எழுதி வைச்சிக்கோங்க.. விரைவில் உங்கள் காதை திருகும் நாள் வரும்.. பாஜகவை சாடிய மம்தா பானர்ஜி
கொல்கத்தா: ‛‛இன்று நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள். அதனால் மத்திய விசாரணை அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கிறீர்கள். நாளை ஆட்சியில் இல்லாதபோது உங்களின் வீடுகளில் நுழைந்து காதை பிடித்து இழுத்து வரும் நாள் விரைவில் வரும்'' என மம்தா பானர்ஜி, பாஜகவினரை கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேற்கு வங்கத்தில் முதல் அமைச்சராக இருப்பவர் மம்தா பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள இவர் தொடர்ந்து 3வது முறையாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த சட்டசபையில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நடந்தது. இருப்பினும் இறுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

தொடரும் வார்த்தை போர்
இந்நிலையில் தான் தொடர்ந்து பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே தொடர்ந்து வார்த்தைப்போர் நடந்து வருகிறது. மம்தா பானர்ஜியின் ஆட்சியில் மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. வன்முறைகள் நடக்கிறது. ஊழல், முறைகேடுகள் நடக்கிறது என பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசை மம்தா பானர்ஜி உள்பட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மத்திய அமைப்புகள் நடவடிக்கை
மேலும் மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக ஊழல், சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக கூறி ஏற்கனவே அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் செய்யப்பட்டார். இதுதொடர்பாக கடந்த 11ம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மாணிக் பட்டாச்சார்யாவை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். முன்னதாக வங்கதேசத்துக்கு சட்டவிரோதமாக மாடு கடத்தல் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அனுப்ரதா மோண்டல் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இவ்வாறு மத்திய விசாரணை அமைப்புகள் தொடர்ந்து மம்தா பானர்ஜியின் கட்சியை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.

மம்தா பானர்ஜி கோபம்
இந்நிலையில் தான் மம்தா பானர்ஜி இன்று பபானூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பாஜகவை கடுமையாக தாக்கி பேசினார். அப்போது மம்தா பானர்ஜி கூறுகையில், ‛‛மத்தியில் இன்று பாஜக அதிகாரத்தில் உள்ளது. இதனால் மத்திய விசாரணை அமைப்புகளை வைத்து அதிகாரத்தை காட்டுகிறது. நாளை நீங்கள் அதிகாரத்தில் இல்லாதபோது இதே விசாரணை அமைப்புகள் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.

காதை பிடித்து இழுத்து வரும் நாள்
உங்கள் வீட்டுக்குள் புகுந்து காதை பிடித்து வெளியே இழுத்துவரும் காலம் வரும். அந்த நாள் விரைவில் வரும். துர்கா பூஜையின் போது, அசுரனுக்கு பதிலாக தேசப்பிதா மகாத்மா காந்தியை போன்று படம் வைக்கப்பட்டது. இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?. இந்த விஷயத்தில் நான் ஏமாற்றமடைந்துள்ளேன். பூஜை வேளையில் இதுபற்றி கூற வேண்டாம் என்று நினைத்தேன். இதுபோன்ற வெட்கக்கேடான செயலுக்கு பொதுமக்கள் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள்'' என்றார்.












Click it and Unblock the Notifications