For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவில் புதிய விதி - என்ன நடக்கிறது அந்த கட்சியில்?: வைகைச்செல்வன் பேட்டி

By BBC News தமிழ்
|

அதிமுகவின் இன்றைய செயற்குழு கூட்டத்தில் புதிய விதி கொண்டு வரப்பட்டு கட்சியை கட்டுப்படுத்தும் இரு பதவிகளுக்கு ஒற்றை வாக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் பின்னணி என்ன என்பது குறித்து் பாஜகவின் அழுத்தத்தில் அதிமுக உள்ளதா என்பது குறித்தும் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வனிடம் பிபிசி தமிழ் நேரலையின்போது கேள்வி எழுப்பப்பட்டது. அந்த நேரலை பேட்டியின் விவரம்:

கே. அ.தி.மு.கவின் இன்றைய செயற்குழு கூட்டத்தில் என்ன நடந்தது?

ப. இன்றைய செயற்குழு கூட்டத்தில் முக்கியமான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. கழகத்தின் பொதுச் செயலாளராக கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேல் ஜெயலலிதா அவர்கள் இருந்தார்கள். அவர் வகித்த பதவியை வேறு யாரும் வகிக்க வேண்டாம் என்பதால், அவரை நிரந்த பொதுச் செயலாளர் என்று அழைத்தோம். ஆகவே கட்சிக்கு புதிதாக தலைமைப் பொறுப்பிற்கென கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் என பதவிகள் உருவாக்கப்பட்டன.

கழக ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே. பழனிச்சாமியும் இருக்கிறார்கள். இப்போது கொண்டு வரப்பட்டிருக்கும் திருத்தத்தின்படி, ஒற்றை ஓட்டின் மூலம் இரு பதவிகளுக்கும் தேர்தல் நடக்கும். அதிமுகவின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது இருவரும் கையெழுத்திட்டால்தான் அந்த வேட்புமனு செல்லும். இதற்கான தீர்மானம்தான் கொண்டு வரப்பட்டது. அதை நான்தான் வாசித்தேன்.

கே. முந்தைய விதிகளின்படி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பாளரையும் இணை ஒருங்கிணைப்பாளரையும் தேர்வு செய்யலாம் என இருந்தது. அதை மாற்றியிருக்கிறீர்களே... ஏன்?

ப. எம்.ஜி.ஆர். காலத்தில் கட்சி துவங்கப்பட்டபோது அடிப்படை உறுப்பினரால்தான் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது விதியாக இருந்தது. ஜெயலலிதாவும் அதே விதியைத்தான் பின்பற்றினார். ஆகவேதான், ஒருங்கிணைப்பாளரையும் இணை ஒருங்கிணைப்பாளரையும் நேரடியாக கட்சியின் உறுப்பினர்கள் கொண்டுவருவார்கள் என்று கொண்டு வந்திருக்கிறோம்.

கே. ஒரு வாக்கில் தேர்ந்தெடுப்பது என்று தீர்மானத்தில் குறிப்பிடுகிறீர்கள். அப்படி என்றால் என்ன?

ப. இரண்டு பதவிகள் இருக்கின்றன. இரண்டுக்கும் ஒரு வாக்குச்சீட்டில் தலைவர்களைத் தேர்வு செய்யும் முறை இது. இப்போது இதனை செயற்குழுவில் நிறைவேற்றியிருக்கிறோம். பொதுக் குழுவில் விரைவில் நிறைவேற்றுவோம். அதன் பிறகு இது நடைமுறைக்கு வரும்.

https://twitter.com/AIADMKOfficial/status/1465928158436233220

கே. சில காலத்திற்கு முன்பாக வழிகாட்டும் குழு ஒன்றை அமைத்தீர்கள். அவர்கள் இனி என்ன செய்வார்கள்?

ப. வழிகாட்டும் குழு குறித்து பேச்சு ஏதும் எழவில்லை. அடுத்தடுத்த காலகட்டங்களில் தலைவர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதன் படி செயல்படுவோம்.

https://www.facebook.com/BBCnewsTamil/videos/200989972119587

கே. அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டிருக்கிறார். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னணியில் இதைப் பார்க்கும்போது, ஒரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நீக்கப்பட்டதற்காக அதே சமூகத்தைச் சேர்ந்த வேறு ஒருவருக்கு பதவி கொடுக்கப்பட்டிருக்கிறதா?

ப. தமிழ் மகன் உசேன் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து இந்த இயக்கத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக, எந்த நிலையிலும் தடம் மாறாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரை தற்காலிக அவைத் தலைவராக தேர்வு செய்திருக்கிறோம்.

கழகத்தின் செயற்குழுவும் பொதுக் குழுவும் அவைத் தலைவர் தலைமையில்தான் கூட்டப்பட வேண்டுமென்பது விதி. ஏற்கனவே அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் இறந்துவிட்ட நிலையில், ஒருவர் அவைத் தலைவராக இருந்து செயற்குழுவை நடத்த வேண்டுமென்பதால் தமிழ் மகன் உசேன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

கே. இந்த செயற்குழு கூட்டத்திற்கு முன்பாக நடந்த மாவட்டச் செயற்குழு கூட்டத்தில் பரபரப்பான சம்பவங்கள் நடந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. அப்படி என்ன நடந்தது?

ப. கட்சியின் உள் கூட்டத்தில் நடந்ததை வெளிப்படையாகச் சொல்ல முடியாது. ஆனால், இது தொடர்பாக சில கருத்துகளைச் சொல்கிறேன். ஜனநாயகத்திற்கு கருத்து மோதல்கள் அவசியம். கருத்து மோதல்கள் இருந்தால்தான் புதிய கருத்துகள் பிறக்கும். புதிய கருத்துகளைச் சொல்லும்போது புதிய சிந்தனைகள் வெளிவரும்.

அன்வர் ராஜா நீக்குவதற்கான காரணத்தைக் கேட்டால், அவர் தொடர்ந்து கட்சி குறித்தான அவதூறுகளை பரப்புவது, கட்சி யாரைச் சேர்க்க வேண்டாமென தீர்மானம் போடுகிறதோ, அதைப் பற்றி பொது வெளியில் பேசுவது, கட்சிக்குள் நடப்பதை பொது வெளியில் சொல்வது போன்றவை அடாத செயல்கள். செய்தித் தொடர்பாளர்கள் யாரும் ஊடகங்களைச் சந்திக்க வேண்டாம், தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ள வேண்டாம், பொது வெளியில் பேச வேண்டாம் என தடைசெய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கட்சியின் செய்தித் தொடர்பாளராக இல்லாத ஒருவர் தொடர்ந்து பேசுகிறார், அதன் மூலம் கட்சிக்கு குந்தகம் விளைவிக்கிறார், கட்சியின் கட்டுப்பாட்டை மீறிக் கொண்டிருக்கிறார் என்ற நிலையில் அவர் நீக்கப்பட்டிருக்கிறார்.

வைகைச்செல்வன்
BBC
வைகைச்செல்வன்

கே. கடந்த மாவட்டச் செயற்குழு கூட்டத்தில் வி.கே. சசிகலா குறித்து பேசப்பட்டதுதான் பிரச்னைக்குக் காரணமா?

ப. அவரைப் பற்றிப் பேசவோ, விவாதிக்கவோ இல்லை. அதைப் பற்றி எந்தப் பிரச்சனையும் இல்லை.

கே. அதிமுகவுக்கு இது ஒரு சவாலான காலகட்டம் என்று சொல்லலாமா?

ப. நிச்சயமாக சவாலான காலகட்டம்தான். வெற்றியாளர்களைக் காலம் எவ்வாறு தீர்மானிக்கிறது? தொடர்ந்து வெற்றிபெறுபவர்களை அல்ல. தோல்வியடைந்த நிலையிலும் மீண்டெழுபவர்களையே காலம் வெற்றியாளர்கள் என தீர்மானிக்கிறது. அதிமுக ஏழு முறை ஆட்சியைப் பிடித்த இயக்கம். 1989இல் கட்சி இரண்டாக பிளவுபட்டபோது, கட்சி முடிந்துவிட்டது என்றார்கள். ஆனால், 1991இல் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்தது. 1996இல் கட்சி பெரும் தோல்வியடைந்தது. அப்போதும் கட்சி இனி எழுந்திருக்காது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், 1998இல் இந்தியாவின் பிரதமரைத் தீர்மானிக்கும் அளவுக்கு உயர்ந்தது அ.தி.மு.க.

வீழ்ந்து, மீண்டும் வெற்றி பெறும்போதுதான் அந்த இயக்கத்தை மக்கள் ஏற்பார்கள். அப்படியான நிலைக்கு இந்த இயக்கத்தை இந்த இரு தலைவர்களும் கொண்டுசெல்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

கே. இந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.கவின் நிழல் அதிமுகவின் மீது அழுத்தமாக விழுந்திருப்பதாக பார்க்கப்படுகிறது. பிரதான எதிர்கட்சியைப்போல செயல்பட விரும்புகிறது பாஜக. இந்த நிலையில், அதிமுக என்ன செய்யப்போகிறது?

ப. சட்டமன்றத்தில் நாங்கள்தான் பிரதான எதிர்க்கட்சி. அதிகாரபூர்வமான எதிர்க்கட்சி. பா.ஜ.க. வளர்வதற்கு முயற்சிக்கிறது. எல்லாக் கட்சிகளும் அதைத்தான் செய்யும். ஆனால், தமிழக மக்கள் ஏற்பார்களா இல்லையா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும். கடந்த ஆறு மாத காலத்தில் தி.மு.க. பல தோல்விகளை சந்தித்திருக்கிறது. இந்த நிலையில், அ.தி.மு.க. நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு வீறு கொண்டு எழும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Vaigai selvan says about Tamilmagan hussain elected aiadmk interim chairman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X