For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹைகோர்ட்டுக்கு மத்திய படை பாதுகாப்பு வழக்கு... தமிழக அரசுக்கு சவுக்கடி கொடுத்த சுப்ரீம் கோர்ட்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மத்திய படை பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது தமிழக அரசை வெளுத்து வாங்கியது உச்சநீதிமன்றம்.

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி செப்டம்பர் மாதம் 14-ந் தேதி தலைமை நீதிபதியின் விசாரணை அறையில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

SC slams TN Police over security at Madras HC

இந்த விசாரணையின் முடிவில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.

மேல்முறையீட்டு மனு விவரம்

அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

சென்னை உயர் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் 900 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3 ஷிப்டுகளாக போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு பணிக்காக ரூ.5 கோடியே 50 லட்சம் செலவில் பல்வேறு பாதுகாப்பு சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்துக்கு தமிழக போலீசாரால் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு என்பது தேவையற்றது; எந்த விதத்திலும் பொருத்தமாக இருக்காது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும் தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே பிரச்னைகள் ஏற்பட்டால் அவற்றை யார் தீர்த்து வைப்பது. நீதிமன்ற வளாகத்திற்குள் பிரச்னை ஏற்பட்டால் யார் வழக்கு பதிவு செய்வது போன்ற சிக்கல்கள் உள்ளன. மத்திய தொழில் பாதுகாப்பு படையை கொண்டு வருவதில் தமிழக அரசுக்கு விருப்பம் இல்லை.

இவ்வாறு மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர் மற்றும் பி.சி. பந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. (இதில் நீதிபதி டி.எஸ். தாக்கூர் தான் அடுத்த மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார். தலைமை நீதிபதி தத்து ஓய்வு பெறப் போகிறார்.)

பதிவாளர்தான் காரணம்

அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் எல்.நாகேஸ்வரராவ் ஆஜராகி முன்வைத்த வாதம்: 2009-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் நீதிமன்றத்துக்குள் செல்ல காவல் துறையினருக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. செப்டம்பர் 14-ந் தேதியன்று வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவது தொடர்பாக முன்கூட்டியே தமிழகக் காவல் துறையினர் சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளரிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால், போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றப் பதிவாளர் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. அதனால்தான் சம்பவ நாளில் காவல் துறையினர் உடனே நடவடிக்கை எடுக்கவில்லை.

மாநில ஒப்புதல் அவசியம்

மாநிலத்தின் வரம்பில் உள்ள இடங்களுக்கான காவல் பணி என்பது அந்தந்த மாநில அரசு தொடர்புடையது. அப்படி ஏதேனும் அவசர நிலை இருந்து மத்திய அரசின் பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதலுடன் மட்டுமே மத்திய போலீஸ் பாதுகாப்பை ஏற்பாடு செய்ய முடியும். மாநிலத்துக்குள் உள்ள சட்டப்பிரச்சினையில் மாநில அரசுதான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏறத்தாழ தமிழக காவல் படையினர் 900 பேர் அமர்த்தப்பட்டும், ரூ.5.5 கோடிக்கு புதிதாக நவீன பாதுகாப்பு கண்காணிப்பு கருவிகள் அமைக்கப்பட்டும் உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உயர்நீதிமன்றத்துக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது.

மொழி தெரியாது...

கடந்த 6 ஆண்டுகளாக எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணியில் உள்ளனர். அவர்களுக்கு உள்ளூர் மொழி தெரியாது.

நீதிமன்றத்துக்கு வருகை தருபவர்களின் உடைமைகளை பரிசோதிக்கவும், அடையாள அட்டை வைத்துள்ளனரா? என்பதை சரிபார்க்கும் பணியை மேற்கொள்ளும்போதும், உள்ளூர் மொழி தெரியவேண்டியது அவசியம். மொழி தெரியாததால் பிரச்சனை அதிகரித்து மோதல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் மத்திய படை பாதுகாப்பு, எந்த வகையில் இருந்தாலும் அது சரியாக இருக்காது. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு எல்.நாகேஸ்வரராவ் வாதாடினார்.

உங்க பிரச்சனைதான் என்ன?

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதி டி.எஸ். தாக்கூர் தமிழக அரசின் அத்தனை வாதங்களையும் அப்படியே நிராகரித்தார். அவர் கூறியதாவது:

உங்களுக்கு என்ன பிரச்னை அதை முதலில் சொல்லுங்கள். மத்திய தொழில் பாதுகாப்பு படை கேட்கும் தொகையை கட்டுவதில் பிரச்னையா அல்லது அந்த பாதுகாப்பை விரும்பவில்லை என்ற பிரச்னையா?

நீதிபதிகள் அச்சமில்லாமல், பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தலைமை நீதிபதி அறையில் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது கையில் தடியுடன் மாநில போலீசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இத்தகைய அத்துமீறல்களைப் பார்த்த பிறகே, மத்தியப் படைப் பாதுகாப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராணுவத்தை கூட நிறுத்தலாம்

உயர் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவர்களிடையே ஏற்கனவே நடைபெற்ற மோதலின் போதும் தமிழகக் காவல் துறையினர் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்தனர். தொடர்ச்சியாக இத்தகைய அத்துமீறல்கள் நடைபெறும் போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பொது மக்கள் ஆகியோருக்குரிய பாதுகாப்பை தமிழகக் காவல் துறை எவ்வாறு உறுதிப்படுத்தும்?

உயர்நீதிமன்றமானது, ஆக்கப்பூர்வமான அமைப்பு. அதற்கு சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்பு வழங்க முடியாவிட்டால், மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையோ அல்லது ராணுவத்தையோ கூட பாதுகாப்புக்கு நிறுத்த நீதிமன்றத்தால் உத்தரவிட முடியும். சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்பே தேவையில்லை எனக் கூறுவதற்கு வலுவான காரணம் உள்ளதா?

இவ்வாறு நீதிபதி தாக்கூர் கேள்வி எழுப்பினார்.

மீண்டும் மொழி பிரச்சனை

இதற்கு பதிலளித்த நாகேஸ்வரராவ், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிப்பதற்காக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.36 கோடி என்ற பெருந்தொகையை அளிப்பது பிரச்சினையை ஏற்படுத்தும்; மத்திய படை பாதுகாப்பு போடுகிறபோது, அது மாநில போலீசாரின் மன உறுதியை பாதிக்கும்.

சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்பு அளித்தால், உள்ளூர் மக்களுடன் அந்த வீரர்கள் தொடர்பு கொள்ள மொழி ஒரு தடையாக இருக்கும். மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், சி.ஐ.எஸ்.எஃப். அதிகாரிகளுடன் அண்மையில் நடத்தப்பட்ட கூட்டத்தில், தமிழகக் காவல் துறையின் பாதுகாப்பே போதுமானது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர் என்றார்.

உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு

ஆனால் இந்த வாதங்களை நிராகரித்து நீதிபதிகள் கூறியதாவது:

அசாதாரணமான சூழ்நிலையில் மத்திய படையை பாதுகாப்புக்கு அனுப்புவதில் என்ன பிரச்னை உள்ளது. மொழிப்பிரச்னை என்பது உங்கள் பிரச்னை அல்ல. நீதித்துறை மரியாதையுடன் செயல்பட வேண்டும். பாதுகாப்பிற்கு உயர் நீதிமன்றம் நினைத்தால் மத்திய தொழில் பாதுகாப்பு படை மட்டுமல்ல, சிஆர்பிஎப் ஏன் ராணுவத்தைக் கூட அழைக்க முடியும்.

செயல்படாத தமிழக காவல்துறை

உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் கோஷங்கள் எழுப்பியபோது, காவல்துறை தங்களது பங்களிப்பை செய்யவில்லை. உயர்நீதிமன்றத்தின் கண்ணியத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது. செப்டம்பர் 14-ந் தேதி சம்பவம் நடந்தபோது, பிற வழக்கறிஞர்கள் வெறும் பார்வையாளர்களாகத்தான் இருந்துள்ளனர்.

வாபஸா? டிஸ்மிஸா?

இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது. உங்கள் மனுவை வாபஸ் பெறுகிறீர்களா அல்லது தள்ளுபடி செய்யட்டுமா? இவ்வாறு நீதிபதிகள் கேட்டுவிட்டு மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடுவதை விட்டுவிட்டு இங்கு எதற்கு வந்தீர்கள் என்றும் காட்டம் காட்டினர்.

வாபஸ்

இதன் பின்னர் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவை வழக்கறிஞர் எல்.நாகேஸ்வரராவ் திரும்பப் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய தலைமை நீதிபதி

தமிழக அரசை இவ்வளவு கடுமையாக சாடியுள்ள நீதிபதி டி.எஸ். தாக்கூர் தான் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து டிசம்பர் 2-ந் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

இதனைத் தொடர்ந்து டி.எஸ் தாக்கூரை புதிய தலைமை நீதிபதியாக ஹெச்.எல். தத்து பரிந்துரைத்துள்ளார். இந்த பரிந்துரையை மத்திய அரசு பரிசீலித்து ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Supreme Court on Wednesday slammed the Tamil Nadu Police for failing to provide adequate security to the Madras High Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X