணியன் சுவாமி முன்வைத்த வாதம்:

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்பான குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்து ஓராண்டு ஆகிறது. ஆனால் அந்த ஒப்பந்தத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்க மூல காரணமாக இருந்தவர் அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்.

ஏர்செல் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம், அதன் சார்பு நிறுவனங்கள் மூலம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது. ஆனால் விதிகளை மீறி அந்த ஒப்பந்தத்துக்கு அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம் எப்படி அனுமதி அளித்தது? இதன் விசாரணையின் முடிவு குறித்து, வழக்குத் தொடுத்த எங்களுக்குத் தெரியவில்லை. ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப முடியாதது போன்ற பல்வேறு காரணங்களால் சி.பி.ஐ. விசாரணை தடைபட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ப. சிதம்பரத்திடம் ஓராண்டுக்கு முன்பு சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் மத்திய அரசின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்கூட சில விவரங்களைத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதையும் சி.பி.ஐ. தொடர் விசாரணையின் போது பரிசீலிக்கலாம்.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி வாதிட்டார்.

முந்தைய விசாரணை அறிக்கை தாக்கல்

அப்போது தலைமை நீதிபதி தத்து, இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. மத்திய அமலாக்கத் துறை ஆகியவை நடத்திய விசாரணையின் நிலவர அறிக்கை சீல் வைக்கப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் உள்ளது என்றார்.

சி.பி.ஐ. சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் நீங்கலாக, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் விசாரணை நிறைவடைந்துவிட்டது. சிதம்பரம் தொடர்பான விசாரணை உள்ளிட்ட இந்த வழக்கு தொடர்பாக நிலவர அறிக்கையை சீல் வைக்கப்பட்ட நான்கு உறைகளில் தாக்கல் செய்கிறேன் என்றார்.

வேணுகோபால் விவகாரம்

அத்துடன் சி.பி.ஐ. வழக்குகளில் நான் ஆஜராகக் கூடாது என அதன் தலைமை கருதுகிறது. எனவே, சி.பி.ஐ. சார்பில் இனி நான் நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டேன் என்றார்.

அப்போது தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, ஸ்பெக்ட்ரம் வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை தொடர்பான வழக்குகளில் மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் தொடர்ந்து எங்களுக்கு உதவ வேண்டும். இதை சி.பி.ஐ. மத்திய அமலாக்கத் துறைக்கு உரிய முறையில் தெரிவிப்போம். ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு தொடர்பாக ஏற்கெனவே விசாரணை அமைப்புகள் அளித்துள்ள நிலவர அறிக்கையுடன் சேர்த்து தற்போதுள்ள அறிக்கைகளையும் ஆராய்கிறோம். இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 23-ந் தேதி தொடரும் என்று ஒத்திவைத்தார்.

English summary
The Supreme Court on September 23 will scrutinize the CBI's sealed cover report detailing its probe into alleged irregular Foreign Investment Promotion Board (FIPB) clearance to the Aircel-Maxis deal in 2006 and highlights of its examination of former finance minister P Chidambaram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X