மகிஷி அழுத கண்ணீர் அழுதா நதியாக மாறிய அதிசயம் - சபரிமலை யாத்திரை
சபரிமலை: பெருவழிப்பாதையில் வழியாக சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் தவறாமல் நீராடும் இடம் தான் அழுதா நதி. எரிமேலியில் பேட்டை துள்ளி ஆடிவிட்டு பயணத்தை தொடரும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் பேரூர் தோடு, கோட்டப்படி, காளைகட்டி, அழுதாமலை ஆகியவற்றை கடந்ததும் வருவது தான் அழுதா நதி ஆகும். இந்த நதி எப்படி உருவானது என்பது பற்றி சுவாரஸ்யமான புராண கதை உள்ளது.
அரக்கியான மகிஷியுடன் மணிகண்டன் போரிட்டபோது, இறுதிக்கட்டத்தில் ஒரு குன்றின் மீது ஏறி நின்றாள். அப்போது ஐயப்பன் எய்த அம்பு தன் மீது பட்டதும் தான் தன்னுடைய தவறை உணர்ந்தாள் மகிஷி. உடனடியாக தன்னுடைய தவறை மன்னிக்கும்படி வேண்டி மனம் விட்டு அழுதாள். அவ்வாறு மகிஷி அழுத கண்ணீர் வழிந்தோடி அழுதா நதியாக பெருகி ஒடுகிறது.

அந்த அழுதா நதியில் மூழ்கி நீராடும் கன்னி சாமிகள் அனைவரும் ஒரு கல்லை எடுத்து வரவேண்டும். அந்த கல்லை எடுத்துக்கொண்டு வரும் ஐயப்ப பக்தர்கள், அங்கிருந்து சுமார் 2 கிலோமீட்டத் தூரத்தில் கல் இடும் குன்று என்று ஒரு இடம் வரும். அங்கு ஐயப்ப பக்தர்கள் கொண்டு வந்த கல்லை, அந்த குன்றின் மீது எறிந்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
இந்த கல் இடும் குன்றில் தான் ஐயப்பன் மகிஷியின் உடலை போட்டு கற்களால் மூடினார். அதற்கு பிறகு மற்ற தேவர்கள், முனிவர்கள், பூதகணங்கள் என அனைவரும் ஆளாளுக்கு ஒரு கல்லை அரக்கியின் உடல் மீது போட்டு முழுவதுமாக மூடினார்கள்.
இதன் காரணமாகவே இந்த இடத்தை கல் இடும் குன்று என்று அழைக்கின்றனர்.
சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அழுதா நதியில் மூழ்கி எடுத்த கல்லை இந்த குன்றின் மீது எறிந்து விட்டு தங்கள் பயணத்தை தொடர்வது இன்றைக்கும் தவறாமல் கடைபிடிக்கப்படுகிறது.