நான்காக உடையும் உத்தர பிரதேசம்.. சீக்கிரமே வரப்போகுது மிக பெரிய மாற்றம்! திட்டம் என்ன

Subscribe to Oneindia Tamil

லக்னோ: இந்தியாவின் மிக பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் இருக்கிறது. குறிப்பாக உபியின் மக்கள் தொகை என்பது பல வளர்ந்த நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம். இப்படி மிக பெரிய மாநிலமாக இருப்பதால் நிர்வாக ரீதியாக பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் உத்தர பிரதேசத்தை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக இருக்கிறது. இப்போது அந்த விவகாரம் மீண்டும் வெடித்துள்ளது.

உத்தர பிரதேசத்தை 4 மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை மீண்டும் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. உத்தர பிரதேச அமைச்சர் மற்றும் சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தலைவருமான ஓம் பிரகாஷ் ராஜ்பர், எதிர்காலத்தில் உத்தர பிரதேசம் பூர்வாஞ்சல், மத்தியாஞ்சல், புந்தேல்கண்ட் மற்றும் ஹரித் பிரதேசம் என 4 மாநிலங்களாக பிரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Uttar Pradesh

மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நிறைவடைந்த பிறகு இதற்கான நடவடிக்கை ஏற்படும் என்றும், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் பேசியுள்ளதாகவும் ராஜ்பர் கூறியுள்ளார். எனினும், மத்திய அரசு அல்லது பாஜக சார்பில் உத்தரப் பிரதேசத்தை பிரிக்கும் திட்டம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

என்ன சொன்னார்?

அம்பேத்கர்நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ்பர், "வரும் காலத்தில் உத்தர பிரதேசம் 4 மாநிலங்களாக பிரிக்கப்படும். தனி பூர்வாஞ்சல் மாநிலம் உருவானால், அந்த மாநிலத்தின் முதல் முதலமைச்சர் ராஜ்பர் சமூகத்தை சேர்ந்தவராக இருப்பார்" என்றார். மேலும், தனது சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி அல்லது காங்கிரஸ் பின்னால் சென்று ஏமாற வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ராஜ்பர் சமூகத்தினர் பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்தவர். உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதியான பூர்வாஞ்சலில், குறிப்பாக காஜிபூர், மவு, பலியா, வாரணாசி, சந்தெளலி, ஆசாம்கர் உள்ளிட்ட மாவட்டங்களில் இச்சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். மாநில மக்கள் தொகையில் சுமார் 3 முதல் 4 சதவீதமும், பூர்வாஞ்சல் பகுதியில் சுமார் 17 முதல் 18 சதவீதமும் ராஜ்பர் சமூகத்தினர் இருப்பதாக கூறப்படுகிறது. 2027 உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராஜ்பரின் இந்த கருத்து அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பல ஆண்டு விவாதம்

அதேநேரம் உத்தரப் பிரதேசத்தை பிரிப்பது தொடர்பான விவாதம் புதிதல்ல. 1950களில் இந்தியாவின் மாநில எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டபோதே, மிக பெரிய மாநிலமாக இருந்த உத்தர பிரதேசத்தைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 1955ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் அறிக்கையில், மேற்கு உத்தர பிரதேசத்தை தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. மேற்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்த 16 மாவட்டங்களின் 97 எம்எல்ஏக்கள் ஆரம்பத்தில் இதற்கான மனுவில் கையெழுத்திட்டிருந்தனர். பின்னர் சுமார் 70 பேர் ஆதரவை வாபஸ் பெற்றனர்.

மாநிலம் மிக பெரியதாக இருப்பதால் அரசு நிர்வாகத்தில் பல சிக்கல் இருப்பதாகவும் அதிக வருவாய் ஈட்டும் மேற்கு மாவட்டங்கள் போதிய வளர்ச்சியைப் பெறவில்லை என்றும் மாநிலத்தை பிரிக்க வேண்டும் என்பவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், மறுசீரமைப்பு ஆணையம் உத்தர பிரதேசத்தை ஒரே மாநிலமாகத் தொடர பரிந்துரைத்தது.

ஆதரவு

மேற்கு உத்தர பிரதேசத்தை தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு முன்னாள் பிரதமர் சரண் சிங் ஆதரவாக இருந்தார். அவர் உத்தரப் பிரதேசத்தை 3 மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்ற கருத்தை ஆதரித்தார். பின்னர் அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அஜித் சிங், ஹரித் பிரதேசம் என்ற பெயரில் மேற்கு உத்தர பிரதேசத்துக்குத் தனி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்தார்.

2013ஆம் ஆண்டு தெலுங்கானாவை தனியாக பிரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தபோது, ஹரித் பிரதேசத்துக்கான கோரிக்கையையும் அஜித் சிங் மீண்டும் தீவிரப்படுத்தினார். பூர்வாஞ்சல் மற்றும் புந்தேல்கண்ட் ஆகிய பகுதிகளுக்கும் தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இவர்களை எல்லாம் விட உத்தர பிரதேசத்தை பிரிக்கும் கோரிக்கையை மிகவும் தீவிரமாக முன்னெடுத்தவர் முன்னாள் முதல்வர் மாயாவதி.

மாயாவதி

2007ஆம் ஆண்டு மீண்டும் முதல்வரான பிறகு, உத்தர பிரதேசத்தைப் பிரிப்பது குறித்து அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் கடிதம் எழுதினார். 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கிய போது, அவரது அரசு இந்த கோரிக்கையை அதிகாரப்பூர்வமாக சட்டசபைக்கே கொண்டு வந்தது. 2011 நவம்பர் 21ஆம் தேதி, உத்தர பிரதேசத்தை 4 பகுதிகளாக பிரிக்கும் தீர்மானத்தை மாயாவதி அரசு தாக்கல் செய்தது.

பூர்வாஞ்சல், புந்தேல்கண்ட், அவத் பிரதேசம், பஸ்சிம் பிரதேசம் என நான்கு மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே மாயாவதியின் திட்டம். தீர்மானம் விவாதமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. நமது நாட்டில் உள்ள சட்டப்படி, மாநில சட்டப்பேரவை தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தாலும், அதை மட்டும் வைத்து கொண்டு ஒரு மாநிலத்தை பிரிக்க முடியாது.

முடங்கியது ஏன்

இந்திய அரசியலமைப்பின்படி, புதிய மாநிலத்தை உருவாக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது. மாநிலத்தின் எல்லை, பரப்பளவு அல்லது பெயரில் மாற்றம் செய்யும் மசோதா குடியரசு தலைவரின் பரிந்துரையுடன் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதன்படி மாயாவதி அரசு தீர்மானத்தை டெல்லிக்கு அனுப்பியபோது, மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு விவரங்களை கேட்டது. புதிய மாநிலங்களின் எல்லைகள், தலைநகரங்கள், உத்தர பிரதேசத்தின் கடன் மற்றும் ஓய்வூதியப் பொறுப்புகளை பிரிப்பது, அகில இந்தியப் பணிகளின் அதிகாரிகளைப் பிரிப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விளக்கம் கோரப்பட்டது.

இதற்கு நடுவே உபி சட்டசபை தேர்தல் நடந்தது. அதில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. சமாஜ்வாதி கட்சி 224 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அதன் பிறகு இந்த விவகாரம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இப்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதே கோரிக்கை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

அடுத்து என்ன நடக்கும்

ஆனால், ராஜ்பர் முன்வைத்துள்ள பெயர்கள் மாயாவதியின் திட்டத்திலிருந்து சற்று மாறுபட்டுள்ளன. மாயாவதி முன்மொழிந்த அவத் பிரதேசம், பஸ்சிம் பிரதேசம் என்பதற்குப் பதிலாக, ராஜ்பர் மத்தியாஞ்சல், ஹரித் பிரதேசம் என்ற பெயர்களைப் பயன்படுத்தியுள்ளார். தற்போது ராஜ்பர் முன்வைத்துள்ள கருத்து அதிகாரப்பூர்வ அரசு முடிவாக மாறுமா அல்லது 2027 சட்டசபை தேர்தலோடு இதுவும் கிடப்பில் போடப்படுமா என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+