
எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர் : ஜம்மு அருகே ஊடுருவிய தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்திய கொடுத்த பதிலடித் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்முவிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நக்ரோட்டா பகுதியில் ஜம்முவுக்கான பாதுகாப்பு படையின் தலைமையகம் உள்ளது. இங்கு இன்று காலை ஊடுருவிய தீவிரவாதிகள், ராணுவ முகாம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு, கையெறி குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே தற்போது வரை கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. 2 அல்லது 3 தீவிரவாதிகள் அங்கு பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துவதாக கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கிச்சண்டையால் அங்கு பதற்றம் நீடிப்பதால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மூடப்பப்பட்டுள்ளன.
சம்பா செக்டாரில் உள்ள ராம்கார்க் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவில் தீவிரவாதிகள் ஊடுறுவ முயன்றதை ஏற்கனவே இந்திய ராணுவத்தினர் முறியடித்துள்ளனர். இந்நிலையில் இரண்டாவது முறையாக இன்று ஊடுருவிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கடந்த செப்டம்பர் மாதம் உரி பகுதியில் ஊடுருவிய தீவிரவாதிகள் இந்திய ராணுவ வீரர்கள் 19 பேரை சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.