For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது அதுக்கும் மேல.. 'கனிம கொள்ளை' ரெட்டிகளுக்கு சுஷ்மா தாயான கதை தெரியுமா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பெரும் பணக்காரராக மாறிய ஐபிஎல் அமைப்பின் மாஜி தலைவர் லலித் மோடிக்கு உதவி செய்த விவகாரம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால், இதே சுஷ்மா சுவராஜ் மற்றொரு சட்ட விரோத பணக்கார குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமாக இருந்து, அவர்களால் 'தாய் என்று அன்போடு' அழைக்கப்பட்டவர் என்பது அதிகம் பேருக்கு தெரிந்திருக்காது.

கர்நாடக பயணம்

கர்நாடக பயணம்

ஒரு காலத்தில் காங்கிரசின் கோட்டையாக இருந்தது கர்நாடகா. சுதந்திர இந்தியாவில் தேர்தல் நடத்தப்பட தொடங்கிய காலம் தொட்டு, கர்நாடகாவின் பெல்லாரி மக்களவை தொகுதி கை சின்னத்தாரின் கைக்குள்தான் இருந்து வந்தது. அந்த தைரியத்தில்தான் 1999ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெல்லாரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டார் காங்கிரசின் சோனியா காந்தி.

சோனியாவுடன் போட்டி

சோனியாவுடன் போட்டி

சோனியாவை எதிர்த்து வீழ்த்த வல்லவர் யார் என்று தேடியபோது, பெண்ணுக்கு பெண் என்ற போட்டியில், பாஜக தலைவர்கள் கண்ணுக்கு தென்பட்டவர்தான் சுஷ்மா சுவராஜ். 12 நாட்களே தேர்தல் பிரச்சாரம் செய்த சுஷ்மா சுவராஜ் பெற்ற வாக்குகள் 358,000. வெறும் 7 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் சோனியாவிடம் தோற்றார் சுஷ்மா.

பின்னணியில் ரெட்டிகள்

பின்னணியில் ரெட்டிகள்

டெல்லி முதல்வராக பதவி வகித்த சுஷ்மாவுக்கும், ஆயிரம் கிலோ மீட்டர் தாண்டியுள்ள காங்கிரஸ் கோட்டையான பெல்லாரிக்கும் என்ன சம்மந்தம்? மூன்றரை லட்சம் வாக்குகளை அவர் பெற்றது எப்படி? என்பது போன்ற கேள்விகளை பின்தொடர்ந்தால், கேள்விகள் கொண்டு விடும் வீட்டு முகவரி ரெட்டி சகோதரர்களுடையதாக இருக்கும். ஆம்.. சட்ட விரோத கனிம குவாரி தொழிலில் ஈடுபட்டு சிபிஐ விசாரணைக்குள் சிக்கியுள்ளனரே அதே பெல்லாரி ரெட்டி சகோதரர்கள்தான்.

கனிம கொள்ளை

கனிம கொள்ளை

ஜனார்த்தனரெட்டி, கருணாகரரெட்டி மற்றும் சோமசேகர ரெட்டி. இம்மூன்று சகோதரர்களின் சுருக்கமான பெயர்தான் ரெட்டி சகோதரர்கள். சொற்ப சம்பளம் வாங்கிய, ஒரு போலீஸ் கான்ஸ்டபிளின் மகன்களான இந்த ரெட்டிகளின் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிகளை தாண்டியது எப்படி என்று யாருக்காவது விடை தெரியுமா? அந்த சொத்துக்கள் அனைத்தும், இயற்கை கனிம வளங்களை சுரண்டி எடுத்ததால் சேர்க்கப்பட்டவை என்பதுதான் உண்மை. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இந்த ரெட்டி சகோதரர்கள், பெல்லாரி மாவட்டத்தையே தங்கள் கோட்டையாக மாற்றி வைத்திருந்தனர்.

பாஜக கோட்டையானது

பாஜக கோட்டையானது

ரெட்டிகளை நம்பிதான் சுஷ்மா களமிறங்கினார். தேர்தல் பிரச்சாரத்தில் அவர் வெறும் கொலு பொம்மைதான். காணிக்கையை வாரி கொடுத்தது இதே ரெட்டிகள். ரெட்டிகளின் பண பலம், படை பலத்துக்கு முன்னாடி, பெல்லாரி காங்கிரஸ் சாம்ராஜ்யம் நிலைகுலைந்து போனது. சுஷ்மாவாலே வெல்ல முடியாத பெல்லாரி தொகுதி அடுத்தடுத்த தேர்தல்களில் பாஜக வசம் வந்தது. மாவட்டம் முழுவதிலுமுள்ள சட்டசபை தொகுதிகளும் பாஜக வசமே. இத்தனைக்கும் மூல காரணம் ரெட்டிகள். ரெட்டிகள் மட்டுமே.

வருஷம்தோறும் பூஜை

வருஷம்தோறும் பூஜை

இதையெல்லாம் அறிந்துதான், ரெட்டிகளுடன் ரொம்பவே நெருக்கம் காட்டினார் சுஷ்மா. வருடா வருடம் வரமகாலட்சுமி பண்டிகைக்கு, ரெட்டிக்கள் வீட்டு விருந்தில் சுஷ்மா தவறாமல் பங்கேற்பார். இத்தனைக்கும், விருந்து சாப்பாடு, கனிம வளத்தை கொள்ளையடித்த பணத்தில் தயாரானது என்பது சுஷ்மாவுக்கும் தெரியும். சுஷ்மாவின் இந்த 'உயர்ந்த உள்ளத்தை' போற்றிதான், ரெட்டிக்கள், அவரை தாய் என்று அழைத்தனர். குரூப்பாக போட்டோக்களை எடுத்தனர். "மகாலட்சுமி பூஜைக்கு வந்து கை நிறைய 'லட்சுமி' பெற்றுச் செல்கிறார் சுஷ்மா" என்று சித்தராமையா விமர்சிப்பது வழக்கம்.

ஆணவத்தில் ஆடினர்

ஆணவத்தில் ஆடினர்

ஆணவம் மனிதனுக்கு அழிவை ஏற்படுத்திவிடும் என்று ரெட்டிகள் அறிந்திருக்கவில்லை. எடியூரப்பா ஆட்சி காலத்தில், தங்களை கேட்காமல் பெல்லாரி கலெக்டரை முதல்வர் எடியூரப்பா, டிரான்ஸ்பர் செய்துவிட்டார் என்ற 'குற்றத்திற்காக' ஆட்சிக்கு எதிராக 50 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ரிசார்ட்டுகளில் தங்கவைத்து கூத்தடித்தனர் ரெட்டிகள். ஆனால், ரெட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக மேலிடத்தை எடியூரப்பா கெஞ்சியபோது முட்டுக்கட்டை போட்டார் சுஷ்மா. காங்கிரஸ் உறுப்பினர்களை சட்டசபைக்குள் வைத்தே, 'பெல்லாரிக்குள் வந்தால் தொலைத்துவிடுவோம்' என்று மிரட்டினர்.

சிபிஐ வழக்கு

சிபிஐ வழக்கு

பேலிகேரி துறைமுகத்தில் அதிகாரிகள் பிடித்து வைத்திருந்த கனிமங்களை, அவர்களுக்கே தெரியாமல் வெளியே கடத்தி வந்தனர் 'பலே' ரெட்டிகள். அன்று முதல் ஆரம்பித்தது ரெட்டிகள் சாம்ராஜ்யத்துக்கு சரிவு. சிபிஐ விசாரணை பாய்ந்தது. தங்கத் தட்டில் சாப்பிட்ட ஒபலாபுரம் மைனிங் ஓனர், ஜனார்த்தனரெட்டி, சிபிஐயால் கைது செய்யப்பட்டு ஹைதராபாத் சிறையில் ஓராண்டுக்கும் மேல் அடைக்கப்பட்டார். ஆனால் சுஷ்மா கில்லாடி. சிபிஐ விசாரணை ஆரம்பித்ததும், பெல்லாரி பக்கம் எட்டிப்பார்ப்பதையே நிறுத்திவிட்டார். இப்போதெல்லாம், ரெட்டிகள் யார் என்று யாராவது சுஷ்மாவிடம் கேட்டால், அது தூத்துக்குடி பக்கம், ஈரோடு பக்கம் இருக்கும் ஒரு ஊர்தானே என்கிறாராம்.

எஸ்கேப்பான தாய்

எஸ்கேப்பான தாய்

"தாயே இப்படி துரோகம் செய்யலாமா.." என்று கதறினர் ரெட்டிகள். கண்டுகொள்ளவில்லை சுஷ்மா. கோபத்தில் கட்சியை விட்டு வெளியேறி, நண்பர் ஸ்ரீராமலு ஆரம்பித்த புதுக்கட்சியில் ஐக்கியமாகினர். ஆனால், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி வந்ததும், ரெட்டிகள் கண்கள் பனித்தன, இதயம் கனத்தது. மீண்டும் பாஜகவில் ஐக்கியமாகினர். ஆனால், அதன்பிறகு இதுவரை எந்த மகாலட்சுமி பூஜைக்கும், சுஷ்மா மட்டும் கர்நாடகா பக்கம் எட்டிப்பார்த்ததாக வரலாறு இல்லை.

ரெட்டி முதல் மோடிவரை

ரெட்டி முதல் மோடிவரை

கனிம குவாரி கொள்ளையர்கள் என்று வர்ணிக்கப்பட்டாலும் தோளோடு தோள் சேர்த்து, தாய்-மகன் உறவு கொண்டாடிய சுஷ்மாதான், தற்போது, ஐபிஎல் முறைகேட்டு அதிபர் லலித் மோடியுடனும் நட்பு பாராட்டி, மனிதாபிமானம் காண்பித்துள்ளார். அன்று ரெட்டிகள் மாட்டும்வரையும், இன்று லலித் மோடி சிக்கும்வரையும், சுஷ்மாவின் நட்பு ஒரு தொடர் கதைபோல தொடர்ந்து கொண்டுதான் இருந்துள்ளது. பணக்காரர்களுக்கு மட்டுமே மனிதாபிமானம் காண்பிக்கும் தாயாக சுஷ்மா தனது வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்டார் போலும்.

English summary
Sushma Swaraj not only extent her support to Lait Modi, but, she was a big supporter of a mining baron family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X